×

சோதனையில் சிக்கிய ஆவணம் அடிப்படையில் கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான 907 ஏக்கர் நிலம் முடக்கம்: வருமான வரித்துறை அதிரடி

சென்னை: கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான 907 ஏக்கர் நிலத்தை முடக்கி  வருமான வரித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திரா மாநிலம் வரதய்யபாளையத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் கல்கி ஆசிரமம் இயங்கி வருகிறது. ஆசிரமம் அமைப்பதற்கு முன்பு விஜயகுமார் எல்ஐசி ஏஜென்டாக இருந்தார். ஆனால் 1989ம் ஆண்டு, `நான் விஷ்ணுவின் அவதாரம். என் பெயர் கல்கி பகவான்’’ என தனக்குத்தானே கூறிக் கொண்டார். விஜயகுமார் குறுகிய காலத்தில் உலகளவில் பிரபலமடைந்தார். வசதி வந்த உடன் ஆந்திர மாநிலம் வரதய்யாபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு கல்கி ஆசிரமத்தை நிறுவினார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை தொடங்கி நடத்தி வருகிறார்.
அதன் பிறகு தான் ஆந்திரா மாநிலம் வரதய்யபாளையத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமாக கல்கி ஆசிரமம் கட்டி தற்போது பக்தர்களுக்கு சந்தித்து வருகிறார்.  கல்கி பகவானின் மாய வித்தையால் பல ஆயிரம் வெளிநாட்டு பக்தர்களை தன் வயப்படுத்தினார். அவர்களும் கோடிக்கணக்கில் நிதி வழங்கி வருகின்றனர். பல வெளிநாட்டு பெண் பக்தர்கள் ஆசிரமத்திலேயே தங்கி கல்கி பகவானுக்கு சேவை செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த ஆசிரமத்தில் தங்கி இருந்த பல வெளிநாட்டு பெண் பக்தர்கள் மாயமானதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆசிரமத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் சட்ட விரோதமாக நன்கொடை என்ற பெயரில் பணம் வருவதாக கூறப்படுகிறது. அதேநேரம் அந்த பணத்தை வெளிநாட்டு பக்தர்கள் பெயர்களில் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதும் தகவல் வெளியாகியது. இதுதவிர சுவிஸ் வங்கியில் கல்கி ஆசிரம நிர்வாகிகள் பெயர்களில் பல ஆயிரம் கோடி பணம் டெபாசிட் செய்து இருந்ததாகவும் கூறப்பட்டது.
இதை தொடர்ந்து கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான தமிழகம், கர்நாடகா, ஆந்திரா என நாடு முழுவதும் உள்ள கல்கி ஆசிரமங்கள் மற்றும் கல்கி பகவான் மகன் கிருஷ்ணா நடத்தி வரும் தொழில் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் அலுவலகங்கள் என நாடு முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த அக்டோபர் மாதம் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கல்கி பகவான் மற்றும் அவரது மகனிடம் இருந்து கட்டுக்கட்டாக 150 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் இந்திய பணம் 93 கோடியும், வெளிநாட்டு பணம் 20 கோடியும் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 93 கிலோ தங்கமும், 110 கேரட் வைரமும் பறிமுதல் செய்யப்பட்டது. 200 கோடிக்கு மேல் மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதன்பிறகு இது தொடர்பாக கல்கி பகவான், அவரது மகன் கிருஷ்ணா, மருமகள்  ப்ரீத்தா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் ஆந்திர மாநிலத்தில் இவர்களுக்கு ஒன்எஸ் பல்கலைக்கழகம் செயல்பட்டுவந்து தெரியவந்தது. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும் போராசியர்கள் “தாசாஜி” என்று அழைக்கப்படுகிறார்கள். துறவிகளான இவர்களுக்கு சம்பளம் எதுவும் வழங்கப்படுதில்லை. உணவு, இருப்பிடம் மட்டும் இருந்தால் போதும். பெரிதாக சொத்துகளுக்கு ஆசைப்படமாட்டார்கள். இதனால் இந்த பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் அனந்தகிரி, சந்திரசேகர் என்ற தாசாஜி பெயரில் கோவை, ஊட்டி,  ஆரணி உள்ளிட்ட இடங்களில் சொத்துகள் வாங்கி இருப்பதும், ஆந்திரா  மாநிலத்தில் 400 ஏக்கர் நிலம் வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வருமானவரித்துறையினர் கல்கி ஆசிரமத்தின் பெயரில் முறைகேடாக தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாங்கப்பட்டுள்ள 907 ஏக்கர் நிலத்தை முடக்கினர். இதில் சித்தூரில் உள்ள 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட வீடு அடங்கும். இவை அனைத்தும் பினாமி தடுப்பு சட்ட பிரிவின் கீழ் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு இது குறித்து தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம்  ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : land ,Kalki Monastery , Trapped, documented, Kalki Ashram, Freeze, Income Tax Department Action
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!