×

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு மேலும் தடை பிப்.24ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. ஆனால் இந்த ஆணையத்தின் விசாரணை மாறுபட்ட கோணத்தில் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.  குறிப்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் நேரில் ஆஜராகவில்லை. இதனால் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக பல தரப்பிலும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஆறுமுகசாமி விசாரணை நீதிமன்றத்துக்கு எதிராக அப்போலோ மருத்துவமனை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனுவை பரிசீலனை செய்த சென்னை உயர் நீதிமன்றம் முகாந்திரம் இல்லை எனக்கூறி அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக அப்போலோ மருத்துவமனை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிமன்றம்,”ஆணையத்தின் விசாரணை தொடர்பான அறிக்கையை பதில் மனுவாக நான்கு வாரத்தில் நீதிமன்றத்தில் மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை ஆறுமுகசாமி ஆணையத்தின் மீதான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை என்பது தொடரும் என கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அனிருத்தா போஸ் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிராக அப்போலோ மருத்துவமனை தரப்பில் தொடரப்பட்ட வழக்கை பிப்ரவரி 24ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும். அதுவரை ஆணையத்தின் மீதான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தடை என்பது தொடரும் என நேற்று உத்தரவிட்டனர். இதில் மேற்கண்ட வழக்கில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தவிர அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிந்து விட்டதாக ஆறுமுகசாமி ஆணையத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Jayalalithaa ,commission ,death , Jayalalithaa, death, arumugasamy inquiry commission
× RELATED மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள...