×

கொச்சி விமான நிலையத்தில் ₹6.68 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: கேப்சூல்களில் அடைத்து விழுங்கி கடத்திய வாலிபர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் ₹6.68 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இதை 50 கேப்ஸ்யூல்களில் அடைத்து விழுங்கி கடத்திக் கொண்டு வந்த கென்யா நாட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார். மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு ஒரு விமானம் வந்தது. இதில் கென்யாவைச் சேர்ந்த பயணி ஒருவர் போதைப் பொருள் கடத்தி வந்திருப்பதாக வருவாய் புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து விமானம் வந்தவுடன் அதில் இருந்த கென்யாவைச் சேர்ந்த கரேலா மைக்கேல் நங்கா (33) என்ற பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் பல மணிநேரம் சோதனை நடத்தியும் அவரிடம் இருந்து போதைப் பொருள் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவரை வருவாய் புலனாய்வுத் துறையினர் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று எக்ஸ்ரே பரிசோதனை நடத்தினர். இதில் மைக்கேல் நங்காவின் வயிற்றுக்குள் கேப்சூல்கள் இருப்பது தெரியவந்தது.

உடனே அதை வெளியே எடுக்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து பல நாள் தீவிர முயற்சிக்குப் பின்னர் அவரது வயிற்றில் இருந்து 50 கேப்சூல்கள் வெளியே எடுக்கப்பட்டன. அந்த கேப்சூல்களுக்குள் 668 கிராம் கோகைன் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ₹6.68 கோடியாகும். மைக்கேல் நங்கா எத்தியோப்பியாவில் இருந்து மஸ்கட் வழியாக கொச்சிக்கு இந்த போதைப்பொருளை கடத்திக் கொண்டு வந்து உள்ளார். விசாரணைக்குப் பின் அவரை கைது செய்த வருவாய் புலனாய்வுத் துறையினர் அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கொச்சி விமான நிலையத்தில் ₹6.68 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: கேப்சூல்களில் அடைத்து விழுங்கி கடத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Kochi Airport ,Thiruvananthapuram ,Kerala ,Muscat ,Kochi ,
× RELATED பெண்ணின் பலாத்கார வீடியோவை...