×

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அதிமுக ஆதரித்தது தேச துரோகம் : கமல்ஹாசன் குற்றச்சாட்டு

சென்னை: மக்களை மதத்தின் பெயரால் பிரிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அதிமுக ஆதரித்தது தேச துரோகம் என்று மநீம தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டினார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: இந்தியாவின் முதுகெலும்பு என சொல்லப்படும் கிராமங்களில்  விவசாயி தற்கொலை செய்து கொண்டு செத்துக் கொண்டிருக்கும் பொழுது அதை தடுக்க  வழி செய்யாமல் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பது அரசாங்கத்தின்  சூழ்ச்சி. சரி பாதி  விழுக்காடான பெண்கள் வயது பாரபட்சமின்றி உயிர் பயத்தில் வாழும் நேரத்தில்  சட்டத்தின் மூலம் அதை தெரிவிக்காமல் வாக்கு வங்கிக்காக சட்டப்பிழைகளை செய்வது அரசு மக்களுக்கு எதிராக தொடுக்கும் போர் வியூகம். எதிர்காலத்தின்  தூண்களான மாணவர்கள் அரசியல் புரிதலுக்காக கேள்வி கேட்கும் போது கண்ணீர்  புகைக்குண்டுகள் எறிவதும், காக்கிகளைக் கொண்டு அடிப்பதும்தான்  அரசாங்கத்தின் பதில்.

பொருளாதாரம்  பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது, விலைவாசி விண்ணோக்கி சென்று  கொண்டிருக்கிறது என அனைவரும் கலக்கத்தில் இருக்கும் வேளையில் குடியுரிமை  சட்டத் திருத்தத்துக்கான அவசரம் என்ன? இந்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழினத்துக்கும் தேசத்துக்கும் அதிமுக துரோகம் செய்துள்ளது. மாணவர்கள்  மேல் விழும் ஒவ்வொரு அடியும் இந்திய ஜனநாயகம் வழங்கிய கருத்துரிமையின்  மேல் விழும் அடி. கேள்வி கேட்கவே பயப்பட வேண்டும் என்ற எண்ணத்தை  எதிர்காலத் தலைமுறையிடம் ஏற்படுத்த விழும் அடி. கேட்கப்படும் கேள்விகளுக்கு  நேர்மையான பதில் இல்லாததால் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் விழும் அடி. மாணவனுக்கு  பதிலில்லை. இனத்தின்  பெயரால் நாட்டை பிரித்து, புதிய நாடு பிறந்து விடும் என ஆசை வார்த்தை  பேசி, சட்ட திருத்தங்களை தனக்கு சாதகமாக்கி செய்தவர்கள் அடுத்து என்ன  செய்வார்கள் என்பதற்கான பதில் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் உள்ளது. அந்த வரலாற்றின் முடிவு எப்போதும் மக்களின் கையில்தான் இருந்திருக்கிறது. தேச விரோத சக்திகளின் வீழ்ச்சியின் தொடக்கம் இது.

Tags : Citizenship Amendment Bill: Kamal Haasan ,Citizenship ,Bill AIADMK ,AIADMK , AIADMK backed , Citizenship Amendment Bill,Kamal Haasan indictment
× RELATED சொல்லிட்டாங்க…