×

நிலக்கோட்டை அருகே வீணான குடிநீரை கண்டு வேதனை

வத்தலக்குண்டு : நிலக்கோட்டை அருகே கோவில்பட்டியில் வைகை கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் பழுதால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது. இதனை கண்டு மக்கள் வேதனையடைந்தனர். நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வைகை ஆற்றிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் சிறுநாயக்கன்பட்டி, பிள்ளையார்நத்தம், எத்திலோடு வழியாக மாலையகவுண்டன்பட்டி, பள்ளபட்டி, கொடைரோடு, அம்மையநாயக்கனூர் பேரூராட்சி என 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

நிலக்கோட்டை அருகே கோவில்பட்டி பகுதி சாலை ஓரத்தில் வைகை கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்கிறது. நேற்று கோவில்பட்டி பகுதி செல்லும் குழாயில் பழுது ஏற்பட்டு பல மணிநேரம் தண்ணீர் வீணாக சென்றது. ஏற்கனவே நிலக்கோட்டை பகுதியில் போதிய மழையின்றி விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக கிடக்கின்றன. மேலும் சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாட்டால் விலை கொடுத்து வாங்கும் அவலம் உள்ளது. இந்நிலையில் பல லட்சம் லிட்டர் குடிநீர் யாருக்கும் பயன்படாமல் மண்ணோடு, மண்ணாக கலந்து சகதியானது அப்பகுதி மக்களை வேதனையடைய செய்தது.

எனவே குழாய் பழுமை உடனே சரிசெய்வதுடன், மீண்டும் இதுபோல் நிலை ஏற்படாத வகையில் அதிகாரிகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுபற்றி சமூகஆர்வலர் ஜோசப்கோவில்பிள்ளை கூறுகையில், ‘அரசு அதிகாரிகள் பலர் தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு என்ன செய்வது பற்றியே சிந்தித்து கொண்டிருக்கின்றனர். அலுவலகத்தில் அமர்ந்து செல்போனில் பொழுது போக்குவதை விட்டு விட்டு இனியாவது குடிநீர் விநியோகத்தில் மிக கவனமாக செயல்பட வேண்டும்’ என்றார்.

Tags : Nilakottai ,Nilakkottai Drinking Water , Nilakkottai ,Drinking Water,waste,People ,
× RELATED நிலமோசடி வழக்கில் சார்பதிவாளர் கைது