×

வரலாறு காணாத அளவில் உச்சிக்கு ஏறிய முருங்கை விலை: வரத்து குறைவால் மவுசு அதிகம்

கம்பம்: வரத்து இல்லாததால் வரலாறு காணாத அளவில் கிலோ 250 ரூபாயை முருங்கைக்காய் தாண்டியுள்ளது. இதனால் ஓட்டல்களில் அவியல், புளிகுழம்பு, சாம்பாரில் இனி முருங்கைக்காய் பார்க்கமுடியாது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மணக்கும் சாம்பார், புளிக்குழம்பு, அவியல் போன்றவற்றில் அதிக சுவையூட்டும் முருங்கைகாய், வீடு, ஓட்டல், சுப விசேஷங்களில் நடைபெறும் சமையலில் இடம்பெறும் முக்கிய காய்களில் ஒன்றாக உள்ளது. முரிங்கா ஒலிபேரா என்ற உயிரியல் பெயர் கொண்ட முருங்கை முதலில் இமயமலை அடிவாரம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கனிஸ்தானில் அதிக அளவு பயிரிடப்பட்டு வந்தது. இது வறட்சியான காலங்களிலும் நன்கு வளரக்கூடிய தன்மை உடையது. தற்போது தென் இந்தியாவில் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம், ஆண்டிபட்டி, எரசை தென்பழனியிலும் அதிக அளவு முருங்கை பயிரிடப்படுகிறது.  

முருங்கை பூ மற்றும் காய் ஞாபக மறதியை போக்கி, நினைவாற்றலைத் தூண்டும். முருங்கை விதை உடலை பலமாக்கும். முருங்கை பூ, முருங்கை இலை நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் என்பதால் தென் இந்திய மக்களின் உணவுப்பழக்கங்களில் ஒன்றிப்போன முருங்கைகாய் தற்போது வரத்து இல்லாமல் போனது. இதனால் கடந்த இருவாரங்களாக உழவர்சந்தைகளில் காண முடியவில்லை. வழக்கமாக ஆப் சீசனில் வடக்கே இருந்து முருங்கைகாய் தென் பகுதிக்கு விற்பனைக்கு வரும். தற்போது அங்கேயும் முருங்கை அழிமானமானதால் விளைச்சல் இல்லை. இதனால் வெளி மார்க்கெட்டில் வரலாறு காணாத வகையில், இதுவரையில் இல்லாத அளவு முருங்கை காயின் விலை கிலோ ரூபாய் 250 முதல் 280 வரை உயர்ந்துள்ளது. இதனால் இனி முருங்கைகாய் சீசன் வரும்வரையில் ஓட்டல்களில் சாம்பார், அவியல், புளிக்குழம்புகளில் முருங்கை காயை பார்ப்பது அபூர்வம் என்ற நிலமை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து காய்கறி வியாபாரி ஒருவர் கூறுகையில்,  இதுவரையில் முருங்கைகாய் இவ்வளவு விலை போனதில்லை. தமிழகத்தில் சீசன் இல்லாதபோதும் வடக்கே இருந்து முருங்கைகாய் விற்பனைக்கு வரும். தற்போது அதுவும் வரவில்லை. கடந்த இருமாதங்களுக்கு முன் கிலே அதிகபட்சமாக 60 முதல் 80 ரூபாய் வரை விறபனை செய்யப்பட்டது. வரத்து குறைவால் இப்போது கிலோ ரூ. 250 க்கு மேல் உள்ளது. சாமானியர்கள் யாரும் இவ்வளவு விலை கொடுத்து முருங்கைகாய் வாங்கி சமையலில் பயன்படுத்த முடியாது. அதுபோல் ஓட்டல்களிலும் முருங்கைகாய் வைத்து சாம்பார் வைக்க மாட்டார்கள். அதனால் விலை குறையும் வரை சாம்பாரில் இனி முருங்கைகாய் நோ சான்ஸ்’’ என்றார்.


Tags : Unprecedented rise ,prices, Mouse,overcrowding
× RELATED பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச்...