×

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து தொடர்ந்து 3வது நாளாக மம்தா பேரணி : அசாமில் இணைய சேவை துண்டிப்பு

கொல்கத்தா: குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து, மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 3வது நாளாக முதல்வர் மம்தா பானர்ஜி பேரணி நடத்தினார். அசாமில் 8வது நாளாக இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தில் இருந்து அகதிகளாக வந்து இந்தியாவில் தங்கியுள்ள முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையிலான குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய பாஜ அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம்,  மேற்கு வங்கம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின் போது இந்த மாநிலங்களில்  பல்வேறு இடங்களில் தீவைப்பு சம்பவங்கள் நடந்து வன்முறை வெடித்தது. தற்போது தென்மாநிலங்களுக்கும் இந்த போராட்டம் பரவியுள்ளது. அசாமின் கவுகாத்தியில் தொடங்கிய இந்த போராட்டம் கண்டன பேரணி, வாகனங்களுக்கு தீவைத்தல் என வன்முறை களமாக மாறியது.

இதையடுத்து, கடந்த 11ம் தேதி கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வதந்தி மற்றும் போராட்டம் பரவுவதை தடுக்க கவுகாத்தி, காம்ரூப் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. 8வது நாளாக நேற்றும் இணையதள சேவை துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்தனர். இதனால்  பொதுமக்கள் முக்கிய இடங்களில் உள்ள சுவர்களில் பாஜ எதிர்ப்பு மற்றும் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான வாசகங்களை எழுதி தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். சில இடங்களில் பிரதமர் மோடியை ஹிட்லர் என சித்தரித்தும், இந்தியா ஒன்றும் வடகொரியா அல்ல எனவும் குறிப்பிட்டு சுவர்களில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இந்நிலையில், கவுகாத்தியில் நேற்று முன்தினம் முதல் விமான சேவை மற்றும் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. கவுகாத்தியில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. அமைதி திரும்பியதை தொடர்ந்து திப்ருகரிலும் 14 மணி நேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. ஆனாலும், அசாமில் அனைத்து அசாம் மாணவர்கள் சங்கத்தினர் பல்ேவறு முக்கிய இடங்களில் அமைதியான முறையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கிலும் ஊரடங்கு உத்தரவு 14 மணிநேரம் தளர்த்தப்பட்டது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வன்முறையில் ஈடுபட்ட 354 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். முன்னதாக, ேநற்று முன்தினம் இரவில் ஹவுரா மாவட்டத்தின் சங்கரில் பகுதியில் போராட்டக்குழுவினர் திடீரென கையெறி குண்டுகளை வீசியதில் ஹவுரா நகர போலீஸ் துணை கமிஷனர் அஜித் சிங் யாதவுக்கு இருகால்களிலும் காயம் ஏற்பட்டது. மேலும் இருவர் காயம் அடைந்தனர். முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரசார் நேற்றும் 3வது நாளாக கண்டன பேரணி நடத்தினர். ஏற்கனவே கடந்த 2 நாட்களாக கொல்கத்தாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அவர் கண்டன பேரணி நடத்தினார். நேற்றைய பேரணியை தொடங்கி வைத்து பேசிய மம்தா பானர்ஜி, ‘‘தேசிய குடியுரிமை பதிவு, குடியுரிமை சட்ட திருத்தத்தை ஒருேபாதும் மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டோம். யாரையும் இந்த மாநிலத்தில் இருந்து வெளியேற அனுமதிக்க மாட்டோம்,’ என்றார். இந்த பேரணி ஹவுரா மைதானத்தில் இருந்து கொல்கத்தாவின் எஸ்பிளனேடு வரை நடந்தது.

கர்நாடகா முழுதும்144 தடை உத்தரவு: மத்திய அரசு நிறைவேற்றி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. இதேபோல், கர்நாடகாவிலும் போராட்டங்கள் நடத்த பல்வேறு அமைப்புகள், கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதை தடுப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவை கர்நாடக அரசு நேற்று பிறப்பித்தது. மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை அளித்த பேட்டியில், ‘‘கர்நாடகாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது, இன்று முதல் 21ம் தேதி நள்ளிரவு  வரை அமலில் இருக்கும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே, இந்த நடவடிக்கை’’ என்றார்.

‘நாட்டை பற்றி எரிய வைப்பது உங்கள் வேலையல்ல’

பேரணியை தொடங்கி வைத்து பேசிய மம்தா, இந்திய குடிமகன் என்பதற்கான அடையாளம் ஆதார் அட்டை அல்ல என தெரிவிக்கும் அமித்ஷா, பிறகு ஏன் வங்கிசேவை மற்றும் நலத்திட்டங்களுக்கு ஆதாரை இணைக்க வேண்டும் என்கிறார். குடியுரிமை சட்ட திருத்தம் நாட்டை பிளவுபடுத்தும். நாட்டை பற்றி எரிய வைப்பது உங்கள் வேலையல்ல, பற்றி எரியும் தீயை அணைப்பதே அமித்ஷாவின் பணியாக இருக்கவேண்டும். நாட்டை காப்பதுடன், பாஜ தொண்டர்களை அடக்கி வைப்பதையும் அமித்ஷா செய்ய வேண்டும். அவர்கள் நாட்டை தடுப்பு காவல் மையமாக மாற்ற விரும்புகிறார்கள். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். குடியுரிமை சட்ட திருத்தத்தை மே. வங்கத்தில் அமல்படுத்தமாட்டோம்,’’ என்றார்.

போலீசார் கொடி அணிவகுப்பு

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி சீலாம்பூர் பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகலில் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்குழுவினர் பஸ்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீதும் தாக்குதலில் ஈடுபட்டனர். சில பைக்குகளையும்  அவர்கள் தீவைத்து எரித்தனர். இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடகிழக்கு டெல்லியில் உள்ள சீலாம்பூர், ஜப்ரதாபாத் பகுதியில் நேற்று போலீசார் அமைதியை நிலவ செய்வதற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். டெல்லியின் வடகிழக்கு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  

ஹர்ஸ் விஹார் மற்றும் சோனியா விஹார் பகுதியில் முன்னெச்சரிக்கையாக 4க்கும் மேற்பட்டவர்கள் கூட தடை விதிக்கப்பட்டது. இதையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு ேபரணி நடத்தினர். வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்க சமூகவலைதளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சட்டத்தை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

ஐநா கவலை

ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ கட்டரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் அளித்த பேட்டியில், `‘இந்தியாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை அடக்க பாதுகாப்பு படையை பயன்படுத்துவது கவலையளிக்கிறது. இந்த போராட்டம் தொடர்பாக  நடைபெறும் வன்முறை கவலையளிக்கிறது. போராடுபவர்களின் கருத்து சுதந்திரத்துக்கு அரசு மதிப்பளிப்பதுடன் அமைதியான முறையில் போராட்டத்ைத நடத்த அனுமதிக்கலாம்’ என்றார். ஐநாவின் மனித உரிமை ஹைகமிஷனர்  மிச்செல்லி பாசெலட் கூறுகையில், `குடியுரிமை சட்டதிருத்தம் கவலையளிப்பதாகவும், இது அடிப்படையில் பாகுபாட்டை உருவாக்கும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

Tags : protest ,rally ,Mamta , Mamta rally ,r 3rd consecutive day ,n protest against Citizenship Amendment...
× RELATED அர்ஜெண்டினாவில்...