×

தமிழகத்தில் முதன் முறையாக கேங்மேன் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற சேலம் இளம்பெண்

சேலம்:  தமிழகத்தில் முதன் முறையாக மின்வாரிய கேங்மேன் பணிக்கான உடல் தகுதி தேர்வில் சேலம் இளம்பெண் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார். அவரை மின் வாரிய அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். தமிழக மின் வாரியத்தில் கம்பம் நடுதல்,புதிய மின்பாதை அமைத்தல் உள்ளிட்ட களப்பணிகளை மேற்கொள்ள 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் சுமார் 1 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு உடல் தகுதி தேர்வு கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது.

சேலம் மாவட்டத்தில்,சேலம் உடையாப்பட்டி மற்றும் மேட்டூரில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் தேர்வு நடந்து வருகிறது. இதில்,2,871 பேர் வெவ்வேறு தேதியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த தகுதி தேர்வில் கம்பம் ஏறுதல்,மின்சாதன பொருட்களை தூக்கிக் கொண்டு 100 மீட்டர் ஓடுதல்,உயர் அழுத்த மின் கம்பியை குறிப்பிட்ட நேரத்தில் இணைத்தல் போன்றவை நடத்தப்படுகிறது. சேலம் உடையாப்பட்டி மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் கடந்த 28ம் தேதி முதல் தேர்வு நடந்து வருகிறது. தினமும் 206 பேர் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.அதில்,தினமும் அதிகபட்சமாக 140 பேர் வரைதான் பங்கேற்கின்றனர்.இவர்களில் தினமும் 30 முதல் 40 பேர் வரை தான்,உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்தநிலையான எழுத்துத்தேர்வுக்கு தகுதி பெற்று வருகின்றனர். நேற்று வரையில் இதுவரை 206 பேர் தேர்ச்சி் பெற்றுள்ளனர்.வரும் 13ம் தேதி வரை தேர்வு நடக்கிறது.

தேர்ச்சி பெற்ற தேர்வர்களில்,ஒருவர் மட்டும் பெண் ஆவார்.தமிழகத்திலேயே கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பெண்மணி என்ற பெயரை பெற்ற அவர்,சேலம் மாவட்டம் மேச்சேரி அருகேயுள்ள அமரம் சிவிவளவு கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் மனைவி லதா (26). இவர்,சேலம் உடையாப்பட்டி மையத்தில் நடந்த தேர்வில் பங்கேற்று,30 மீட்டர் உயரம் கொண்ட மின் கம்பத்தை 6 நிமிடத்தில் ஏறி இறங்கினார்.இதற்கு 8 நிமிடம் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல்,31.5 கிலோ எடைகொண்ட மின்சாதனங்களை தூக்கிக் கொண்டு 100 மீட்டர் தூரத்தை 46 நொடியில் (தகுதி நேரம் 1 நிமிடம்) கடந்தார்.உயர் அழுத்த மின் கம்பிகளை 1.46 நிமிடத்தில் (தகுதி நேரம் 2 நிமிடம்) இணைத்தார்.3 தேர்விலும் தேர்ச்சி பெற்ற லதாவை மேற்பார்வை பொறியாளர் சண்முகம் மற்றும் இதர மின்வாரிய அதிகாரிகள் பாராட்டினர்.இனி எழுத்து தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்றால், பெண் கேங்மேனாக வேலைக்கு சேருவார்.

தமிழகத்தில் முதன் முறையாக கேங்மேன் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற லதா கூறியதாவது: எனக்கு காக்கி யூனிபார்ம் மீது அலாதி பிரியம் உண்டு. அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதை விட பீல்டில் வேலை பார்க்க வேண்டும் என ஆசை இருந்தது. இதை திருமணம் ஆன பின், எனது மாமியார் மலர்க்கொடியிடம் தெரிவித்தேன். அவர்,எனக்கு ஆதரவு கொடுத்து,மின்வாரிய கேங்மேன் தேர்வில் பங்கேற்ற உந்துசக்தியாக இருந்தார்.நான் 150 செ.மீ., மட்டுமே உயரம் கொண்டிருந்ததால், போலீஸ் தேர்வுக்கு செல்ல முடியவில்லை. அதனால்,மற்றொரு காக்கி யூனிபார்ம் வேலையான மின்வாரிய கேங்மேன் பணியிடத்தை தேர்வு செய்து,அதில் பங்கேற்றேன். அதிலும்,தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மேச்சேரியில் உள்ள மின் ஒப்பந்த தொழிலாளர் நிறுவனத்தில் 10 நாட்களுக்கும் மேல் கம்பம் ஏறுவதற்கு பயிற்சி எடுத்தேன்.

தேர்வில் என்னுடன் 10 பெண்கள் பங்கேற்னர். ஆனால்,அவர்களில் யாரும் கம்பத்தில் ஏற வில்லை. ஆனால், நான் மன உறுதியோடு கம்பத்தில் ஏறினேன். இதேபோல்,மற்ற தேர்வுகளையும் தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெற்றேன். தற்போது நான் தான் தமிழகத்தில் முதல் பெண்மணியாக கேங்மேன் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.இதை என்னால் நம்ப முடியவில்லை.மகிழ்ச்சியாக இருக்கிறது.எனது வெற்றிக்கு என் மாமியார்,கணவர் ஆகியோர் காரணமாகியுள்ளனர்.இனி எழுத்து தேர்விலும் வெற்றி பெற்று,பணிக்கு சேருவேன். இவ்வாறு லதா கூறினார். லதாவிற்கு அனுஸ்ரீ என்ற மகளும், விகான் என்ற மகனும் உள்ளனர்.

Tags : Salem ,Tamil Nadu ,time ,Electricity Board , Electricity Board
× RELATED அரசாணை விதிகளை பின்பற்றி மணல் விற்பனை...