×

விருதுநகரில் சாயக்கழிவுகள் கலந்து கழிவுநீர் ஆறாக மாறும் கவுசிகா ஆறு

விருதுநகர்: விருதுநகரில் சாயக்கழிவுகள் கலந்து கழிவுநீர் ஆறாக கவுசிகா ஆறு மாறி வருகிறது. இதனால், விவசாயம் மற்றும் மீன்வளர்ப்பு தொழில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் காட்டாற்று பகுதிகளில் பெய்யும் மழைநீர் வடமலைக்குறிச்சி கண்மாய் வழியாக, கவுசிகா ஆறாக உருவாகி விருதுநகர் வழியாக ஓடுகிறது. இந்த ஆற்றில் குல்லுர்சந்தையில் அணை உள்ளது. இந்த அணை நிறைந்து கோல்வார்பட்டி அணைக்கு தண்ணீர் செல்கிறது. குல்லூர்சந்தை, கோல்வார்பட்டி அணைகளை நம்பி 20 ஆயிரம் ஏக்கருக்கு மேலான விவசாய நிலங்களும், அணைகளில் மீன்வளர்ப்பும் நடைபெறுகிறது. விருதுநகர் வரை மழைநீராக வரும் கவுசிகாவில் விருதுநகர் நகராட்சி, வடமலைக்குறிச்சி, பாவாலி, கூரைக்குண்டு, ரோசல்பட்டி ஊராட்சிகளில் உள்ள 50 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளின் ஒட்டுமொத்த கழிவுநீர் கலப்பால் சாக்கடையாக ஓடுகிறது.

விருதுநகர் நகராட்சியின் பாதாளச்சாக்கடை திட்டம் 13 ஆண்டுகளாக நிறைவடையாமல் அரைகுறையாக இருப்பதால் நகராட்சி சாக்கடை கலப்பு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், விருதுநகர் சாத்தூர் ரோடு பாலம் அருகில் உள்ள மில்களில் இருந்து சாயக்கழிவுகள் அதிக அளவில் கவுசிகா ஆற்றில் விடப்படுகின்றன. கவுசிகாவில் சாயக்கழிவுகள் கலப்பதை பொதுப்பணித்துறை அதிகாரிகளும், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளும் கண்டும் காணாதது போல் இருக்கின்றனர். இதற்காக சம்பந்தப்பட்ட ஆலைகளில் இருந்து மாதாந்திர கவனிப்புகள் தொடர்கிறதோ என்ற சந்தேகம் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட கலெக்டர் தலையிட்டு கவுசிகாவில் சாக்கடை கலப்பு  மற்றும் சாயக்கழிவுகள் கலப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கவுசிகா ஆற்றை தூர்வாரி தடுப்பணைகள் கட்ட வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Kausika River ,sewage river ,city ,Virudhunagar ,kaucika River , kaucika River
× RELATED தென்காசியில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்