×

சென்னை மாநகரில் நீர் தேங்கும் இடங்களை கண்காணிக்க வேண்டும்: ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னை: சென்னையில் விடிய விடிய மழை பெய்து வருவதால் நீர் தேங்கும் இடங்களை தொடர்ந்து கண்காணிக்க மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய, விடிய மழை பெய்தது. இதன் காரணமாக முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.இவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர். அதிகபட்சமாக கிண்டி, மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் மழை பதிவாகியுள்ளது.இந்த நிலையில் மழை பாதிப்பு தொடர்பாக புகார்களை சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.

இதன்படி 044-25384520, 044-25384530, 044-25384540 ஆகிய தொலை பேசி எண்களிலும், பாதிப்பு தொடர்பான புகைப்படங்களை 9445477205 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தெரிவிக்கலாம். இதைத்தவிர்த்து நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் நீர் தேங்கும் பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது. இதன்படி சென்னை மாநகராட்சி அதிகாரிகள்  அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேங்கும் மழைநீரை உடனடியாக அகற்ற 570 மேட்டார் பம்புகள், 130 ஜெனரேட்டர்கள், மரங்களை வெட்டி அகற்றுவதற்கு 371 மர அறுவை இயந்திரங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது.நேற்று இரவு பெய்த மழையால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 16 இடங்களில் மழைநீர் தேங்கியதாகவும் 11 இடங்களில் மரக்கிளைகள் விழுந்தது. அவை உடனடியாக அகற்றப்பட்டது. இதனிடையே சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளில் கன மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.

Tags : Water Reservoirs ,Chennai City ,Commissioner Prakash Water Reservoirs ,Commissioner Prakash , Water Reservoirs , Monitor , Chennai City, Commissioner Prakash
× RELATED தனிநபர் வாகனங்களில் அரசால்...