×

குடியுரிமை சட்டத்திருத்தத்தில் இஸ்லாமியர்களை ஏன் இணைக்கவில்லை?... மேற்குவங்க பாஜக துணைத் தலைவர் கேள்வி

குடியுரிமை திருத்தச் சட்டம் எந்தவொரு மதத்துடன் தொடர்புடையது இல்லை என்றால் இஸ்லாமியர்களை ஏன் இணைக்கவில்லை என மேற்குவங்க பாஜக துணைத் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்  நடைபெற்று வருகிறது. பா.ஜ.க அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என மாணவர்கள், அரசியல் கட்சியினர் நடத்திவரும் போராட்டம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பல இடங்களில் போலீசார் தடியடியில் ஈடுபட்ட நிகழ்வும் அரங்கேறியது. சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன.

இதனிடையே குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என பாஜக தொடர்ச்சியாக அதன் வாதத்தை முன்வைத்து வருகிறது. இதனிடையே பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், குடியுரிமை சட்டம் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல; எதிர்கட்சிகள் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்வதாக கூறுகின்றன. இந்நிலையில், மேற்குவங்க பா.ஜ.கவின் துணைத் தலைவரான சந்திர குமார் போஸ் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; குடியுரிமை திருத்தச் சட்டம் எந்தவொரு மதத்துடன் தொடர்புடையது இல்லை என்றால்,

ஏன் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் என பிரித்துப் பார்த்து கூறவேண்டும். அவர்களை போன்று இஸ்லாமியர்களை ஏன் இணைக்கவில்லை. எல்லாம் வெளிப்படையானதாகவே இருக்கட்டும். எல்லா மத, இன மக்களும் சம அளவில் நடத்தப்படும் மதசார்பற்ற நாடான இந்தியாவை மற்ற வேறு எந்த ஒரு நாடோடும் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது எனவும் கூறியுள்ளார். சொந்த கட்சியில் இருந்தே குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ள பா.ஜ.க துணைத்தலைவரின் ட்விட்டர் பதிவு, பா.ஜ.க., வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சசியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Muslims ,Vice President ,Islamist ,West Bengal BJP , Vice President of Citizenship Amendment, Islamist and West Bengal BJP
× RELATED டெபாசிட் இழந்த பாஜ துணை தலைவர்கள்