×

அமமுகவில் இருந்து வெளியேறிய பின் அக்கட்சியை பற்றி கவலைப்படுவதேன்? புகேழேந்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை: அமமுகவில் இருந்து வெளியேறிய பின் அக்கட்சியை பற்றி கவலைப்படுவதேன்? என புகழேந்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி மனுத்தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள டி.டி.வி.தினகரன், அக்கட்சியை பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பித்திருந்தார்.

அந்த விண்ணப்பத்துடன் பிரமாண பத்திரம் அளித்த 14 பேர் தற்போது கட்சியில் இருந்து விலகி விட்டதால், அந்த பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் கட்சியை பதிவு செய்யக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். தேர்தல் ஆணைய விதிப்படி ஒரு கட்சியை பதிவு செய்ய அக்கட்சியின் சார்பில் 100 தனி நபர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், தான் உட்பட மொத்தம் 100 பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தோம். பின்னர், தினகரனின் நடவடிக்கையில் உடன்பாடின்றி, தானும், முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலரும் அ.ம.மு.க வில் இருந்து விலகி விட்டதால், கட்சியை பதிவு செய்ய அளித்த விண்ணப்பத்தை தள்ளுபடி செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும், என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கானது, இன்று உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தார். மேலும், அமமுகவில் இருந்து வெளியேறிய பின் அக்கட்சியை பற்றி கவலைப்படுவதேன்? என புகழேந்தி தரப்புக்கு  கேள்வியெழுப்பினார். இதையடுத்து, கட்சி பதிவுக்காக புகழேந்தி அளித்த பிரமாண பத்திரத்தை நீக்க உத்தரவிட்ட நீதிபதி, கட்சி பதிவு குறித்து பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து தேர்தல் ஆணையம், தினகரன் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை டிசம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.



Tags : party ,Chennai High Court ,Pugazhendhi , Ammk, TTV Dinakaran, Pugazhendhi, Chennai High Court, Election Commission
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...