பணிபுரியும் ஊரில்தான் விஏஓ வசிக்க வேண்டும் என்ற விதியை ரத்து செய்யக்கோரி வழக்கு : உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பணிபுரியும் கிராமத்தில்தான் விஏஓ வசிக்க வேண்டும் என்ற விதியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நடைமுறை சிக்கல் ஏற்பட்டால் அரசிடம் மனு கொடுக்கலாம் என்றும் மனுவை அரசு சட்டப்படி பரிசீலிக்கலாம் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள் (விஏஓ) தாங்கள் பணிபுரியும் கிராமங்களிலேயே வசிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மினிஸ்டிரியல் சர்வீஸ் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதியால் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, பெண் அலுவலர்களுக்கு இது பெரிய சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விதிகளை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தமிழக அரசு கவனத்தில் கொள்வதில்லை. எனவே, இந்த விதியை சட்ட விரோதம் என்று அறிவித்து உத்தரவிட வேண்டும் எனக்கோரி கிராம நிர்வாக அலுவலர்களான பிரகாஷ், சுதா உள்ளிட்ட 6 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: இதேபோன்ற வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், கிராம வருவாய் ஆவணங்களை கையாள்வது, சொத்து வரி உள்ளிட்ட வரிகளை வசூலிப்பதில், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை வழங்குவது, சொத்து மதிப்பீடு செய்வது போன்ற நடைமுறைகளை சம்பந்தப்பட்ட கிராமத்தில் இருந்தால்தான் செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல் கொலை, தற்கொலை, சந்தேக மரணம் போன்றவை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துதல், வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களினால் ஏற்பட்ட சேதம், நடவடிக்கை குறித்து அரசுக்கு தெரியப்படுத்துவதற்கும் அவர்கள் சம்பந்தப்பட்ட கிராமத்தில் வசிப்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

மனுதாரர்கள், நடைமுறை சிக்கல் குறித்து தெரிவித்துள்ளனர். அவர்களின் பணி நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை என்றும், அருகில் உள்ள ஊரில் குடியிருந்தால் அரசு நடவடிக்கை எடுக்கிறது. அதே கிராமத்தில் வசிப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளது என்பதால் அரசு இதில் சலுகையும் காட்ட வேண்டும். அப்போதுதான் இந்த விதியை கொண்டு வந்ததின் நோக்கம் நிறைவேறும் என்றும் வாதிடப்பட்டுள்ளது. எனவே, நடைமுறை சிக்கல் ஏதாவது இருந்தால் மனுதாரர்கள் அரசிடம் மனு கொடுக்கலாம். அதை அரசு சட்ட விதிகளுக்கு உட்பட்டு பரசீலிக்கலாம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>