தாம்பரம்: திருவஞ்சேரி பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தாம்பரம் அடுத்த திருவஞ்சேரி ஊராட்சி பகுதியில் அகரம் தென் பிரதான சாலையில் 3000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும், இப்பகுதியில் அரசு பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனை, பேருந்து நிறுத்தம், ஏற்றுமதி நிறுவனம், கடைகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
தாம்பரம், சேலையூர் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து பொன்மார், மப்பேடு, அகரம், மதுரைப்பாக்கம், வெங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் அகரம்தென் பிரதான சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர். இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் திருவஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தினசரி குப்பை, கழிவுகளை சேகரிக்கும் துப்புரவு ஊழியர்கள், அதனை கொண்டு வந்து அகரம்தென் சாலையோரத்தில் கொட்டுகின்றனர். இதனால் சாலையோரம் சுமார் 500 அடி தூரத்திற்கு குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இவை காற்றில் சிதறி சாலையில் பரவுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்கின்றனர். இந்த குப்பை கழிவுகளை துப்புரவு ஊழியர்கள் அடிக்கடி தீயிட்டு எரிப்பதால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால் அகரம் தென் பிரதான சாலையில் செல்லும் வாகனஓட்டிகள், பொதுமக்கள், குடியிருப்பு வீடுகளில் உள்ளவர்கள் என அனைவரும் கண் எரிச்சல், மூச்சு திணறலால் அவதிப்படுகின்றனர். மேலும், இந்த குப்பை, கழிவுகளை நாய், பன்றி, மாடுகள் கிளறுகின்றன. இதில் அவைகளுக்குள் மோதல் ஏற்பட்டு சாலைக்கு ஓடிவந்து சண்டையிடுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அவலம் உள்ளது. மழைக்காலங்களில் இந்த குப்பையுடன் தண்ணீர் கலந்து துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாவதால், அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து ஊராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் சாலையோரமாக கொட்டப்பட்டுள்ள குப்பைக்கழிவுகளை உடனடியாக அகற்றவும், அங்கு மீண்டும் குப்பை கொட்டாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.