×

தூர்வாரும் பணிகள் நிறைவடைந்ததும் கோட்டை அகழியில் விரைவில் படகு சவாரி

வேலூர்: வேலூர் கோட்டை அகழியில் தூர்வாரும் பணிகள் நிறைவுற்றதும் விரைவில் படகு சவாரி விடப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.  நாடுமுழுவதும் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஸ்மார்ட் பஸ் நிலையம், கோட்டையை அழகுபடுத்துதல், ஸ்மார்ட் சாலை, பாதாள சாக்கடை திட்டம் உட்பட 72 திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதில் வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டை அழகுபடுத்த ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியில் அகழி தூர்வாருதல், வண்ண விளக்குகள் பொருத்துதல், கோட்டை பின்புறம் லேசர் அரங்கம் அமைத்தல், திறந்தவெளி திரையரங்கம், உணவகம், பொழுதுபோக்கு அம்சங்கள், நடைபாதை உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதில் அகழி தூர்வாரும் பணிகள் சுமார் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இந்த பணிகள் முடிவுற்ற பின்னர், கோட்டையின் அழகை கண்டுகளிக்கும் விதமாக படகுசாவரி விடப்பட உள்ளது. இதற்காக தொல்லியல் துறையிடம் உரிய அனுமதி பெறப்படும். மேலும் பெரியார் பூங்கா பகுதியில் உள்ள அகழியில் குறுக்கே தரைமட்ட தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது.  அதனை அகற்றினால் தான் கோட்டையை முழுவதுமாக ஒரு சுற்று வரமுடியும், எனவே அதனை அகற்ற தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைக்காவிட்டால், தடுப்புசுவரின் ஒருபகுதியில் இருந்து சுற்றுலாப்பயணிகளை அழைத்துச்சென்று அகழியை சுற்றிக்காண்பித்து, பின்னர் மறு பகுதிக்கு வந்து படகு நிறுத்தப்படும். படகுசவாரி செல்பவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும். தூர்வாரும் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளதால், விரைவில் படகுசவாரி விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

Tags : Sightseeing mission, castle, boat ride
× RELATED நடப்பு பருவத்திற்கு தேவையான உரம்...