×

மெட்ரோவில் 50% கட்டண குறைப்பு எதிரொலி: விடுமுறை நாட்களில் 90 ஆயிரம் பேர் பயணம்... அதிகாரி தகவல்

சென்னை: 50 சதவீத கட்டண குறைப்பு காரணமாக, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் 90 ஆயிரம் பேர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் சேவையை  அடித்தட்டு மக்களின் அத்தியாவசிய தேவையாக மாற்ற நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஐ.டி நிறுவனங்களுக்கு செல்பவர்களும், அதிவிரைவு சேவையை விரும்புபவர்களும் மட்டுமே இன்னும் மெட்ரோ ரயில் சேவையை  பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி, நாள்தோறும் 80 ஆயிரம் பேர் வரையில் மெட்ரோவில் பயணம் செய்கின்றனர். எனவே, அனைவரும் மெட்ரோ ரயில் சேவையை பெறும் வகையில் கடந்த மாதம் புதிய அறிவிப்பு ஒன்றை மெட்ரோ  நிர்வாகம் வெளியிட்டது. அதன்படி, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொதுவிடுமுறை தினங்களில் மெட்ரோ ரயிலில் 50 சதவீத கட்டண சலுகை என்று அறிவித்தது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொதுவிடுமுறை தினங்களில் தற்போது நடுத்தர மற்றும் சாதாரண மக்களும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், விடுமுறை தினங்களில் 50  ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரையில் இருந்து பயணிகளின் வருகை தற்போது 80 ஆயிரம் முதல் 90 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ்  போன்ற விழா நாட்களில் அனைவரும் மெட்ரோ ரயில் சேவையை பெறும் வகையில் கட்டணங்கள் குறைக்கப்பட்டு வந்தது. ரயில் இயக்க நேரமும் நீட்டிக்கப்பட்டது. தற்போது, அனைவரும் மெட்ரோ ரயில் சேவையை பெற நிர்வாகம் தீவிர  முயற்சியை எடுத்து வருகிறது.

அதன்படி, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொதுவிடுமுறை நாட்களில் 50 சதவீத கட்டண குறைப்பை அறிவித்த பிறகு விடுமுறை நாட்களில் அதிகமானோர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சலுகை  அறிவிப்பிற்கு முன்பு விடுமுறை நாட்களில் 56 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் வரை மட்டுமே நாள்தோறும் மெட்ரோ சேவையை பயன்படுத்தினர். ஆனால், சலுகை அறிவிப்பிற்கு பிறகு 90 ஆயிரம் பேர் வரையில் சேவையை  பயன்படுத்துகின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளான நவம்பர் 24ம் தேதி - 75 ஆயிரம் பேரும், டிசம்பர் 1ம் தேதி - 81 ஆயிரம் பேரும், கடந்த 8ம் தேதி 86 ஆயிரம் பேரும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி உள்ளனர். கடந்த 7ம் தேதி  (சனிக்கிழமை) அதிகபட்சமாக 1 லட்சத்து 2 ஆயிரம் பேர் சேவையை பயன்படுத்தியுள்ளனர்.

அதிகபட்சமாக, ஏர்போர்ட் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 15 ஆயிரம் பேரும், இரண்டாவதாக சென்ட்ரல் நிலையத்தில் இருந்து 13 ஆயிரம் பேரும், மூன்றாவதாக திருமங்கலம் நிலையத்தில் இருந்து 10 ஆயிரம் பேரும் விடுமுறை  தினங்களில் பயணிக்கின்றனர். மற்ற நிலையங்களில் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் வரையில் பயணிக்கின்றனர். தற்போது 90 ஆயிரமாக உள்ள பயணிகள் வருகை விரைவில் 1.20 லட்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு  கூறினார்.

Tags : holidays , Metro, tariff reduction
× RELATED பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல்...