×

விளையாடு ‘சீட்டு’ அள்ளலாம் துட்டு

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், பணம் வைத்து சீட்டு விளையாடுவது அதிகரித்துள்ளது. இந்த சீட்டு விளையாட்டுக் கும்பலை பிடிப்பதில் போலீசாரிடம் ஆர்வம் அதிகமிருக்கிறது. காரணம், வளைத்துப் பிடித்து, ‘வண்டியில் ஏறு’ என்றதுமே, கையில் இருக்கிற அத்தனை பணத்தையும் கொடுத்து விட்டு, கால் தெறிக்க ஓடி விடுகிறார்களாம்... அப்படியே ஆளைப்பிடித்து வழக்குப் போட்டாலும், வைத்து விளையாடிய அத்தனை பணத்தையும் கணக்குக் காட்ட வேண்டிய அவசியமில்லை. ஏதோ கொஞ்சத்தைக் காட்டி, எப்ஐஆர் எழுதினாலும் பிடிபட்டவர்கள் வாய் திறக்கப் போவதில்லை. சமீபத்தில், நிலக்கோட்டையிலிருந்து மைக்கேல்பாளையம் வழியாக செம்பட்டி செல்லும் ரோட்டில் காமுபிள்ளைசத்திரம் என்ற இடத்தில் லட்சக்கணக்கான ரூபாய்களுடன் இரவில் ‘பணம் வைத்து வெட்டு சீட்டு’ விளையாடி இருக்கிறார்கள்.

தகவலறிந்து எஸ்ஐ ஒருவரின் தலைமையில் இங்கு வந்த போலீசார், சீட்டாடியவர்களை கைது செய்தனர். அப்போது அங்கிருந்த ₹2.36 லட்சம், சொகுசு காரை பறிமுதல் செய்தனர். ஆனால், எப்ஐஆரில் வெறும் ₹36 ஆயிரத்தை மட்டுமே கணக்குக் காட்டி, மீதிப்பணம் ₹2 லட்சத்தையும் சுருட்டி விட்டனராம்... பின்னர் இந்த தொகையை ‘சீனியாரிட்டி’ அடிப்படையில், ஆளுக்கு ஏற்ப கூடுதல், குறைவென பிரித்துக் கொண்டார்களாம்.

ஒத்துப்போ இல்லை போட்டு கொடுப்பேன்... இன்ஸ்களை மிரட்டும் எஸ்பி ஏட்டு

மலைக்கோட்டை மாவட்டத்தில் நொறுக்கு தீனிக்கு பெயர் போன ஊரில் உள்ள எஸ்பி ஏட்டு அந்த காவல் நிலையத்தையே நடுநடுங்க வைக்கிறார். கடந்த 4 ஆண்டாக அங்கு பணியில் உள்ளவருக்கு ஒத்துப் போனால் மட்டுமே இன்ஸ்பெக்டர்கள் பணியில் நீடிப்பார்கள். இல்லையேல் அவர்கள் மீது ஏதேனும் குற்றச்சாட்டு கூறி இடமாற்றம் செய்ய வைத்துவிடுவார். இதுபோல் இவருக்கு ஒத்துவராத 4 இன்ஸ்களை போட்டு கொடுத்து ஓட வைத்துள்ளார். மேலும் இங்கு வரும் இன்ஸ்கள் தனியே இருப்பதால் ஒரு வகையில் நல்லது என நினைத்து மாற்றலாகி சென்று விடுகின்றனர். இதுவும் எஸ்பி ஏட்டுக்கு சாதகமாக போனது. நான் நினைத்தால் மட்டுமே இன்ஸ்பெக்டர்கள் இந்த காவல் நிலையத்தில் பணியில் நீடிக்க முடியும் என சக போலீஸ்காரர்களிடம் கூறி மிரட்டி வருகிறார். இதுபோல் மாவட்ட காவல் நிலையங்களில் உள்ள ஒருசில எஸ்பி ஏட்டுகள் தீவிர வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக வந்த புகாரை அடுத்து அப்போதைய நகைக்கடை பெயரை கொண்ட எஸ்பி அதிரடியாக அனைவரையும் மாற்றி உத்தரவிட்டார். அதுபோல் தற்போது ஏதேனும் ஒரு மாற்றம் வராதா என காக்கிகள் பெருமூச்சு விடுகின்றனர்.

மது பார்ட்டி வைத்து தனிப்பிரிவு எஸ்ஐ கலெக்‌ஷனில் கலக்கல்

ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் புதிதாக வந்துள்ள ஆனந்தமான பெயர் கொண்ட தனிப்பிரிவு சிறப்பு எஸ்ஐ, பணியில் சேர்ந்த சில வாரங்களிலேயே கல்லா கட்ட தொடங்கி விட்டாராம். சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை செல்போனில் தொடர்பு கொண்டு, 30 ஃபுல் பாட்டில் சரக்கு வேணும் என்று கூறினாராம். இதையடுத்து அந்த நபர்கள் மது பாட்டில்களை ஏற்பாடு செய்து எஸ்ஐயிடம் கொடுத்தார்களாம். பின்னர், தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் மணல் மாபியாக்கள், காட்டன் சூதாடுபவர்கள், சாராய வியாபாரிகளை அழைத்து மது விருந்து கொடுத்தாராம். அப்போது, சுருதி ஏறிய எஸ்ஐ, தாலுகா காவல் நிலையம் எனது கட்டுப்பாட்டில் உள்ளது. எனக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு வழக்கம் போல் உங்கள் வேலைகளை செய்யுங்கள் என ஆதரவு தெரிவித்து கலெக்‌ஷனில் இறங்கியுள்ளாராம். எஸ்ஐ ஆசியுடன், ஆரணி தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாராயம், மணல் திருட்டு, காட்டன் சூதாட்டம் கொடிகட்டி பறக்கிறது. இதுதெரிந்தும் தனிப்பிரிவு போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் தனி வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதனால், ஆரணியில், திருட்டு, கொள்ளை, கோஷ்டி மோதல், கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறதாம்.

விடாதே பிடி... பிடி...! அய்யோ, விடு... விடு...!

ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி., மதுவிலக்கு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, களத்தில் இறங்கிய மதுவிலக்கு போலீசார், கவுந்தப்பாடி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்ற 4 பேரை பிடித்தனர். பின்னர் அவர்களை ஈரோடு மதுவிலக்கு அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். சட்ட விரோத மது விற்பனையில் மாட்டிக்கொண்டவர்கள், உள்ளூர் அமைச்சர் ஒருவருக்கு வேண்டப்பட்டவர்கள் என்பது பின்னர்தான் தெரியவந்தது. ஆனாலும், போலீசார் விடவில்லை. இதற்கிடையில், மேலிடத்தில் இருந்து உத்தரவு வரவே, சில நிமிடங்களில் நான்கு பேரும் விடுவிக்கப்பட்டனர். சற்று நேரத்தில், காவல்துறை மேலிடத்தில் இருந்து விடாதே... பிடி... பிடி... என பிரஷ்ஷர் வர, விடுவிக்கப்பட்ட 4 பேரும் மீண்டும் தூக்கி வரப்பட்டனர். சில மணி நேரத்தில், ஆளும்கட்சி தரப்பில் இருந்து மீண்டும் அழுத்தம் வர, அய்யோ.... விட்டுத்தொலைங்கய்யா... என காவல்துறை அதிகாரிகள் கதற, 4 பேரும் மீண்டும் விடுவிக்கப்பட்டனர். அவ்வப்போது நடக்கும் இந்த ஆடுபுலி ஆட்டம், மதுவிலக்கு போலீசாருக்கு பெரும் குடைச்சல் அளித்து வருகிறது.

புது எஸ்பி ரகசிய படை பீதியில் அதிகாரிகள்

தேனி மாவட்டத்தில் கஞ்சா, பான் மசாலா பொருட்கள் விற்பனை, அனுமதியின்றி மது பாட்டில் விற்பனை என சட்டவிரோத செயல்கள் கொஞ்சம் கூட குறையவில்லை. இப்படி விற்பனை செய்பவர்களில் 90 சதவீதம் பேர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தொழிலில் உள்ளனர். புதிது, புதிதாகவும் பலர் வருகின்றனர். இவர்களது பட்டியல் அனைத்தும் மாவட்ட போலீஸ் நிர்வாகத்திடம் உள்ளது. இருந்தும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் உட்பட நகரின் முக்கிய பகுதியில், பல ஆண்டுகளாக ஒருநாள் கூட இடைவெளியின்றி 24 மணி நேரமும் மது கிடைக்கிறது.

விற்பனை செய்பவர்கள் யார் என்று தெரிந்தும் போலீசார் நடவடிக்கைக்கு தயக்கம் காட்டுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரின் பட்டியல், புதிய எஸ்பியிடம் தரப்பட்டுள்ளது. பட்டியலை பார்த்த எஸ்பி ரகசியமாக ஒரு படையை நியமித்து சிலரை கண்காணிக்கவும், சிலரை கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளாராம். இந்த ரகசிய படையில் யார், யார் இடம் பெற்றுள்ளனர் என்பது எஸ்பிக்கு மட்டுமே தெரியுமாம். இதனால் இவ்வளவு நாட்களாக இவர்களுக்கு வலதுகரமாக இருந்த சில போலீஸ் சிறிய, பெரிய அதிகாரிகள் வெலவெலத்துப்போய் உள்ளனராம்.

வடிவேலு பாணியில் மாங்கனி போலீசை அலறவைத்த நிர்வாகி

மாங்கனி சிட்டியிலுள்ள சில போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் தொடர்பாக விசாரணை நடக்கும் போது, அரங்கேறும் அலப்பறைகளுக்கு பஞ்சமே இல்லையாம். சமீபத்தில் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவர் மீது, ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்ததாக அந்த கட்சியின் ஒரு பிரிவினரே புகார் கொடுத்தாங்களாம். இதே மோசடி தொடர்பாக 3வருஷத்துக்கு முன்னாடியே  கூப்பிட்டு வர்த்தக ஏரியாவிலுள்ள பேட்டை போலீசார் விசாரிச்சாங்களாம். அப்போது குறிப்பிட்ட நாளுக்குள் பணத்ைத கொடுத்து விடுவதாக உறுதி அளித்தாராம். ஆனால் பணம் செட்டில்மென்ட் ஆகலையாம். இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் புகார் வந்ததால், அதிர்ந்த போலீசார் நிர்வாகியை விசாரணைக்கு அழைத்தார்களாம்.

பணத்தை இழந்தவர்கள் சூழ்ந்து நிற்க போலீசார் கேட்ட அனைத்து கேள்விக்கும் ஒரே பதிலை வடிவேலு பாணியில் கூறி, அதிர வைத்தாராம் நிர்வாகி. ‘‘பணத்தை வாங்கியது உண்மை தான். அதை கண்டிப்பாக திருப்பி தருவேன் என்றாராம். எப்போது தருவீர்கள்? என்று போலீசார் கேட்க, வரும் ேபாது தருவேன் என்றாராம். எப்போது பணம் வரும்? என்ற கேள்விக்கு தரும் போது வரும்’’ என்றாராம். இப்படியே சில மணி நேரம், ஓடிய நிலையில் பொறுமை இழந்த ேபாலீசார், போதுமடா சாமி என்று ஒரு கும்பிடு போட்டு நிர்வாகியை கம்பி எண்ண அனுப்பி வைத்தார்களாம். அவரு எப்படி பார்த்தாலும் எங்க கட்சிகாரரு. வேற மாதிரி டீல் பண்றோம் என்று புகார் கொடுத்தவர்களும் கலைந்து சென்றார்களாம்.

Tags : Slip , Play , ticket slip
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும் ,...