×

சதானந்தபுரம் ஏரியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் முதலைகள் உலா : பொதுமக்கள் பீதி

தாம்பரம்: தாம்பரம் அருகே உள்ள சதானந்தபுரம் ஏரியில் உள்ள முதலைகள் அடிக்கடி வெளியேறி, அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே, இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் அருகே உள்ள சதானந்தபுரத்தில் மிகப்பெரிய அளவிலான ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த ஏரியில் பல வருடங்களாக முதலைகள் உள்ளன. இவை, அவ்வப்போது இரவு நேரங்களில் ஏரியிலிருந்து வெளியே வந்து, குடியிருப்பு பகுதியில் உள்ள கோழி, வாத்து, நாய் உள்ளிட்டவைகளை வேட்டையாடி வருவது வாடிக்கையாக உள்ளது.
அதுமட்டுமின்றி காலை வேலைகளில் ஏரியின் நடுவிலுள்ள திட்டு பகுதியில் படுத்து உறங்குவதுமாக உள்ளன. இதனால் இரவு நேரங்களில் சிறுவர்கள், பெரியவர்கள் என யாரும் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றனர். எனவே, இந்த முதலைகளை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் பல வருடங்களாக கோரிக்கை விடுத்தும் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், ஏரியில் தண்ணீர் வற்றிய பின்பே முதலைகளை பிடிக்க முடியும் என தட்டிக்கழிப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சதானந்தபுரம், நெடுங்குன்றம் பகுதியில் ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இதன் அருகே வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் இருந்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியேறிய முதலை குட்டிகள், இந்த பகுதிகளில் உள்ள ஏரிகளில் தஞ்சமடைந்தன. சில வருடங்களில் அந்த முதலை குட்டிகள் பெரிதாகி சதானந்தபுரம் ஏரியிலேயே வாழ்ந்து வருகின்றன. இந்த ஏரியில் குறைந்தது 6 முதலைகளுக்கு மேல் உள்ளன.  ஒவ்வொன்றும் சுமார் 5 முதல் 6 அடிக்கு மேல் இருக்கும். இவை அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுப்பதுடன், வீடுகளில் உள்ள கால்நடைகளை குறிவைத்து தாக்குகின்றன. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீடுகளில் இருந்து வெளியே வர  அச்சப்படுவதுடன், உயிர் பயத்தில் நடுங்கியபடி வசித்து வருகின்றனர். இரவில், சிறுவர்களை வௌயில் விட அச்சமாக உள்ளது.

எனவே, இந்த முதலைகளை பிடித்து செல்லுங்கள், என வனத்துறையினரிடம் புகார் அளித்தால், ஏரியில் தண்ணீர் அதிகம் உள்ளது. ஏரியில் தண்ணீர் வற்றிய பின்னர் முதலைகளை பிடித்து செல்கிறோம், என ஒவ்வொரு முறையும் கூறுகிறார்களே தவிர, ஏரியில் தண்ணீர் வற்றிய பின்னர் அவர்கள் இதுகுறித்து கண்டு கொள்ளாமலேயே இருந்து வருகின்றனர். இதனால், ஒவ்வொரு நாளும் அச்சத்துடனே வசித்து வருகிறோம். எனவே, பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.


Tags : lake ,Sadanandapuram lake Sadanandapuram , Crocodiles flee,Sadanandapuram lake
× RELATED சென்னை குடிநீருக்கு ஆதாரமான வீராணம் ஏரி வறண்டது