×

வீகே புதூர் அருகே சகதி காடாக மாறிய கோவிந்தப்பேரி சாலை: பள்ளி மாணவர்கள் அவதி

சுரண்டை: வீரகேரளம் புதூரிலிலிருந்து கோவிந்தப்பேரி செல்லும் சாலையை உடனடியாக அமைக்க வேண்டும் என கோவிந்தப்பேரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீரகேரளம்புதூரிலிருந்து சுமார் ஒரு கிமீ தூரத்தில் உள்ளது கோவிந்தபேரி. இந்த கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள்  கல்வி, மருத்துவம், விவசாயம் மற்றும் அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும்  வீ.கே.புதுருக்கு வந்து செல்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மானூர் கால்வாய் வழியாக மெட்டல் ரோடு அமைக்கப்பட்டது. 30 வருடங்களுக்கு மேல் ஆனதால் சாலை பெயர்ந்து சேறும் சகதியுமாக மாறியதால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், இருசக்கர வாகனத்தில் செல்லும் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

 இந்நிலையில் புதிய தார்சாலை அமைத்து தரக்கோரி இப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து வீ.கே.புதூர் முதல் துத்திகுளம் வரை சுமார் 4 கிமீ தூரத்திற்கு மானூர் கால்வாய் ஓரத்தில் சாலை அமைக்க நெடுஞ்சாலை துறையினரால் கடந்த ஆண்டு ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து துத்திகுளத்திலிருந்து கோவிந்தப்பேரி வரை சுமார் 3 கிமீ தூரம் வரை தடுப்பு சுவர், பாலம் மற்றும் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவிந்தபேரியிலிருந்து வீகேபுதூர் வரை உள்ள சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சாலை வருவதாக கூறி தனியார் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. இதனால் கோவிந்தப்பேரியிலிருந்து வீரகேரளம்புதூர் வருவதற்கு வழி இல்லாமல் கோவிந்தப்பேரி மக்கள் சிரமப்படுகின்றனர்.

 இது குறித்து பல பலமுறை நெஞ்சாலைத்துறை, மாவட்ட கலெக்டர் மற்றும் பல்வேறு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்த பலனும் இல்லை. அதிகாரிகள் பல விதங்களில் முயற்சி செய்தும் சாலை அமைப்பதற்கான பணி நிறைவு பெறவில்லை. இந்நிலையில் கோவிந்தபேரியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்  துத்திகுளத்தை சேர்ந்த செல்லத்துரை பாண்டியன் உட்பட பலர் வீகே புதூர் தாசில்தார் ஹரிஹரனிடம் உடனடியாக சாலை அமைக்க ஆவன செய்யுமாறு கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில் கோவிந்தப்பேரி மற்றும் துத்திகுளத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் விவசாயிகளின் நலன் கருதி மானூர் கால்வாயின் கரையில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags : Govindperi Road ,Veeka Budur , Veeke Budur, Govindperi Road
× RELATED வீகே புதூர் அருகே சகதி காடாக மாறிய கோவிந்தப்பேரி சாலை