×

பொங்கல் கொண்டாட மக்கள் சொந்த ஊர் பயணம்

* சிறப்பு பேருந்துகள் இயக்கம் துவங்கியது
* தொடர் விடுமுறையால் கூட்ட ெநரிசல்

சென்னை: பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் நேற்று இரவு முதல் சொந்த ஊருக்கு புறப்பட்டுச்செல்ல துங்கினர். இதனால் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்பட்டது. மக்களின் வசதிக்காக அரசு சார்பில் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கியுள்ளனர். இங்கிருந்து படிப்பு, வணிகம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஒவ்ெவாரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவார்கள். அந்தவகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சொந்த ஊருக்கு செல்வோரின் வசதிக்காக தமிழக அரசு இன்று முதல் வரும் 19ம் தேதி வரை விடுமுறையாக அறிவித்துள்ளது. இதனால், நேற்று இரவு முதல் பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்ல துவங்கினர்.

இவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் நேற்று முதல் 14.1.2020 வரையிலான 5 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் 30,120 பேருந்துகள் இயக்கப்படுகிறது.  குறிப்பாக, சென்னையிலிருந்து 16,075 பேருந்துகளும்,  பல்வேறு முக்கிய இடங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 14,045 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலையம், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூந்தமல்லி நகராட்சி பேருந்து நிலையம் மற்றும் கே.கே.நகர் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம் ஆகிய 5 இடங்களிலிருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோல், திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது. மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்து இசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். தாம்பரம் சானடோரியம் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூருக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.

தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. எம்ஜிஆர் பேருந்து நிலையம், கோயம்பேட்டிலிருந்து மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை,  தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர்,  திருப்பூர், ஈரோடு,  ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூர்) செல்லும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

வழித்தட மாற்றம்  முன்பதிவு செய்த பேருந்துகள் எம்ஜிஆர் பேருந்து நிலையம்  கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நசரத்பேட்டை, அவுட்டர் ரிங்ரோடு வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் முன்பதிவு சிறப்பு மையங்கள் கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலையம் -15; தாம்பரம் சானடோரியம்-1; பூந்தமல்லி பேருந்து நிலையம்-1 என மொத்தம் 17 இடங்களில் செயல்படும். மேலும் பொங்கல்  பண்டிகை முடிந்து ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 9,370 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பொங்கலுக்கு பின்பு சேலம், மதுரை, திருச்சி, தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலிருந்து திருப்பூர் மற்றும் கோயம்புத்தூருக்கு சிறப்பு பேருந்துகள் முறையே 1,200 மற்றும் 1,525 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு பின்பு சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கரூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலிருந்து பெங்களூருக்கு 376 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

பயணிகள், நடைமுறையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக இணையதள வசதியான www.tnstc.in உடன் www.redbus.in, www.paytm.com, www.busindia.com, www.mackemytrip.com மற்றும் www.goibibo.com போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, எம்டிசி சார்பில் 310 இணைப்பு பேருந்துகள் 24 மணி நேரமும் இயங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இந்நிலையில் நேற்று ஒரேநேரத்தில் ஏராளமான பயணிகள் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆம்னி பஸ்களில் கட்டணம் உயர்வு


பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக சில ஆம்னி பஸ்களில் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னை-திருச்சிக்கு ரூ.1400 வரையிலும், சென்னை-மதுரைக்கு ரூ.1,900 வரையிலும், சென்னை-நெல்லைக்கு ரூ.2,200 வரையிலும், சென்னை-கோவைக்கு ரூ.1,500 வரையிலும் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏராளமான புகார்கள் சென்றதையடுத்து, போக்குவரத்துத்துறை சார்பில் பிரத்தியேகமாக குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.


Tags : Pongal ,home , People travel home , celebrate Pongal
× RELATED குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா