×

எளிய மக்களின் தலைவனாக... இன்று கக்கன் நினைவு நாள்

பொதுவாழ்வில் தூய்மையும், நேர்மையும், செயல்திறனும் கொண்டு அரசுப்பணியை மக்கள் பணியாக நேர்த்தியாக செய்தவர் கக்கன். இன்று அவரது நினைவு நாள். மதுரை மாவட்டம், தும்பைப்பட்டியில் பிறந்தவர் கக்கன். இவரின் தந்தை பூசாரி கக்கன். தனது தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்ற கக்கன், பின் திருமங்கலம் அரசு மாணவர் விடுதியில் தங்கி பிகேஎன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வியை கற்றார். அமைச்சரானதும் மதுரை மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் ஓராசிரியர் பள்ளியை நிறுவ முதல் உத்தரவை பிறப்பித்தார். அவர் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் தான் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை விவசாயக்கல்லூரியும் உருவானது. இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக 1952ம் ஆண்டு முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார். காமராசர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்கும் பொருட்டு தான் வகித்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவர் பதவியை விட்டு விலகிய போது, கக்கன் அந்தப் பதவியை ஏற்றார்.

1957ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று மதராஸ் மகாணத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றது. கக்கன் பொதுப்பணித்துறை, ஆதிதிராவிடர் நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகியத் துறைகளின் அமைச்சராக 1957ம் ஆண்டு ஏப்.13ம் தேதி  பொறுப்பேற்று கொண்டார். 1963ம் ஆண்டு வரை விவசாயத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். 1962ம் ஆண்டு முதல் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். 1963ம் ஆண்டு மாநில உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று 1967ம் ஆண்டு வரை அப்பொறுப்பிலிருந்தார்.

கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார்.

விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தனியாமங்கலத்தில் அவருக்கு தரப்பட்ட நிலத்தை வினோபாவின் பூமிதான இயக்கத்துக்கு தந்துவிட்ட அவர் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சாமானிய மக்களுடன் ஒருவராகப் பேருந்தில் பயணித்தார்.
மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றார். அவரை சிறப்பு வார்டுக்கு எம்ஜிஆர் மாற்ற உத்தரவிட்ட போதும், எல்லோருக்குமான சிகிச்சை பிரிவே எனக்கு போதும் என்று மறுத்த கக்கன், 1981ம் ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலக் குறைவால் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நினைவு திரும்பாமலேயே 1981ம் ஆண்டு டிச.23ம் தேதி உயிரிழந்தார்.

Tags : Kakan Memorial Day , Kakkan
× RELATED கடையநல்லூரில் கக்கன் நினைவு தினம்