×

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளாவில் இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம்: அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் போலீசார் குவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு திருத்த சட்டத்திற்கு எதிராக இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. கேரள முஸ்லீம் இளைஞர்கள் பெருமன்றம். எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட 33 அமைப்புகள் மற்றும் பல்வேறு கட்சிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. போராட்டத்திற்கு முன்கூட்டியே அனுமதி பெறப்படாததால் போராட்டக்கார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள டி.ஜி.பி லோக்நாத் பெஹரா எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, இந்த போராட்டம் சட்டவிரோதமானது என்பதால் போராட்டக்காரர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் மாநிலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வண்ணம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவர் என தெரிவித்தார். கேரளாவில் பல இடங்களில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வியாபாரிகள் சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்காததால் ஆங்காங்கே கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இன்று நடக்கும் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், நீதிமன்றங்கள் மற்றும் மின்வாரிய அலுவலகங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சபரிமலை பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் ராணி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் மாநிலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே முழு அடைப்பு நடைபெற்று வருவதால், பொள்ளாட்சியிலிருந்து கேரளாவுக்கு செல்லும் வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அருகே தமிழக-கேரள எல்லையான கோபாலபுரம், நடுப்பணி ஆகிய இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கேரள எல்லைக்குள் செல்லும் வாகனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதால் சில வழித்தடங்களில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து, கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.


Tags : Kerala ,Citizenship Amendment Act: Police ,Statewide Shutdown: Police Mobilization , Citizenship Amendment Act, Kerala
× RELATED மாட்டுப்பட்டி அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்