×

‘பாஸ்டேக்’ பின்பற்றும் வாகன ஓட்டிகளிடம் சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் குளறுபடி? : வணிக வாகனங்களை இயக்குவோர் குற்றச்சாட்டு

சென்னை: ‘பாஸ் டேக்’ முறையை பின்பற்றும் வாகன ஓட்டிகளிடம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் போது, குளறுபடி ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏராளமான சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றை கடந்து செல்வதற்கு வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில், தானியங்கி சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை (பாஸ் டேக்) அமல்படுத்த திட்டமிடப்பட்டது. இந்தமுறையை பயன்படுத்துவோர் எந்த இடத்திலும், தங்களது வாகனத்தை நிறுத்தி கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இதற்காக சுங்கச்சாவடிகளில் பிரத்தியேகமாக ‘பாஸ்டேக்’ வழி உருவாக்கப்பட்டுள்ளது. இதில், செல்வதற்கு ‘பாஸ்டேக்’ கார்டை பயன்படுத்த வேண்டும். பிறகு வங்கியின் மூலமாக முன்னரே பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். அதை வாகனத்தின் கண்ணாடியில் பொருத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு ரிசார்ஜ் செய்யப்பட்ட கார், எந்த சுங்கச்சாவடியில் நுழைந்தாலும், அங்கு பொருத்தப்பட்டிருக்கும் இயந்திரம், கண் இமைக்கும் ெநாடியில் காரின் வருகையை கண்டறிந்து பதிவு செய்து விடும்.

முன்னரே ரீசார்ஜ் செய்து வைத்திருந்த பணத்தில் இருந்து, அந்த சுங்கச்சாவடியை பயன்படுத்தியதற்கான கட்டணம் கழிக்கப்பட்டு விடும். தடுப்பு கம்பியும் தானாகவே திறந்து கொள்ளும். ஆனால் இந்த திட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் குறுகிய நாட்களே மீதம் இருக்கிறது. எனவே சம்மந்தப்பட்ட முறையை பெரும்பாலான வாகன ஓட்டிகள், தற்போதே பின்பற்ற துவங்கி விட்டனர். ஆனால், அவர்கள் சுங்கச்சாவடிகளை பயன்படுத்தும் போது, அதற்கான கட்டணத்தை வசூல் செய்வதில் குளறுபடி ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் வணிகரீதியிலான வாகனங்களை இயக்குவோர் பெருமளவில் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனம், சுங்கச்சாவடிகளில் நுழையும் போது வங்கிக்கணக்கில் இருந்து தானாகவே பணம் எடுக்கப்பட்டு விடும் என்பது விதிமுறை. ஆனால் தற்ேபாது பெரும்பாலான இடங்களில் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனம், சுங்கச்சாவடிக்கு சென்றதும் தானாக பணம் எடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதைக்காரணம் காட்டும் சுங்கச்சாவடி ஊழியர்கள் வாகன ஓட்டிகளில் ரொக்கமாக, கட்டணத்தை செலுத்தச்சொல்கின்றனர். அதன்படி செலுத்தி விட்டு சிறிது தூரம் சென்றதும், வங்கிக்கணக்கில் இருந்தும் சுங்கச்சாவடியை பயன்படுத்தியதற்கான தொகை கழிக்கப்படுகிறது.

இந்த குளறுபடியால் வாகனஓட்டிகள் இரண்டுமுறை பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.  இதுகுறித்து கேட்க வேண்டும் என்றால் சுங்கச்சாவடிக்கு திரும்பி வரவேண்டும். அங்கு வந்தாலும் சரியாக பதிலளிப்பதில்லை. மேலும் கால விரயம் ஏற்படுகிறது. இரவு நேரம் என்றால் இன்னும் நிலைமை மோசம். இதனால் வாகனஓட்டிகள் பாதிப்படைந்து வருகின்றனர். குறிப்பாக வணிக ரீதியிலான வாகனங்களை இயக்குவோர், அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய வாகனங்களை இயக்குவோரில் பெரும்பாலானோர் பணியாளர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் இரண்டுமுறை கட்டணம் செலுத்தியது குறித்து உரிமையாளரிடம் தெரிவிக்கும்போது, பிரச்னை ஏற்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Drivers ,Motorists , Motorists, pastaque number ,trouble collecting customs duties? :
× RELATED இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 படகு ஓட்டுநர்கள் விடுதலை