×

டிரெண்டாகும் டம்மி டைம்!

நன்றி குங்குமம் தோழி

இது புது அம்மாக்களுக்கானது!

இன்றைய நவீன உலகில் நாம் நம் வீட்டுப் பெரியவர்கள் சொல்லும் குழந்தை வளர்ப்பு முறைகளை பெரும்பாலும் கேட்க மாட்டோம். ஆனால், புதிது புதிதாக ஆன்லைன் வகுப்புகள், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் குழந்தையை எப்படி வளர்க்கிறார்கள், தற்போதைய டிரெண்ட் என்னவோ அதனை செய்வது என மாறியிருக்கிறோம்.

உண்மையில் பார்த்தால் அதை நம் ஊர் பாட்டிகள் பலகாலமாக நடைமுறையில் வைத்திருப்பர். அப்படியான ஒரு பழைய ஆனால், டிரெண்ட் என நாம் நினைக்கும் குழந்தைகளின் ‘டம்மி டைம்’ (Tummy Time) பற்றி இங்கே விரிவாக தெரிந்துகொள்வோம்.

டம்மி டைம்…

‘டம்மி’ என்றால் ஆங்கிலத்தில் வயிறு என அர்த்தம். குழந்தையை குப்புறப் படுக்கவைத்து சில நிமிடங்கள் விளையாடவிடுவதே ‘டம்மி டைம்’ ஆகும்.

எந்த மாதம் முதல்…

பிறந்து ஒரு மாதம் முடிந்த பச்சிளம் குழந்தை முதல் ஒரு வயது வரை உள்ள குழந்தைகள் வரை என எல்லா குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

பலவிதங்களில்…

*படுக்கையில் குழந்தையினை கவிழ்த்தி விளையாடவிடலாம்.

*நாம் படுக்கையில் மேலே பார்த்தவாறு படுத்து, நம் நெஞ்சின் மேல் குழந்தையை கவிழ்த்திப் போடலாம்.

*சோபா, சாயும் நாற்காலி (Easy Chair), ரிக்லைனர் சோபா(Recliner Sofa), கட்டில் போன்றவற்றில் நாம் பின்பக்கம் சாய்வாக உட்கார்ந்து கொண்டு நம் குழந்தையினை தூக்கி நெஞ்சின் மேல் கவிழ்த்திப் போடலாம்.

*நாற்காலியில் நாம் கால்களை தொங்கவிட்டு அமர்ந்து கொண்டு நம் மடியில் குழந்தையினை கவிழ்த்திப் படுக்க வைக்கலாம்.

*நாம் தரையிலோ அல்லது படுக்கையிலோ சம்மணமிட்டு அமர்ந்து நம் மடியில் கவிழ்த்தி படுக்க வைக்கலாம்.

*நாம் தரையில் அமர்ந்து சுவரில் சாய்ந்து கொண்டு கால்களை நீட்டி நம் தொடைகளில் குழந்தையினை நம்மை நோக்கி பார்த்தவாறு கவிழ்த்திப் போடலாம்.

மேலே சொன்ன விதங்களில் குழந்தை எந்த முறையில் அழாமல் இருக்கிறதோ அதனை முதல் மூன்று மாதங்கள் செய்யலாம்.பின் குழந்தையினை முதலில் சொன்னவாறு படுக்கையில் கவிழ்த்திப் போடலாம். ஏனெனில் குழந்தைக்கு மூன்று மாதங்களில் டம்மி டைம் பழகிவிடும் என்பதால், நம் உடம்பின் அரவணைப்பு (அதாவது, மேலே சொன்ன மற்ற
விதங்கள்) தேவைப்படாது.

நேரம்…

கவிழ்ந்து இருக்கும் சூழல் குழந்தைக்கு அசவுகரியம் மற்றும் பயத்தினை தந்திடும். இதனால் எல்லா குழந்தைகளும் முதலில் அழுவார்கள். எனவே விழித்திருக்கும் போது இரண்டு நிமிடங்கள் மட்டும் கிடத்த வேண்டும். அதேபோல ஒரு நாளைக்கு பத்து தடவை செய்தால் இருபது நிமிடங்கள் வரை நாம் செய்யலாம்.மூன்று மாதங்களுக்கு மேல் கொஞ்சம் பழகிவிடுவார்கள் என்பதால் இதே போல் இடைவெளி விட்டு முப்பது நிமிடங்கள் கொடுக்கலாம். இரண்டு நிமிடங்களை ஐந்து நிமிடங்களாக மாற்றலாம். தலை முழுதாக நின்ற குழந்தைக்கு ஒரு மணி நேரம் வரை கொடுக்க வேண்டும். தலை நின்றபின் அவர்களால் எளிதில் தொடர்ந்து பத்து நிமிடம் வரை கூட கவிழ்ந்திருக்க முடியும்.

டிப்ஸ்…

* வயதிற்கு ஏற்றவாறு பொம்மைகளை அவர்கள் முன் அடுக்கி வைக்கலாம். இப்படி செய்யும் போது ஆர்வம் கூடும்.

* தலை நின்ற குழந்தையாக இருந்தால் நாமும் சேர்ந்து விளையாடினால் உற்சாகமாக இருப்பர்.

* அதிக வண்ணங்கள், சத்தங்கள் உடைய பொம்மைகளை வைத்து விளையாடும் போது இன்னும் சில நேரம் டம்மி டைம் நீளும்.

* வாங்கியிருக்கும் புது பொம்மைகளை டம்மி டைமில் அறிமுகம் செய்யலாம். இதனால் இன்னும் கொஞ்ச நேரம் கவிழ்ந்திருப்பார்கள்.

* ஒரு மாதம் முடிந்தபின் பழகும் குழந்தைகளுக்கு நெஞ்சுப் பகுதியில் தேங்காய் பூ டவல் போன்ற துணியினை உருட்டி வைத்தால் தலை தூக்கவும், மூச்சு விட சிரமம் இல்லாமலும் இருப்பார்கள்.

* இசையினை கவனிக்கும் குழந்தைக்கு இசையை பயன்படுத்தலாம். அதேபோல மடியில் படுக்க வைத்திருக்கும் போது முதுகினை வருடிக் கொடுக்கலாம். இவை எல்லாம் அவர்களை அமைதிப்படுத்துவதால் இன்னும் சில நேரம் அவர்கள் கவிழ்ந்திருப்பர்.

* கனமான படுக்கையில் படுக்க வைத்தால் பொறுமையாக படுக்கையினை வட்டமாக சுற்றலாம். கூடவே அவர்களும் படுக்கையில் சுற்றுவார்கள். அதனால் 360 டிகிரியிலும் அவர்களால் வேடிக்கை பார்க்க முடியுமென்பதால், உற்சாகமாக டம்மி டைம் செய்வர். தலை நிற்காத குழந்தைகள் என்பதால் வேகமாக சுற்றக்கூடாது

* தலை நின்ற குழந்தைக்கு போர்வை போன்ற நீண்ட துணியில் கவிழ்த்தி படுக்கவைத்து விளையாட்டாக தரையில் இழுத்து வரலாம். இதிலும் வேகமாக இழுத்து வரக்கூடாது.

தசைகள்…

கவிழ்த்து படுக்க வைக்கும்போது தலையினை தூக்க முயல்வர். மேலும் கை, கால்களை நீட்டி உதைத்து விளையாடுவர். இதனால் கோர் தசைகள் (Core Muscles) அதாவது, வயிற்றை சுற்றியுள்ள தசைகள் மற்றும் முதுகு, இடுப்பு தசைகள் வலுப்பெறும்.

யானை, ஆடு, மாடு மாதிரியான மற்ற பாலூட்டி விலங்குகள் பிறந்த ஒரு சில மணி நேரத்திலேயே நிற்கவும், நடக்கவும் செய்யும். ஆனால், மனித குழந்தைகள் இவற்றையெல்லாம் பழகி முடிக்க ஒரு வயதாகிவிடுகிறது. ஏனென்றால், இந்த தசைகள் முழுமையான பலத்திற்கு வந்திருக்காது என்பதால்தான்.

பயன்கள்…

*கோர் தசைகள், இடுப்பு தசைகள், முதுகு தசைகள், கால் தசைகள் எல்லாம் வலுப்பெறும்.

*தலை நிற்பது, கவுருவது முதல் நடப்பது வரை அனைத்தும் எளிதில் அந்தந்த மாதத்திற்கு செய்வார்கள்.

முக்கியத்துவம் என்ன..?

வளர்ச்சியில் தாமதம் என்பது இன்று மிகவும் சாதாரணமாக ஆகிவிட்டது. குழந்தை இன்னும் உட்காரவில்லை, நடக்கவில்லை என பல பெற்றோர்கள்
சொல்வதை நாம் கேட்டிருப்போம்.அதேபோல குழந்தைகள் உட்காருவது, நடப்பது போன்ற வளர்ச்சி தாமதமானால் பேசுவது, அறிவுத் திறன், அடுத்தக்கட்ட வயதிற்கான வளர்ச்சி போன்ற மற்ற விஷயங்களும் தாமதமாகி சிரமத்திற்கு உள்ளாவோம்.

வருமுன் காப்போம்…

‘குலோபல் டெவலப்மெண்டல் டிலே’ (Global Developmental Delay) எனப்படும் உட்காருவது, நடப்பது, பேசுவது, மற்றவரிடம் பழகுவது, அறிவுத்திறன், புரிந்து
கொள்ளும் திறன் அந்தந்த வயதிற்கு ஏற்றவாறு இல்லாமல் தாமதமாய் இருப்பது என அனைத்தும் சேர்ந்து தாமதமாய் இருப்பதுதான் GDD என்பது. இதனை எளிதில் தடுக்கலாம்.

எச்சரிக்கை…

*குழந்தைகள் தூங்கும்போது இதனை முயற்சிக்கக் கூடாது.

*இதனை பயில்விக்கும்போது குழந்தையின் அருகாமையில் பெரியவர்கள் யாராவது இருத்தல் அவசியம். ஏனெனில் குழந்தை விளையாடாமல் குப்புறப்படுத்துவிட்டால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்.

*SIDS ( Sudden Infant Death Syndrome) என மருத்துவத்தில் அழைக்கப்படும் ‘திடீர் குழந்தை மரணம்’ மூச்சுத் திணறல் காரணமாக நிகழ வாய்ப்புள்ளது என்பதால், குழந்தை விளையாடி முடித்து அப்படியே தூங்கிவிட்டால் கூட திருப்பி முகம் மேலே பார்த்தவாறு படுக்க வைக்க வேண்டும்.

விதிமுறைகள்…

*குழந்தை அழுதால் வற்புறுத்தி டம்மி டைம் பழகக்கூடாது. அழுகத் தொடங்கிவிட்டால் அடுத்த சில மணி நேரம் கழித்து திரும்பவும் கவிழ்த்துப் போடலாம்.

*பால் குடித்து அரை மணி நேரம் கழித்துதான் கவிழ்த்துப் போட வேண்டும்.

*குழந்தை தூங்கும்போது கண்டிப்பாக முயற்சிக்கக் கூடாது.

*அதேபோல குழந்தைக்கு சளி, காய்ச்சல் இருக்கும்போதும் இதனை செயல்படுத்தக்கூடாது.

*குழந்தையை கவிழ்த்திவிட்டு நம் அருகாமையில், நமது கண்காணிப்பில் வைத்துக்கொள்வது அவசியம்.

அவசியம்தானா..?

‘டம்மி டைம்’ என்பது கட்டாயம் இல்லை. இதனை பழக்காமல் விட்டாலும் குழந்தைகளுக்கு தானாகவே தலை நிற்பது, குப்புறக் கவிழ்வது, உட்காருவது என எல்லாம் தானாக செய்வர். சில குழந்தைகள் நான்கு மாதமானாலும் டம்மி டைமை பெரிதாக விரும்பாமல் அழுவார்கள் என்பதால், அதிகம் அவர்களை வற்புறுத்துதல் வேண்டாம். ஆனால், அந்தந்த மாதத்தில் செய்ய வேண்டியவை செய்யாமல் இருக்கும் குழந்தைகளுக்கு தினமும் டம்மி டைம் கொடுக்க வேண்டும்.

மேலும் மூளை வாதம், முதுகு தண்டில் பிரச்னை, மரபணு சார்ந்த பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு இயல்பிலே தாமதமாகும் என்பதால், இயன்முறை மருத்துவ சிகிச்சையோடு டம்மி டைமும் தினமும் வீட்டில் அவசியமாகிறது.

நம் முன்னோர்கள்…

குழந்தையை காலில் கவிழ்த்துப் போட்டு குளிப்பாட்டுதல், மசாஜ் செய்தல் போன்றவற்றை நம் பெரியோர்கள் செய்வர். அதுவும் ஒரு வகை டம்மி டைம்தான். மேலும் மேலே சொன்னவாறு காலில் போட்டு, மடியில் போட்டு விளையாட்டு காட்டுவது போன்றவற்றை நம் பெரியோர்கள் எப்போதும் செய்திருக்கிறார்கள்.ஆனால், மேலை நாட்டில் மடியில், காலில் போடும் பழக்கம் இல்லை.

அதனால் அவர்கள் குழந்தையை படுக்கையில் கிடத்தி டம்மி டைம் என புதிதாக ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறார்கள். மேலும் அவர்களை விட நாம் நம் மடியில், காலில் போடும் போது குழந்தைக்கு நம் தோலோடு தோல் உணர்வு கிடைப்பதால் இன்னும் நம்முடன் இணக்கம் ஏற்படுவதோடு, பாதுகாப்பாகவும், அரவணைப்பாகவும் உணர்வர்.எனவே நம் இந்தியா அதிலும் குறிப்பாக, தமிழக மக்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்பது நீண்டது, ஆழமானது என்பதை நாம் என்றும் மறவாமல், டம்மி டைமிற்கு நமது குழந்தைகளை ஊக்குவிப்போம், நல்ல முறையில் வளர்த்தெடுப்போம்.

The post டிரெண்டாகும் டம்மி டைம்! appeared first on Dinakaran.

Tags : United States ,
× RELATED அமெரிக்கா – தென்கொரியா படைகள் கூட்டு...