×

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் தீவிரம்: உ.பி, கர்நாடகாவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி: பஸ் எரிப்பு: டெல்லி முடங்கியது பல மாநிலங்களில் 144 தடை உத்தரவு

புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. உபி.யின் லக்னோ, கர்நாடகாவின் மங்களூருவில் நேற்று நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் லக்னோவில் ஒருவரும் மங்களூரில் 2 பேரும் பலியாயினர். ெடல்லியில் பல இடங்களில் போராட்டம் நடந்ததால் போக்குவரத்து முடங்கியது. பல மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் கடந்த ஒரு வாரமாக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஆங்காங்கே வாகனங்களுக்கு தீ வைப்பு, பொது சொத்துக்களுக்கு சேதம் என வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. கடந்த 13ம் தேதி தொடங்கி நடந்து வரும் போராட்டங்கள் காரணமாக பல்வேறு இடங்களிலும் பதற்றம் நிலவி வருகின்றது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் நேற்று போராட்டங்கள் தீவிரமடைந்தன. சம்பால் மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அவ்வழியாக சென்ற 4 அரசு பேருந்தை மறித்து சிலர் தீ வைத்தனர். மற்றொரு அரசு பேருந்து அடித்து சேதப்படுத்தப்பட்டது. போலீஸ் வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. லக்ேனாவில் போலீஸ் நிலையத்தை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் போலீசார் அங்கு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். அவர் முகமது வகீல் (25) என்று தெரியவந்துள்ளது. அவரது சடலம் கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் 2 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அம்மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு 144 தடை உத்தரவு பிறக்கப்பட்ட நிலையில், தடையை மீறி ஆயிரக்கணக்கான மக்கள் சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைப்பதால் போர்க்களமாக மாறியிருக்கிறது. டெல்லியில் நேற்றும் திரும்பும் திசையெல்லாம் போராட்டங்கள் நடந்தன. செங்கோட்டை மற்றும் மண்டி ஹவுஸ் பகுதிகளில் ஜமியா மிலியா மாணவர்களுடன் பொது மக்கள், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், சிறுவர், சிறுமிகள் என ஆயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி கோஷங்கள் முழங்கினர். அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.

மேலும், 144 தடையுத்தரவு ஏற்கனவே அமலில் உள்ளதால், அதிகமாக கூடியவர்களை போலீசார் கைது செய்தனர். ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. போராட்டத்தை ஒடுக்க செல்போன் சேவைகள் நேற்று துண்டிக்கப்பட்டன. 19 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. போக்குவரத்து நெரிசலில் பயணிகள் சிக்கியதால், தனியார் விமான நிறுவனமான இன்டிகோ 19 விமான சேவைகளை ரத்து செய்தது. மொத்தத்தில் நேற்று அடுத்தடுத்து நடந்த போராட்டத்தால் டெல்லி முழுவதும் ஸ்தம்பித்தது. கர்நாடக மாநிலம் மங்களூருவில் தடையை மீறி நேற்று ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக வந்தனர். நெல்லிக்காய் சாலையில் ஊர்வலம் வந்தபோது, போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டகாரர்களுக்கும், போலீசாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடந்தது. இருதரப்பிற்கும் இடையே மோதல் உருவாகி கலவரமாக மாறியது. அவ்வழியாக வந்த பஸ்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டது. சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் உள்ளிட்ட வாகனங்களை தீ வைத்து எரித்தனர்.

இதனால் போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டினர். இதில் குண்டு காயம்பட்டு நவ்ஷீலா (23), ஜலீல் (49) ஆகியோர் உயிரிழந்ததாகவும் இவர்களின் சடலங்கள் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன என்றும் உள்ளூர் அரசு அதிகாரி இந்து பி ரூபேஷ் தெரிவித்துள்ளார். அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பீகார் மாநிலத்தில் நேற்று இடதுசாரி மாணவர் அமைப்பு சார்பில் பந்த் நடத்தப்பட்டது. தலைநகர் பாட்னாவில் ஏஐஎஸ்எப் மற்றும் ஏஐஎஸ்ஏ அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். ராஜேந்திர நகர் முனையப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் திடீரென ரயில் தண்டவாளங்களை மறித்தனர். இதன் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சண்டிகரில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மசூதி அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கவர்னரிடம் மனு அளித்தனர்.

குஜராத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது. அகமதாபாத்தில் சர்தார் பாக் பகுதியில் போராட்டத்துக்காக திரண்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். ஜம்முவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொள்ளகூடும் என்பதால் அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் மற்றும் 4 முறை எம்எல்ஏவான தாரிகாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். அசாமில் அனைத்து மாணவர் சங்கம் சார்பில் நாளை மற்றும் நாளை மறுதினம் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 24, 26, 28 ஆகிய தேதிகளில பேரணி நடத்தவும் மாணவர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

மும்பையில் மகாத்மா காந்தி கடந்த 1942ம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கிய ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் நேற்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தினர். அரசியல் கட்சி தொண்டர்கள், மாணவர்கள், பாலிவுட் பிரபலங்கள் என அனைத்து பிரிவினரும் போராட்டத்தில் பங்கு பெற்றனர். பாலிவுட் நடிகர்கள் பர்ஹான் அக்தர், சுஷாந்த் சிங், சுவாரா பாஸ்கர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆனந்த் பட்வர்தன், ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா மற்றும் சயீத் மிர்சா உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும் மூத்த பாஜ தலைவர் அத்வானியின் முன்னாள் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி மற்றும் சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட் ஆகியோரும் போராட்டத்தில் பங்கேற்றனர். புனே, நாக்பூர் மற்றும் மகாராஷ்டிராவின் பிற நகரங்களிலும் இதுபோன்ற போராட்டங்கள் நேற்று நடந்தது.

சட்டம் அமல்படுத்தப்படும்
குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் இந்திய குடிமக்களாக மாறவுள்ள ஆப்கானிஸ்தானை சேர்ந்த சீக்கிய அகதிகள் பாஜ செயல் தலைவர் ஜேபி நட்டாவை நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஜேபி நட்டா கூறுகையில், “குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் இவர்களை சந்திக்க வேண்டும். இவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கிறார்கள். ஆனால் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியவில்லை. சொந்தமாக வீடு வாங்க முடியவில்லை. ஏனென்றால் இவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடையாது. பிரதமர் மோடி தலைமையில் இந்தியா முன்னேறி செல்கிறது. அது தொடரும். குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும். அதனை தொடர்ந்து எதிர்காலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும்” என்றார்.

அஜ்மீர் தர்கா வேண்டுகோள்
ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவின் மத குரு சைனுல் அபிதின் அலி கான் கூறுகையில், “குடியுரிமை திருத்த சட்டமானது இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிரானது கிடையாது. திருத்த சட்டத்தால் நாட்டில் வசிக்கும் எந்த முஸ்லீமின் குடியுரிமைக்கும் எந்த அபாயமும் கிடையாது. அவர்கள் தங்களது அச்சத்தை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும்’’ என்றார்.


Tags : states ,shootings ,UP ,Karnataka ,Delhi , 144 prohibition , against , law of citizenship, agitation, intensification, many states
× RELATED டிரெண்டாகும் டம்மி டைம்!