×

களக்காடு அருகே இழப்பீடு தராததால் விரக்தி சுகாதார நிலையத்துக்கு தீ வைத்த பெண்: ஜன்னல்களை அடித்து நொறுக்கி ரகளை

களக்காடு: அரசு இழப்பீடு தராததால் களக்காடு அருகே சிங்கிகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தீ வைத்த பெண், ஜன்னல்களை நொறுக்கி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தில் கடந்த 1990ம் ஆண்டு களக்காடு யூனியன் சார்பில் கிராம மருந்தகம் தொடங்கப்பட்டது. பின்னர் 1998ம் ஆண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டது. இந்த மருத்துவமனை அருகே பாப்பா (60) என்பவர் டீக்கடை நடத்தி வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சுகாதார நிலையத்தில்  விரிவாக்கப் பணிக்காக டீக்கடையை சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இதற்காக  இழப்பீடு வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான இழப்பீடு 5 ஆண்டுகளாகியும் பாப்பாவிற்கு வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்து வந்தார். இருப்பினும் இழப்பீடு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று காலை சுகாதார நிலையம் வழக்கம்போல் செயல்பட்டு கொண்டிருந்தது. அப்போது திடீரென பாப்பா நுழைந்து ரகளையில் ஈடுபட்டார். மருத்துவமனையின் 10க்கும் மேற்பட்ட ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய அவர், அங்கிருந்த பொருட்களுக்கும் கட்டில்களுக்கும் தீ வைத்தார். இதனால் அங்கிருந்த புறநோயாளிகள் பதிவேடு, கர்ப்பிணி பெண்கள் பதிவேடு, 2 மேஜை, 4 கட்டில்கள் தீயில் கருகி சேதமானது. இதனை பார்த்த ஊழியர்களும், பொதுமக்களும் ஓடி வந்து  தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தகவல் அறிந்ததும் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் கலையரசி, சிங்கிகுளம் மருத்துவ அதிகாரி (பொறுப்பு) கவிதா மற்றும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். பின்னர், சம்பவம் குறித்து களக்காடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : health center ,Kalakkad ,sanatorium , woman , who set fire , sanatorium, she was not , compensated
× RELATED பந்தலூர் அருகே கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு