×

சென்ட்ரலுக்கு பார்சலில் வந்த 10 கையெறி குண்டுகள் 7 மாதத்துக்கு பிறகு கண்டுபிடிப்பு: ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பார்சலில் வந்த 10 கையெறி குண்டுகள், 7 மாதங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டு, ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சங்கமித்ரா விரைவு ரயிலில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி நாக்பூரில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலை யாரும் பெற்றுக்கொள்ளாததால் ரயில்வே அதிகாரிகள் பேசின்பாலம் சால்ட் குடியிருப்பில் உள்ள குடோனுக்கு 10ம் தேதி எடுத்துச்சென்றனர். பார்சலை நேற்று பிரித்து பார்த்தபோது அதில் 10 கையெறி குண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரயில்வே வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  போலீசார் நடத்திய விசாரணையில், நாக்பூரில் உள்ள இந்திய ராணுவ ஏ72 ஐ.என்.எப். பட்டாலியன் கமாண்டன்ட் பிரவீன் காக்டே அந்த பார்சலை அனுப்பியது தெரியவந்தது.

இதையடுத்து சென்னை மத்திய ராணுவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் இந்திய ராணுவஅந்தமான் நிக்கோபார் தீவிலுள்ள 172 ஐ.என்.எப். பட்டாளியனுக்கு செல்லவேண்டிய பார்சல் தவறுதலாக ஏ72 ஐ.என்.எப். என குறிப்பிடப்பட்டு இருந்து என தெரியவந்துள்ளது. இதனால், 7 மாதங்களுக்கு மேலாக அந்த பார்சலை பெற ராணுவ அதிகாரிகள் யாரும் வராதது தெரியவந்துள்ளது. இதையடுத்து பல்லாவரத்தில் உள்ள 172 ஐ.என்.எப். பட்டாலியனின் மற்றொரு பிரிவு ராணுவ வீரர்கள் அமீன் பட், பல்தேவ் சிங் ஆகியோர் நேற்று இரவு அந்த பார்சலை பெற்றனர். கையெறி குண்டுகளை சோதனை செய்ததில் அது வெடிக்காது என்பதை உறுதி செய்யப்பட்டது.


Tags : discovery ,army personnel , 10 grenades, arriving in Central, 7 months later, discovery
× RELATED வட இந்தியர்களின் வரவை ஆதரிக்கும் படமா: பாஸ்கர் சக்தி பதில்