×

இன்று சர்வதேச வேட்டி தினம்: ஜனவரி 6

இன்று சர்வதேச வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. ஒருவர் அணிந்துள்ள ஆடையைக் கொண்டே அவரது குணம், ரசனை, பொருளாதார வசதி உள்ளிட்டவற்றை மதிப்பிட்டு விடலாம். அந்தவகையில் தமிழர்களின் பாரம்பரிய உடை வேட்டி ஆகும். ஆனால் இன்றைய இளம் தலைமுறையிடையே வேட்டி கட்டும் ஆர்வம் குறைந்து வருகிறது. எனவே தான் உலக பாரம்பரியங்களை பாதுகாக்கும் யுனெஸ்கோ நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜனவரி 6ம் தேதி சர்வதேச வேட்டி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது வேட்டிக்கு கிடைத்த உலக அங்கீகாரம் எனலாம். வேட்டிக்கு என்று ஒரு வரலாறு உண்டு. பொதுவாக தமிழக மக்கள் வெண்ணிற வேட்டியை மட்டுமே உடுத்தி வருகின்றனர். முகமதியர்கள் வந்த பிறகே இது வண்ண நிறமாக மாறியது. இதை கைலி, லுங்கி அல்லது சாரம் என்று அழைக்கின்றனர். வெண்ணிற வேட்டி தமிழர்களின் பாரம்பரிய உடையாகும்.

சம்ஸ்கிருத மொழியில் தவுத்தா எனவும் தோத்தி என ஒரியாவிலும், தோத்தியு என குஜராத்தியிலும், சூரியா என அசாமிய மொழியிலும், தூட்டி என வங்காள மொழியிலும், தோத்தி அல்லது கச்சே பான்ச்சே என கன்னட மொழியிலும்,‌ தோத்தர், அங்கோஸ்தர், ஆத்-செஸ்ச்சே அல்லது புத்வே என கொன்கனி மொழியிலும், முந்த்து என மலையாளத்திலும், தோத்தி அல்லது பன்ச்சா என தெலுங்கிலும், தோத்தர் என மராத்தியிலும், லாச்சா என பஞ்சாபி மொழியிலும் மற்றும் மர்தானி என உத்திரப் பிரதேசம், பீகார், டெராய் பகுதிகளிலும், தமிழில் வேட்டி என்றும் அழைக்கப்படுகிறது.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அனைவரும் அணியும் ஒரு சாதாரண உடையாக வேட்டி இருந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி இலங்கை, வங்காளதேசம் மற்றும் மாலத்தீவுகளிலும் வேட்டி பயன்பாட்டில் உள்ளது. முக்கிய விழாக்களின் போது, பாரம்பரிய உடையான வேட்டியை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அரசியல்வாதிகள், முக்கிய புள்ளிகள், சமுதாய மற்றும் பண்பாட்டு ஆர்வலர்கள் வேட்டியை அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் வேட்டி அணிவதை ஒரு பாரம்பரிய வழக்கமாக தென்னிந்தியாவில் உள்ள பெரும்பாலானோர் கடைபிடித்து வருகின்றனர். வேட்டியை மடித்து கட்டிவிட்டு முழங்கால் தெரியுமாறு நடப்பது தவறாகக் கருதப்படுகிறது. இவ்வாறு வேட்டியினை மடித்து கட்டியிருக்கும் போது பெண்களிடம் பேசுவது இழிவாக கருதப்படுகிறது. பெரும்பாலும், வேட்டியை வெளி இடங்களில் மடித்து கட்டும் வழக்கம் இல்லை. இவை அனைத்தும் வேட்டி குறித்து எழுதப்படாத சட்டமாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பெரும்பாலும் வெண்ணிறத்தில் வேட்டி இருக்கும். வெளுப்பான் கொண்டு வெளிறச்செய்யாது வெளிர்மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் வேட்டிகள் கோடி வேட்டி அல்லது புதிய வேட்டி எனப்படும். இவை திருமணங்கள் போன்ற விசேசங்களில் பயன்படுத்தப்படும். சில குறிப்பிட்ட நோன்பு சமயங்களில் நீலம், கருப்பு, சிகப்பு அல்லது காவி நிறங்களில் வேட்டி உடுத்துவர். திருமணத்தின் போது பெரும்பாலும் பட்டு வேட்டி பயன்படுத்தப்படும்.பண்டைய காலத்தில் வாழ்ந்த அரசர்களும் புலவர்களும் தங்களுடைய வேட்டிகளில் தங்கத்திலான ஜரிகைகள் வைத்திருந்தனர். பருத்தி வேட்டிகள் அன்றாடம் பயன்படுத்த ஏதுவாக இருக்கும். பட்டு வேட்டிகள் முக்கிய நிகழ்வுகளில் மட்டுமே பயன்படுத்தப்படும். அதன் விலையும் அதிகமாகவே இருக்கும்.

வேட்டிகளின் அளவை வைத்தும் அதனுடைய வகையை நிர்ணயம் செய்வது உண்டு. நான்கு முழம் வேட்டி, எட்டு முழம் வேட்டி, கரை வேட்டி போன்றவை அதனுடைய வகைகளாகும். எட்டு முழ வேட்டியை அந்தணர்கள் போன்ற சிலர் ஐந்து கச்சம் வைத்துக் கட்டுவர். இது பஞ்சக்கச்சம் எனப்படுகிறது. அரசயல்வாதிகள் தங்கள் வேட்டி கரைகள் தங்கள் கட்சியின் வண்ணத்தை ஒட்டி இருக்குமாறு அணிவது வழக்கம். வேட்டி அணியும் போது, அதனுடன் துண்டு அணியும் வழக்கமும் உண்டு. தமிழ் திருமணங்களில் மணமகன் தன்னுடைய தோளில் இத்துண்டினை அணிந்திருப்பார். கோவில் பணிகளில் ஈடுபடுவோர் வேட்டி அணிந்திருப்பர். வேளாண் மக்களும் வேட்டியுடன் துண்டினை பயன்படுத்துவர். துண்டினை வேலை செய்யும் போது தலையிலும், உட்காரும்போதும் நடக்கும்போதும் தோளிலும், கோவில்களில் வழிபாடு செய்யும் போது இடுப்பிலும் கட்டியிருப்பர். ஆப்ரிக்காவிலும் வேட்டி அணியப்படுகிறது. பெரும்பாலும் சோமாலியர்கள் மற்றும் அபார் இனத்தவரால் அணியப்படும் வேட்டிக்கு மகாவிசு என்று பெயரிட்டுள்ளனர்.

Tags : International Hunting Day , Today, International Hunting Day, January, 6th
× RELATED பெண் அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு...