×

சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டிடம் கட்டிய விவகாரம்: விதிமீறல் இருப்பின் நடவடிக்கை எடுத்து 1 மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: தண்டையார்பேட்டையில் சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டிடம் கட்டும் விவகாரம் தொடர்பாக, சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து ஆய்வு செய்து, விதிமீறல் இருப்பின் நடவடிக்கை எடுத்து, ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த மீனவர் நலச்சங்க தலைவர் தியாகராஜன், சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் கட்டுமான நிறுவனம், தண்டையார்பேட்டையில் 27 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருகிறது. சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் இந்த கட்டிடம் கட்டப்படுகிறது. எனவே, இந்த கட்டிடம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால்தாஸ் குப்தா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் மகேஸ்வரன், கடற்கரையில் இருந்து 80 மீட்டர் தூரத்தில் இந்த கட்டிடம் கட்டப்படுவதால் பருவமழை காலங்களில் வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது, என்றார். மனுவை விசாரித்த தீர்ப்பாயம், சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து மனுதாரர் குறிப்பிடும் கட்டிடம் மற்றும் இடத்தை ஆய்வு செய்ய வேண்டும். ஏதேனும் விதிமீறல் இருப்பது தெரியவந்தால் ஒரு மாதத்துக்குள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதொடர்பான அறிக்கையை தீர்ப்பாயத்தில் ஜனவரி 16ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags : building ,Green Tribunal Directive , Environment, without permission, building, affairs
× RELATED தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்...