×

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக நாளை ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழா: நாடு முழுவதும் 30 தலைவர்களுக்கு அழைப்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முதல்வராக நாளை ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ள நிலையில், நாடு முழுவதும் 30 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன்  கூட்டணி வைத்து ஜே.எம்.எம் கட்சி வெற்றி பெற்றது. சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 81 உறுப்பினர்களில் 47 இடங்களை ேமற்கண்ட கூட்டணி வென்றது. ஜே.எம்.எம் 30 இடங்களையும், காங்கிரஸ்  16 இடங்களையும், ஆர்.ஜே.டி முறையே 1 இடங்களையும் வென்றன. ஜார்க்கண்ட் முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் ராஜ்பவனில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 22ம் தேதியன்று, ஜார்கண்டில் உள்ள ராஜ் பவனில் ஆளுநர் துருபதி முர்முவை ஹேமந்த் சோரன் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது, தனக்கு  50  எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதற்கான கடிதத்தை அவரிடம் சமர்ப்பித்தார். அதையடுத்து, நாளை (டிச. 29) பிற்பகல் 2 மணிக்கு முதல்வராக நியமிக்கப்பட்ட ஹேமந்த்  சோரனுக்கு பதவிப் பிரமாணத்தை ஆளுநர் துருபதி முர்மு செய்து வைப்பார். இவ்விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அதிகளவில் கலந்து கொள்ள உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவருமான சோனியா காந்தி உட்பட 30 தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, என்.சி.பி தலைவர் சரத்பவார், முன்னாள் நிதியமைச்சர் பி.சிதம்பரம்,

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ்வாதி தலைவர் மாயாவதி, திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, சந்திரபாபு நாயுடு, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்கின்றனர். பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக சோனியாகாந்தியை ஹேமந்த் சோரன் புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்று, விழாவிற்கு அழைப்பு விடுத்தார். அதனால், சோனியா காந்தி இந்த விழாவில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டாலும், அழைப்பு விடுக்கப்பட்ட பிரமுகர்களின் பட்டியலில் சோனியாவின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Hemant Soren ,chief minister ,Jharkhand , Jharkhand CM, Hemant Soren, sworn in
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் வழக்கு மே 6-க்கு ஒத்திவைப்பு..!!