×

ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு: ரங்கா, ரங்கா கோஷம் முழங்க பக்தர்கள் குவிந்தனர்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா, ரங்கா என விண்ணதிரும் கோஷத்துடன் சொர்க்கவாசலை கடந்து வந்தனர்.108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதுமானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 26ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதன்பின் பகல்பத்து உற்சவம் கடந்த 27ம் தேதி துவங்கியது. அதன் நிறைவு நாளான நேற்றுமுன்தினம் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலை 3.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு திருஆபரணங்கள் அணிந்து புறப்பட்டார்.

அதன்பின் ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்கக் கொடி மரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் சென்றார். அதிகாலை 4.44 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அங்கு காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் நம்பெருமாள் சொர்க்கவாசலை கடந்தார். அப்போது பக்தர்கள் விண்ணதிரும்படி ரங்கா, ரங்கா கோஷத்துடன் சொர்க்கவாசலை கடந்தனர். கலெக்டர் சிவராசு, திருநாவுக்கரசர் எம்.பி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பின்னர் நம்பெருமாள் சந்திரபுஷ்கரிணி குளம் அருகே அமைக்கப்பட்டுள்ள பூந்தட்டிகள், ஆலிநாடான் திருச்சுற்றில் உள்ள மணல்வெளி வழியே அகளங்கன் திருச்சுற்றில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்திற்கு எதிரே  திருக்கொட்டகையில் காலை 5 மணிக்கு எழுந்தருளினார். பின்னர் திருமாமணி மண்டபத்திற்கு காலை 7.15 மணிக்கு சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.  இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நள்ளிரவு 12.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

Tags : Srirangam: Ranga ,Ranga ,Srirangam ,pilgrims , Devotees of Srirangam, Paragavasal, Ranga, Ranga slogan
× RELATED அம்மன் தரிசனம்: சமயபுரம் மாரியம்மன்