×

மாவட்ட நீதிபதிகள் தேர்வில் பிசி, எம்பிசி, சீர்மரபினர் பிரிவுக்கு வயது வரம்பு சலுகை மறுப்பை எதிர்த்து வழக்கு: அரசு, ஐகோர்ட் பதிவாளர் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மாவட்ட நீதிபதிகள் தேர்வுக்கு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கு வயது வரம்பு சலுகை மறுக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசும், உயர் நீதிமன்ற பதிவுத்துறையும் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக இருந்த 31 மாவட்ட நீதிபதிகள் பதவிகளுக்கு நேரடி தேர்வு நடத்துவது தொடர்பாக 2019 ஜனவரி மாதம் சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவிப்பாணை வெளியிட்டது.
அந்த அறிவிப்பில், தேர்வுக்கு விண்ணப்பிக்க பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு அதிகபட்ச வயது வரம்பாக 48 வயது நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்களை  எடுக்காததால், எவரும் தேர்வு செய்யப்படவில்லை. இதையடுத்து, 32 மாவட்ட நீதிபதிகள் பதவிகளை (ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒரு பதவியையும் சேர்த்து) நேரடி தேர்வு மூலம் நிரப்புவது தொடர்பாக, 2019 டிசம்பர் 12ம் தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கான வயது வரம்பு சலுகை 48லிருந்து 45 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் காசிபாண்டியன், உதயகுமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.தமிழக நீதித்துறை பணிகள் விதியில், வயது வரம்பு சலுகை வழங்க தடை ஏதும் விதிக்காத நிலையில், இச்சலுகையை மறுத்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை செல்லாது என்று அறிவித்து அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று மனுக்களில் கோரப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் வி.அருண், கிருஷ்ணராஜா ஆகியோர் ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு ஜனவரி 6ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கும், உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கும் உத்தரவிட்டனர்.

Tags : Govt ,MPC , case of District Judges' Examination, denial of the age limit privilege, case against
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...