×

இந்திய கடற்படையின் முதல் பெண் விமானியாக கொச்சி துறைமுகத்தில் பொறுப்பேற்றார் ஷிவாங்கி

கொச்சி: இந்திய கடற்படையின் முதல் பெண் விமானியான சப் லெப்டினன்ட் ஷிவாங்கி இன்று கொச்சி கடற்படைத் தளத்தில் பொறுப்பேற்றுள்ளார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஷிவாங்கி முசாபர்பூரை சேர்ந்தவர். இவர் தனது பள்ளிப்படிப்பை முசாபர்பூர்நகரில் உள்ள டி ஏ வி பள்ளியில் முடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்திய கடற்படையில் முதல் பெண் விமானியாகச் சேர்ந்தார். எழுமலையில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் கடந்த வருடம் ஜூன் மாதம் அவரை பயிற்சிக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே விமான போக்குவரத்து அதிகாரிகள் பதவியில் சில பெண்கள் பணி ஆற்றி உள்ளனர். ஆனால் முதல் பெண் விமானி ஷிவாங்கி ஆவார். ஆகவே அவருக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

முதற்கட்ட பயிற்சியை முடித்த ஷிவாங்கி இன்று கொச்சி கடற்படை தளத்தில் விமானியாக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே டோர்னியர் கண்காணிப்பு விமானத்தை இயக்கவுள்ளார். வரும் 4-ம் தேதி கடற்படை தின விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்கு இரு நாட்கள் முன்பு கடற்படையின் முதல் பெண் விமானி ஷிவாங்கி பணியைத் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பேசிய ஷிவாங்கி, இந்த நாளுக்காகத்தான் நீண்டகாலமாக காத்திருந்ததாகவும், தன்னுடைய ஆசை இன்று நிறைவேறியது மகிழ்ச்சியளிப்பதாகவும், மூன்றாம் கட்ட பயிற்சியை முடிக்க ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags : Shivangi ,Kochi ,Indian Navy , Indian Navy, First Female Pilot, Kochi, Shivangi
× RELATED கொச்சி விமான நிலையத்தில் ₹6.68 கோடி...