×

மணப்பெண்ணின் விலை ரூ. 7 கோடி!

நன்றி குங்குமம் தோழி

துபாய் வளம் மற்றும் செழிப்புக்கு பெரிய உதாரணமான நாடு. ஆனால் அங்கு சமையல் கலைக்கும் பெரிய அளவில் மதிப்பு கொடுத்து வருகிறார்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. கடந்த ஆண்டு துபாயில் திருமணம் குறித்த கண்காட்சி நடைப்பெற்றது. அதில் எல்லாரையும் கவர்ந்தவர் வெண்ணிற உடையில் மிடுக்காக தோற்றமளித்த இந்த மணப்பெண். பார்ப்பதற்கு மணப்பெண் போல இருக்கும் இவர் உண்மையில் உயிருள்ள மணப்பெண் கிடையாது.

அந்த கண்காட்சிக்காக வடிவமைக்கப்பட்ட மணப்பெண் போன்ற கேக். இதனை லண்டனை சேர்ந்த டெப்பி விங்காம் என்ற டிசைனர் வடிவமைத்துள்ளார்.
ஆள் உயர வடிவில் நிற்கும் இந்த கேக்கின் விலை கோடிக்கணக்கில் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் உண்மை. ‘‘மில்லியன் டாலர் பிரைட்’ என்று அழைக்கப்படும் இந்த கேக்கின் முக்கிய அம்சமே அதில் பதிக்கப்பட்டு இருக்கும் 5 வெள்ளை வைரக் கற்கள் தான். அதனை மணப்பெண்ணின் தலை அலங்காரத்திற்காக பயன்படுத்தி இருக்கேன். அதனால் தான் இதன் விலை 7 கோடியே 10 லட்சத்து 11 ஆயிரத்து 500 ரூபாய்’’ என்கிறார் டெப்பி.

120 கிலோ எடையும் 182 சென்டி மீட்டர் உயரமும் கொண்ட இந்த கேக்கை உருவாக்க 10 நாட்கள் ஆனதாம். எந்திரங்கள் எதையும் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க கைகளால் இதனை செதுக்கியுள்ளார். ‘‘50 கிலோ ஃபாண்டென்ட், 1000 முட்டைகள் மற்றும் 25 கிலோ சாக்லெட் கொண்டு இந்த கேக்கினை வடிவமைச்சேன். இதில் அதன் கை, முகம், விரல்கள் மற்றும் மேல் பாகம் அனைத்திற்கும் சாக்லெட் பயன்படுத்தி இருக்கேன். கேக் கலவையை பேக் செய்து எடுக்கவே ஐந்து நாட்கள் ஆனது. இதற்கு நான் லுல்வான்னு பெயர் சூட்டி இருக்கிறேன்.

அரபியில் முத்து என்று அர்த்தம். 5000 பூவேலைப்பாடுகள் மற்றும் முத்துக்கள் எல்லாம் கைகளாலே செய்து இருக்கேன். 50 கிலோ மணப்பெண்ணின் கவுனுக்காக கிரீம் பயன்படுத்தி இருக்கேன். இது முழுக்க முழுக்க கேக் என்பதால், கேக்கின் அனைத்து பகுதியையும் சாப்பிடலாம். மேலும் கண்காட்சி முடிந்த பிறகு அனைவருக்கும் இதனை சாப்பிடவும் வழங்கினோம்’’ என்றார் டெப்பி விங்காம்.

தொகுப்பு: கோமதி

Tags : bride ,Price , Dubai, Brides, Price, 7 crores
× RELATED குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் எங்கே?...