×

அறநிலையத்துறை கோயில்களில் இ-சேவை வசதி மூலம் 5 கோடி வசூல்: அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 44 ஆயிரத்து 120 கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் அடக்கம். இக்கோயில்களுக்கு சென்னை மட்டுமின்றி தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். இவ்வாறு, நீண்ட தூரத்தில் இருக்கும் பக்தர்கள் கோயிலுக்கு நன்கொடை, அன்னதானம் உள்ளிட்டவற்றுக்கு நேரடியாக வந்து தான் பணத்தை கொடுக்க வேண்டியிருந்தது.  மேலும், அபிஷேகம், தரிசன முன்பதிவு, தங்க ரதம், தங்க தொட்டில் ஆகிய சேவைக்கு நேரில் வந்து முன்பதிவு செய்ய வேண்டியுள்ளது. அவ்வாறு வந்து முன்பதிவு செய்தால் கூட அந்த நாட்களில் முன்பதிவு இல்லை என்று கூறி திருப்பி  அனுப்பி விடுகின்றனர். இதனால், அவர்கள் வேண்டுதலை நிறைவேற்ற முடியாமல் திரும்பி செல்லும் நிலை ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பக்தர்களின் வசதிக்காக  இ-சேவையை திட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில், வடபழனி முருகன் கோயில், திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், சின்ன காஞ்சிபுரம் தியாகராஜசுவாமி கோயில் ஆகிய 6 கோயில்களில் இ-சேவைகள் வசதி தொடங்கப்பட்டது.  இதனை பயன்படுத்தி உலகின் எந்த பகுதியில் இருந்தும் இணையதளம் மூலம் பதிவு செய்ய முடியும்.  இதை பயன்படுத்தி, பக்தர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்த படியே ஆன்லைன் மூலம் நன்கொடை, தரிசனம், அன்னதானம் உள்ளிட்டவற்றுக்கு முன்பதிவு செய்து பயன்பெற்றனர். இதன் அடிப்படையில், கடந்த ஓராண்டில் இ-நன்கொடை, அன்னதானம், தரிசனம் போன்ற இ-சேவைகளில் ₹5 கோடியே 21 லட்சத்து 9 ஆயிரத்து 272 வசூலாகியுள்ளது.

இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இ-சேவைகள் பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவு ஆர்வத்துடன் நன்கொடை, அன்னதானத்துக்கு பணம் அளித்து வருகின்றனர். அதன்படி, அபிஷேகம், தங்க ரதம், தங்க தொட்டில் சேவைக்கு 2 கோடியே 60 லட்சத்து 14 ஆயிரத்து 628, இ-நன்கொடைக்கு 3 கோடியே 49 லட்சத்து 8 ஆயிரத்து 828, அன்னதானத்துக்கு ₹80 ஆயிரத்து 16 அளித்துள்ளனர். சின்ன காஞ்சிபுரம் கோயிலுக்கு மட்டும் தரிசனத்துக்கு 2கோடியே 25 லட்சத்து 15 ஆயிரத்து 800 என மொத்தம் 5 கோடியே 21 லட்சத்து 9 ஆயிரத்து 272 வசூலாகியுள்ளது. மேலும், 100 முக்கிய கோயில்களில் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : temples , Temples, e-service, 5 crores, official information
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு