×

கிண்டி சிறுவர் பூங்காவில் ஆக்மெண்டேட் ரியாலிட்டி காட்சிக்கு இனி கட்டணம்: அரசாணை வெளியீடு

சென்னை: கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் ஆகுமென்டேஷன் ரியாலிட்டி காட்சிக்கு சிறுவர்களுக்கு 15 ரூபாயும், பெரியவர்களுக்கு 50 ரூபாயும் கட்டணமாக நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில், ஆகுமெண்டேஷன் ரியாலிட்டி எனப்படும் புனை மெய்யாக்க முறையில், விலங்குகளுடன் பார்வையாளர்களும் சேர்ந்து விளையாடும் புதிய காட்சி கடந்த அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது. ஆகுமெண்டேஷன் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ள திரையரங்கில் உள் நுழைந்ததும், அங்கிருக்கும் பிரத்யேக கேமரா பார்வையாளர்களை படம் பிடித்து விலங்குகளுடன் பார்வையாளர்களையும் நிறுத்தும்.

அப்போது, பார்வையாளர்கள் விலங்குகளை தொட்டு பார்த்து, அதன் அசைவுகளுக்கு ஏற்ப அசைந்து விளையாட முடியும். அங்கு, புலி, சிம்பன்சி, கங்காரு, பெங்குயின், ஒட்டக சிவிங்கி, வெள்ளை பாண்டா கரடி, டால்பின், சிறுத்தை, டைனோசர், அனகோண்டா ஆகிய பத்து விலங்குகளுடன் பார்வையாளர்களும் விளையாடி மகிழலாம்.

இந்நிலையில், இதன் பராமரிப்பு பணிகளுக்காக இன்று முதல் கட்டணம் நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 1 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 15 ரூபாயும், 14 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு 50 ரூபாயும் இன்று முதல் கட்டணமாக வசூலிக்கப்படும். பூங்காவிற்குள் செல்வதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் தவிர்த்து, இந்த காட்சியை பார்க்க விரும்புவோர் இந்த கட்டணம் செலுத்தி இதை பார்வையிடலாம். காலை 11 மணி, மதியம் 12, 1, 3, 4, 5 மணி என நாள்தோறும் 6 காட்சிகள் நடைபெறும்.

Tags : Kindi Children's Park: Govt , Kindy, Children's Park, Augmented Reality, Scene, Fee, Government Release
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...