×

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்: செனட் சபையில் அடுத்த மாதம் ஓட்டெடுப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம், நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. அடுத்ததாக அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து செனட் சபையில் அடுத்த மாதம் விவாதம் நடைபெறவுள்ளது.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இப்போதைய அதிபர் டிரம்புக்கு எதிராக, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிடுகிறார். அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில், உக்ரைனில் அவரது மகன் பணியாற்றும் எரிவாயு நிறுவனத்தில் விசாரணை மேற்கொள்ள அந்நாட்டு அதிபர்  விளாடிமர் ஜெலன்ஸ்கிடம் டிரம்ப் வலியுறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிபர் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும், அவர் மீது பதவி நீக்க தீர்மானத்தை ஜனநாயகக் கட்சி கொண்டு வந்தது. தன் மீதான புகாரை நாடாளுமன்றத்தில் விசாரிக்க ஒத்துழைப்பு அளிக்க அதிபர் டிரம்ப் மறுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர், அதிபர் டிரம்ப் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர அனுமதி அளித்தன.  இதைத்தொடர்ந்து, முதல்கட்டமாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் பதவி நீக்க தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் தொடங்கியது. சுமார் 14 மணி நேரம் நடந்த இந்த விவாதத்தில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்தை தெரிவித்தனர். இந்த விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய சபாநாயகர் நான்சி பெலோசி, ‘‘அதிபரின் அசட்டையான நடவடிக்கைகள், பதவி நீக்க தீர்மானத்தை அவசியமானதாக ஆக்கிவிட்டது சோகம்தான். ஆனால், அவர் எந்த வாய்ப்பும் தரவில்லை. அவர் அரசியல் சாசனத்தை மீறிவிட்டார். நாட்டின் பாதுகாப்புக்கும், அமெரிக்க தேர்தலுக்கு அவரால் அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

குடியரசுக் கட்சி எம்.பி ஜிம் சென்சென்பிரெனர் கூறுகையில், ‘‘இது அவசர கதியில் நடக்கும் வேலை. ஏனென்றால், அடுத்தாண்டு அதிபர் தேர்தலில் மக்களை கவர ஜனநாயக கட்சியினர் விரும்புகின்றனர்’’ என்றார். விவாதத்துக்குப்பின் நேற்று காலை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சிக்கு 236 பேர் உள்ளனர். டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 197 பேர் உள்ளனர். பதவி நீக்க தீர்மானத்தின் முதல் குற்றச்சாட்டான அதிகார துஷ்பிரயோகம் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு ஆதரவாக 230 ஓட்டுக்களும், எதிராக 197 ஓட்டுக்களும் பதிவானது. 2வது குற்றச்சாட்டான நாடாளுமன்றத்துக்கு தடை ஏற்படுத்துதல் மீது நடந்த ஓட்டெடுப்பில் ஆதரவாக 229 ஓட்டுக்ளும், எதிராக 198 ஓட்டுக்களும் பதிவானது. இதனால் பிரதிநிதிகள் சபையில் அதிபர் டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து செனட் சபையில் அடுத்த மாதம் இந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது.

3வது அதிபர் டிரம்ப்
அமெரிக்க வரலாற்றில் ஏற்கனவே இரு அதிபர்கள் மீது கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. 1868ல்  அதிபர் ஆண்ட்ரூ  ஜான்சன் மற்றும் 1998ல் அதிபர் பில் கிளின்டன் ஆகியோர்  மீது பிரதிநிதிகள்  சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செனட்  சபையில் நடந்த  ஓட்டெடுப்பில் இவர்களுக்கு எதிரான கண்டன தீர்மானம் தோல்வி  அடைந்ததை  அடுத்து அவர்கள் பதவி தப்பியது. தற்போது பதவி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்ட 3வது அதிபர் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

செனட்டில் பதவி தப்புமா?
அமெரிக்க அதிபரை பதவியில் இருந்து நீக்க பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். செனட் சபையில் இந்த தீர்மானத்தின் மீது அடுத்த மாதம் ஓட்டெடுப்பு நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 100 உறுப்பினர்கள் உள்ளனர். 3ல் இரண்டு பங்கு ஆதரவு இருந்தால் மட்டுமே இங்கு தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 53 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 20 பேர், டிரம்ப்புக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே இங்கு பதவி நீக்க தீர்மானத்தை ஜனநாயக கட்சியால் நிறைவேற்ற முடியும். அதற்கு வாய்ப்பில்லை எனவும், இங்கு அதிபர் டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் தோற்கடிக்கப்படும் என குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

3 ஆண்டு சதி செயல்
பதவி நீக்க தீர்மானத்துக்குப்பின் பேட்டியளித்த அதிபர் டிரம்ப், ‘‘நான் பதவி ஏற்ற முதல் நாளில் இருந்து, என் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர ஜனநாயக கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். 3 ஆண்டு சதி செயல், வதந்திகள், ஊழல்களுக்குப்பின், கோடிக்கான அமெரிக்கர்களின் வாக்குகளை ரத்து செய்ய ஜனநாயக கட்சியினர் முயற்சிக்கின்றனர். நான்சி பெலோசி தலைமையிலான ஜனநாயக கட்சியினர் தங்களை அவமானத்தின் அடையாளமாக காட்டியுள்ளனர். நாமும் ஜனநாயக கட்சியினர் போல் செயல்பட்டிருந்தால், ஹிலாரி கிளின்டன் போன்றவர்களை 2 ஆண்டுகளுக்கு முன்பே சிறையில் அடைத்திருக்கலாம். இதெல்லாம் அவமானம்’’ என்றார்.

Tags : Trump ,House of Representatives ,US ,sacking ,office ,Senate , US President Trump, Dismissal Resolution, House of Representatives, Senate
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்