மொபைல் அழைப்பு, டேட்டாக்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்க டிராய் மறுப்பு

புதுடெல்லி: மொபைல் அழைப்பு மற்றும் டேட்டா பயன்பாட்டுக்கு குறைந்த பட்ச கட்டணம் நிர்ணயிக்க டிராய் மறுத்து விட்டது. இதனால், நிறுவனங்கள் இஷ்டம்போல் கட்டணம் நிர்ணயிக்க வழி வகுக்கப்பட்டுள்ளது.  ஜியோ இலவச சேவை அறிமுகம் செய்ததில் இருந்தே தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் கடுமையாக சரிந்துள்ளது. இந்த நிலையில், நிறுவனங்களுக்கு இடையிலான இணைப்பு கட்டணமாக ஒரு நிமிடத்துக்கு 6 காசு வசூலிப்பதாக அறிவித்தது. இதற்கு  பிற நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் டிராய் ஆலோசனை நடத்தியது. இதில், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு போதுமானதாக இல்லாததால் தரமான சேவையை வழங்குவதில் இடர்பாடு உள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளியில் அலைக்கற்றை ஏலம் நடத்த வேண்டும்.

அதோடு, கட்டண போட்டி காரணமாக கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏஜிஆர் கட்டண முறை குறித்து மறு வரையறை செய்ய வேண்டும். நிறுவனங்களுக்கு இடையிலான இணைப்பு கட்டணத்தை (ஐயுசி) ஜனவரிக்கு பிறகு நீக்கக்கூடாது என கோரிக்கை வைத்தன. ஆனால், இந்த கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என ஜியோ வலியுறுத்தியது.  இதுபோல் அழைப்பு மற்றும் டேட்டாக்களுக்கு குறைந்த பட்ச கட்டண நிர்ணயம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் அடுத்த மாதம் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன.  இந்த சூழ்நிலையில், குறைந்த பட்ச கட்டணம் நிர்ணயிக்க டிராய் மறுத்து விட்டது. எனவே, கட்டணங்கள் அடுத்த மாதம் உயர்வது தவிர்க்க முடியாதது ஆகிவிடும். இஷ்டத்துக்கு கட்டணம் நிர்ணயிக்க இது வழி வகுக்கலாம் என கூறப்படுகிறது.

Related Stories:

>