திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் கடந்த 10 நாட்களுக்கு பிறகு இணையதள சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சர்பானந்த சோனாவால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அசாம் மாநிலத்தில் ஒவ்வொரு மனிதரின் உரிமையும் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார். பின்னர், அசாம் மாநிலம் முழுவதும் தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டுவிட்டதாகவும், அசாம் மாநில மக்களின் உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். மேலும் அசாம் மாநில மக்களின் கலாச்சாரம், மொழி மற்றும் உரிமைகளுக்கு எந்த பாதிப்பும் வராது என முதல்வர் சர்பானந்த சோனாவால் குறிப்பிட்டார். குடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாமில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 10 நாட்களாக அங்கு இணையதள சேவை முடக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று இணையதள சேவை மீண்டும் உயிர்பிக்கப்பட்டுள்ளது. நடப்பு நாடாளுமன்ற தொடரில், மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கடந்த 9ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, மாநிலங்களவையில் கடந்த 11ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக அசாமில் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு மக்களின் போராட்டம் வன்முறையாக உருவெடுத்து வந்தது.
இதையடுத்து கவுகாத்தி உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும் இணையதள சேவை கடந்த 9ம் தேதி முதல் துண்டிக்கப்பட்டது. அங்கு வன்முறை தொடர்ந்து நடைபெற்றதால் இணையதள சேவை முடக்கத்தை மீண்டும் மீண்டும் மத்திய அரசு நீடித்து வந்தது. இந்நிலையில் அசாம் மாநிலம் முழுவதும் தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டுவிட்டதாக அம்மாநில முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 10 நாட்களுக்கு பிறகு இணையதள சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.