×

உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டி வைக்கும் இடங்களை சிசிடிவி மூலம் கண்காணிக்க வழக்கு: ஐகோர்ட்டில் திமுக கூட்டணி கட்சிகள் தாக்கல்

சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் வைக்கப்படும் இடங்களை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க கோரி திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் நேற்று முதல் கட்ட தேர்தல் நடந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 2ம் தேதி எண்ணப்பட உள்ளன. தேர்தலில் ஆளுங்கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் தெரிவித்தும், மாநில தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்தமனுவில், முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்து ஐந்து நாட்களுக்கு பிறகே, வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதுவரை வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதும், நேர்மையாக, நியாயமாக வாக்கு எண்ணிக்கை நடத்துவதும் மாநில தேர்தல் ஆணையத்தின் கடமை. ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என நான்கு பதவிகளுக்கான வாக்குகளும் ஒரே பெட்டியில் போடப்படுகிறது. அவற்றை தனித்தனியாக பிரித்து எண்ணும் போது, முறைகேடுகள் நடக்காதபடி, உள்ளாட்சி தேர்தல் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு  உரிய பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும். அனைத்து நடைமுறைகளையும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்க உத்தரவிட வேண்டும். வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதேபோல், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் வைக்கப்படும் இடங்களை கேமரா மூலம் கண்காணிக்க கோரி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில்,  முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்து ஐந்து நாட்களுக்கு பிறகே, வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், அதுவரை, வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வைக்கவும், உள்ளாட்சி தேர்தல் விதிகளை கண்டிப்புடன் தேர்தல் ஆணையம் பின்பற்றவும், அனைத்து நடைமுறைகளையும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் வைக்கப்படும் இடங்களை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க கோரி மதிமுக சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் நன்மாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழக்கறிஞரணி மாநில செயலாளர் பார்வேந்தன் ஆகியோரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளில் மாநில தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணைய செயலாளர், தமிழக டிஜிபி ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளன.

சேலம் கிழக்கு மாவட்ட  திமுக வழக்கு
சென்னை உயர் நீதிமன்றத்தில், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் வீரபாண்டி ராஜா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் கட்ட தேர்தல் நடந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் 4110 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 27 லட்சத்து 95,549 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தேர்தலில் வாக்குப்பதிவின்போதும், வாக்கு எண்ணிக்கையின்போதும்  ஆளுங்கட்சியினர் முறைகேடுகள் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. முதல்கட்ட வாக்குப்பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே 5 நாட்கள் இருப்பதால் பல்வேறு முறைகேடுகள் நடக்கலாம்.

எனவே, வாக்குப்பதிவு நடைபெறுவதையும், அந்த வாக்குச்சீட்டுகளை வாக்கு எண்ணும் இடங்களுக்கு கொண்டு செல்வதையும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும். தேர்தல் நேர்மையாக நடைபெறவும், வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடைபெறுவதையும் உறுதி செய்ய சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்குமாறும், வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் மையத்தில் மின்தடை இல்லாமல் இருக்க இன்வெட்டர் கருவி பொருத்துமாறும் தேர்தல் ஆணையத்திற்கும், மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.


Tags : polling places ,government ,coalition parties ,DMK ,ICT Local Elections ,DMK Alliance Parties , Local Elections, Ballotting Points, CCTV, Monitoring Case, Icord, DMK Alliance Parties, Filing
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...