×

எட்டயபுரம் அருகே கொடூரம்: ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த 6 வயது சிறுவன் கடத்திக் கொலை... போலீசை கண்டித்து தூத்துக்குடி - மதுரை சாலையில் 3 மணி நேரம் மறியல்

எட்டயபுரம்: எட்டயபுரம் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் கடத்திக் கொல்லப்பட்டான். ஓரினச் சேர்க்கைக்கு மறுத்ததால் அவன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறுவன் உடலை கண்டுபிடிப்பதில் போலீசார் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி கிராம மக்கள் 3 மணி நேரம் சாலைமறியலில் ஈடுபட்டனர். எட்டயபுரம் அருகே உள்ள வடக்கு முத்துலாபுரம் வயல் தெருவைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி. இவர்களின் மகன் நகுலன் (6). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால், அங்குள்ள கூட்டுறவு கடன் சங்கம் அருகே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். நேற்று முன்தினம் மதியம் 2 மணி முதல் சிறுவன் நகுலனை திடீரென காணவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து எட்டயபுரம் போலீசில் புகார் செய்தனர். அன்றிரவு இதே ஊரைச் சேர்ந்த அருள்ராஜ் (28) என்பவர், சிறுவனை கடத்திச் சென்றிருக்கலாம் என போலீசாருக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அருள்ராஜை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, சிறுவன் நகுலனை அடித்துக் கொன்றதாக அருள்ராஜ் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சிறுவன் உடலை எங்கே என கேட்டபோது இடத்தை காட்டாமல் போலீசாருக்கு போக்கு காட்டி வந்தான். வடக்கு முத்துலாபுரம் அருகே காட்டுப்பகுதி முழுவதும் எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் கலா, தனிப்பிரிவு எஸ்ஐ சேகர், போலீஸ்காரர் கார்த்திக் உள்ளிட்ட போலீசார் தேடியும் காலை வரை சிறுவன் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்,

உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கொலையாளி வாக்குமூலம் கொடுத்தும் ஒரு நாள் முழுவதும் சிறுவன் உடலை கண்டுபிடிக்காமல் போலீசார் அலட்சியம் காட்டுவதாக கூறி நேற்று காலை 8 மணிக்கு மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எம்.கோட்டூர் விலக்கில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி ஆர்டிஓ விஜயா, தூத்துக்குடி ஏடிஎஸ்பி குமார், எட்டயபுரம் தாசில்தார் அழகர், விளாத்திகுளம் டிஎஸ்பி உமர்மைதீன் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதிகாரிகளின் சமரசத்தை ஏற்காத மக்கள், சிறுவன் உடலை கண்டுபிடிக்கும் வரை மறியலை கைவிட மாட்டோம் என தெரிவித்தனர். இதனால் சுமார் 2 மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஏடிஎஸ்பி குமார், ஒரு மணி நேரத்தில் சிறுவன் உடலை கண்டுபிடித்து தருவதாக உறுதியளித்ததை அடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டனர். இதையடுத்து அரை மணி நேரத்தில் நகுலன் உடல் கிடைத்து விட்டதாகவும், பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாகவும் போலீசார் தெரிவித்தனர்.இதனைக்கேட்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார், இரவே சிறுவன் உடலை கண்டுபிடித்து விட்டு தங்களிடம் மறைத்ததாகவும், குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர். ேமலும் சிறுவன் உடலை மறியல் செய்யும் இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி மீண்டும் 10.30 மணியளவில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.  

இதையடுத்து சுமார் 1 மணி நேரம் கழித்து சிறுவன் உடலை கொண்டு வந்த போலீசார் மறியலை கைவிட்டு சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள ஆம்புலன்சில் உள்ள சிறுவன் உடலை பார்க்குமாறு கூறினர். ஆனால் கிராம மக்கள் சிறுவன் உடலை தேசிய நெடுஞ்சாலையின் மத்திய பகுதிக்கு கொண்டு வர வேண்டும். அதுவரை மறியலை கைவிட மாட்டோம் என கூறியதையடுத்து பின்னர் போலீசார் கொண்டு வந்தனர். சிறுவன் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சிறுவன் கொலை சம்பவம், அதைத் தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் நடந்த சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடல், பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்றிரவே உடல்கூறு பரிசோதனை முடிந்து சிறுவன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அடுத்தடுத்து நடந்த சாலை மறியல் போராட்டங்களால் மதுரை - தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

‘அடித்துக் கொன்று காட்டில் வீசினேன்’
போலீஸ் விசாரணையின்போது சிறுவனை கொலை செய்த அருள்ராஜ், விளையாடிக் கொண்டிருந்த சிறுவனிடம் அவன் அப்பாவை எங்கே என்று கேட்டதற்கு நகுலன் எடக்கு மடக்காக பதில் கூறியதால் கொலை செய்தேன் என்று ஆரம்பத்தில் கூறியுள்ளான். பின்னர் போலீசாரின் கவனிப்பு விசாரணைக்கு பிறகு சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாகவும், அவன் மறுத்ததால் தூக்கிச் சென்று அடித்துக் கொன்று ஊருக்கு கிழக்கு பக்கமுள்ள சோளக்காட்டில் போட்டதாகவும் தெரிவித்துள்ளான். 6 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரம் அப்பகுதியில் தீராத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போக்சோவில் கைது
அருள்ராஜ் மீது ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வடக்கு முத்துலாபுரத்தை சேர்ந்த மூதாட்டி கொலை வழக்கு உள்ளது. இந்த வழக்கில் கைதாகி தற்போது திருச்சியில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு வருகிறார். தற்போது ஊருக்கு வந்த இவர், சிறுவனை கொலை செய்துள்ளார். அவரை எட்டயபுரம் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


Tags : Etayapuram ,kidnapping murder , Etayapuram, homosexuality, kidnapping and murder
× RELATED தலைக்காட்டுபுரத்தில் குடிநீர்...