×

பொதுப்பணித்துறை, மாநகராட்சி அலட்சியத்தால் கழிவுநீர் குட்டையாக மாறும் ஆதம்பாக்கம் ஏரி

ஆலந்தூர்: பொதுப்பணித்துறை, மாநகராட்சி அலட்சியத்தால் ஆதம்பாக்கம் ஏரி கழிவுநீர் குட்டையாக மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். சென்னை மாநகராட்சி, 12வது மண்டலத்துக்கு உட்பட்ட   ஆதம்பாக்கம் மேடவாக்கம் சாலையை ஒட்டி ஆதம்பாக்கம் ஏரி அமைந்துள்ளது. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி சுற்றுப்பகுதி மக்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குகிறது. இதனை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால்,  ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி  தற்போது  குட்டைபோல் சுருங்கி காணப்படுகிறது. எனவே, இதனை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, தூர்வாரி பராமரிக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த ஏரியை தூர்வாரும் பணி  நடந்தது. அந்த பணியும் முறையாக நடைபெறாமல், இங்கொன்றும் அங்கொன்றுமாக பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு மண் அள்ளப்பட்டது. இதனால், ஏரி  பல்லாங்குழி போல காணப்பட்டது. மேலும், ஏரிக்கரையில் நடைபதை அமைப்பதாக கூறி ஒரு பகுதி மேடாக்கப்பட்டது. இந்த பணியும் முழுமையாக நடைபெறவில்லை.

இதேபோல், மழைக்காலங்களில் சாலையில் வழிந்தோடும் நீரை, ஏரியில் சேமிக்கும் வகையில் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. மேற்கண்ட பணிகள் அனைத்தும்  நாடாளுமன்ற தேர்தலை காரணம்காட்டி பாதியில்  நிறுத்தப்பட்டது. தேர்தல் முடிந்த பிறகு இந்த பணிகள் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு  ஏமாற்றமே மிஞ்சியது. சமீபத்தில்  பெய்த மழையால் ஏரி நிரம்பி காணப்படுகிறது. ஆனால், தூர்வாரும் பணியை முறையாக மேற்கொள்ளாததால், ஏரி முழுவதும் ஆகாயத் தாமரை படர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், ஏரியில் மழைநீர் சேமிக்கும் வகையில் அமைக்கப்பட்ட குழாய்கள் வழியாக கழிவுநீர் விடப்படுவதால், ஏரி கழிவுநீர் குட்டையாக மாறி வருகிறது. இதனை தடுக்க பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,  ‘‘ஆதம்பாக்கம் ஏரி கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆதம்பாக்கம், தில்லைகங்கா நகர், நங்கநல்லூர் பகுதி மக்களின் நீராதாரமாக உள்ளது. ஆக்கிரமிப்பு காரணமாக சுருங்கி வரும் ஏரி, நாளடைவில் முற்றிலும் மறைந்து போகும் அவலம் உள்ளது.  
ஏரியை ஆக்கிரமித்துள்ளவர்கள் இதனை பட்டா எனக்கூறி சர்வே எண்ணை மாற்றி பத்திரப்பதிவு செய்து வருகின்றனர். இதற்கு அதிகாரிகளே உடந்தையாக இருப்பது வேதனையாக உள்ளது. வேலியே பயிரை மேய்ந்த கதை போல உள்ளது. தற்போது மிச்சமுள்ள ஏரியிலும் கழிவுநீர் விடப்படுவதால், நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஏரியை சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும்,’’  என்றார்.

Tags : Lake Adambakkam ,corporation ,Adambakkam ,sewage pond , Adambakkam,sewage pond ,negligence, Public Works
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...