×

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி தம்மை கருணை கொலை செய்யுமாறு பிரதமருக்கும், ஐகோர்ட்டுக்கும் கடிதம்

வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் உள்ள நளினி தன்னை கருணை கொலை செய்யுமாறு பிரதமருக்கும், உயர்நீதிமன்றத்துக்கும் கடிதம் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக நளினியும் அவரது கணவர் முருகனும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் வேலூர் சிறையில் சிறை அதிகாரிகள் துன்புறுத்துவதாக கூறி நளினி கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார். இவர் பல்வேறு கட்டங்களாக உண்ணாவிரத போராட்டம் ஈடுபட்டிருந்தாலும் தற்போது மேற்கொண்டுள்ள போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக சிறைத்துறையினர் தன்னை துன்புறுத்துவதாகவும், தன்னை அச்சுறுத்துவதாகவும், மேலும் தமக்கு தமிழக சிறையில் பாதுகாப்பு இல்லை என்பதால் தன்னை புழல் சிறைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என கோரி மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவையும் சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இருந்தபோதிலும் அவர் தன்னுடைய முயற்சியை தளரவிடாமல் தற்போது பிரதமர், உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக உள்துறை செயலாளர் ஆகியோருக்கு கடிதங்களை எழுதியுள்ளார். அதில் 28 ஆண்டுகளாக சிறையில் வாழ்ந்து விட்டதாகவும், விடுதலைக்காக பல ஆண்டுகளாக போராடியும் விடுதலை கிடைக்காத விரக்தியில் இருப்பதாகவும், ஆதலால் தம்மை கருணை கொலை செய்துவிடுங்கள் என்றும் உருக்கமான கடிதத்தினை எழுதியுள்ளார். இக்கடிதத்தினை சிறைத்துறை அதிகாரிகள் மூலமாக மூவருக்கும் அனுப்பியுள்ளார். இதனை வேலூர் சிறையில் நளினியை சந்தித்து பேசிய அவரது வழக்கறிஞர் புகழேந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


Tags : Nalini ,Rajiv Gandhi ,court , Rajiv Gandhi, Murder, Nalini, Killing, Prime Minister, Icord, Letter
× RELATED வெப்பத்தால் ஏற்படும்...