×

தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கான அண்ணா பல்கலை. அறிவிப்புக்கு தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் மணிக்கணக்கில் சம்பளம் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய கூடுதல் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதற்கு தடை கோரி ஜி.அருட்பெரும்ஜோதி என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். “ஏற்கனவே 518 தற்காலிக ஆசிரியர்கள், கவுரவ ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் பணியாற்றி வருகிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் எத்தனை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன, எத்தனை பணியிடங்கள் தேவை ஆகியவற்றை கண்டறியாமல் புதிதாக தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கும் முரணானது. பல்கலைக்கழகத்திற்கு தேவையான நிரந்தர உதவி பேராசிரியர்களை நியமிக்காமல் தொடர்ந்து இதுபோன்று கவுரவ, தற்காலிக ஆசிரியர்களை அவர்கள் பணி செய்யும் நேரத்திற்கு ஏற்ப சம்பளம் என்ற அடிப்படையில் நியமனம் செய்வதும் விதிமுறைகளுக்கு முரணானது.

உதவி பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் என்ற 3 பிரிவு ஆசிரியர்கள் மட்டும் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் விதிகளில் கூறப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் 10 சதவீத நிரந்தர ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள் தற்காலிகமாகவே நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.  ஏற்கனவே, உள்ள 518 ஆசிரியர்களை நிரந்தரம் செய்யாமல் தொடர்ந்து தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது சட்ட விதிகளுக்கு எதிரானது. எனவே, அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். அந்த அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.இந்த மனு விடுமுறைகால நீதிமன்றத்தில் நீதிபதி வி.பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

Tags : Anna University ,Icort , Temporary Teacher Appointment, Anna University. To declare, prohibit, icord, order
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...