×

சிலம்பம் சுத்துவோமா?

“தற்காப்புக் கலை இருந்ததால்தான் இன்றைக்கு உலகில் மனித இனமே மிச்சமிருக்கிறது” என்று புதிய பரிணாமக் கோட்பாட்டை சொல்கிறார் ‘சகா சிலம்பக் கூடம்’ அமைப்பைச் சேர்ந்த கார்த்திக் ராஜா.“அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்த விளையாட்டுகளை எல்லாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். சிலம்பம் நம்மூரில் உருவான தற்காப்பு விளையாட்டுக் கலை. நம்ம மண்ணோட பெருமை. நம்ம கண்ணு முன்னாடியே சிலம்பக் கலையின் நிலைமை மோசமாகிட்டு போகிறதை பார்த்துக்கிட்டு எப்படி சும்மா இருக்க முடியும்?” என்று ஆவேசமாக கேட்கிறார்கள் இந்த அமைப்பைச் சார்ந்த கோபி, தர்மராஜ் மற்றும் கார்த்திக்.

‘சகா சிலம்பக் கூடம்’ மூலமாக இதுவரை மூன்றாயிரம் பேருக்கும் மேலாக சிலம்பக் கலையை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் இவர்கள். சென்னையில் மட்டுமே பத்து இடங்களில் பயிற்சி கொடுக்கிறார்கள். பயிற்சிக்கு பெரும்பாலும் கட்டணம் வசூலிப்பதில்லையாம். விரைவில் இரண்டாயிரம் பெண்களை ஒரே மேடையில் ஏற்றி சிலம்பம் சுற்றவைக்கும் சாதனையை நிகழ்த்த இருக்கிறார்கள். இருபது மாவட்டத்தில் பயிற்சி கொடுக்கிறார்கள். சென்னை லயோலா கல்லூரியில் ஆறு ஆண்டுகளாக மாணவர்களுக்கு சிலம்பம் கற்றுக் கொடுக்கிறார்கள். சிலம்பம் குறித்து அவர்களிடம் பேசினோம்.

வெள்ளையர்களை மிரட்டிய சிலம்பம்!

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருக்கும் போது சிலம்பக் குச்சி கையில் இருப்பதை பார்த்தாலே கைது செய்வார்கள். அல்லது சுடுவார்கள். அதனால் தான் அலங்காரச் சிலம்பத்தை உருவாக்கினார்கள் தமிழர்கள். அலங்காரச் சிலம்பம் என்பது குச்சியில் ரிப்பன் கட்டியோ, நெருப்பைப் பற்ற வைத்தோ சிலம்பம் சுற்றுவது. இப்படிச் சிலம்பம் சுற்றியதால் இதை ஆங்கிலேயர்கள் பொழுது போக்கு நிகழ்சியாக பார்த்தார்கள். அலங்காரச் சிலம்பம் உருவாக்கியதற்கு காரணம் ஆங்கிலேயர்களை ஏமாற்றுவதற்குதான். அதே சமயத்தில் போர் சிலம்பத்தையும் தமிழர்கள் கைவிடவில்லை. போர் சிலம்பம் ஆங்கிலேயர்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அதனால் ஆங்கிலேயர்களுக்கு தெரியாமல் பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டி பௌர்ணமி வெளிச்சத்தில் சிலம்பப் பயிற்சி எடுத்தார்கள். இப்படி
எல்லாம் தப்பிப் பிழைத்தது தான் சிலம்பம்

பொன்னேரி சிங்கங்கள்!


“லயோலா கல்லூரியில் நான் படிப்பதற்கு வாய்ப்பை கொடுத்ததும், சட்டக் கல்லூரியில் படிப்பதற்கான வாய்ப்பைப் பெற்று தந்ததும் சிலம்பம் தான்.  பொன்னேரி சிலம்பக் கூடத்தில் ஆசான் வீ.ஹரிதாஸ் அவர்களிடம் பதினைந்து வருடமாக சிலம்பம் கற்றுக் கொண்ட பிறகு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. சிலம்பக் கலையின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொண்ட பிறகு என் நண்பர்களோடு சேர்ந்து தொடங்கப்பட்டது தான் ‘சகா சிலம்பக் கூடம்’. நாங்கள் மூன்று பேருமே திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்தவர்கள். எங்களுடைய ஆசான் ஹரிதாஸ் டீக்கடை நடத்தி வந்தாலும் எங்களுக்கு சிறந்த சிலம்பப் பயிற்சியை கொடுத்தார். தன் சொந்தப் பிள்ளைகளுக்கு வழிகாட்டுவதை போல் ஊர் ஊராக எங்களைக் கூட்டிச் சென்று சிலம்பப் போட்டிகளில் பங்கு பெற வைத்தார். நான் சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். தர்மராஜ், கோபி ஆகிய இருவரும் டிப்ளமோ முடித்திருக்கிறார்கள்” என்கிறார் கார்த்திக்ராஜா.

பெண்களும் கற்கலாம்!


கடந்த இரண்டு வருடமாக பெண்கள், இந்தக் குழுவினரிடம் சிலம்பம் கற்றுக் கொள்ள வருகிறார்கள். ஆண்களை விட பெண்களுக்கு சிலம்பம் மீது ஆர்வம் அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. சிலம்பம் என்றாலே கொம்பு வச்சி சுற்றுவது என்று நினைக்கிறார்கள். குறிப்பாக பெண்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை வைத்து தங்களை எப்படி எல்லாம் தற்காத்துக் கொள்ளலாம் என்று சிலம்பம் வடிவத்தில் சொல்லிக்கொடுக்கிறார்கள்.எல்லா வயதினரும் சிலம்பம் கற்கலாம். மூன்று வயதிலிருந்தே சிலர் கற்று வருகிறார்கள். சிலம்பம் கற்கும் குழந்தைகளுக்கு அடிப்படை ஒழுங்குமுறைகளும் சொல்லிக் கொடுக்கப்படும். வயதானவர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள சிலம்பம் கற்கிறார்கள்.

சிலம்பக் கலையின் எதிர்காலம்?


“இன்றைய தலைமுறைகள் ஆர்வத்தோடு சிலம்பம் கற்றுக்கொள்வதை பார்க்கும் போது சிலம்பம் எப்போதும் இருக்கும் என்கிற நம்பிக்கையைத் தருகிறது. ஒலிம்பிக் போட்டியில் சிலம்பம் இடம் பெறுவதில்லை. அப்படி இடம் பெற்றால் சிலம்பம் தான் அதிகமான பதக்கங்களை வெல்லும் என்று உறுதியாக சொல்லுவேன். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் இந்திய அளவில் தங்கப் பதக்கம் வாங்கினாலும் குறைந்த ரொக்கம் தான் தருகிறார்கள். விளையாட்டில் பதக்கங்கள் வாங்குபவர்களுக்கு கல்லூரி முடித்தவுடன் அரசாங்க வேலை கொடுக்க வேண்டும். ஆனால் சிலம்பக் கலைஞர்களுக்கு அரசாங்கத்தில் எந்த வேலை வாய்ப்பும் கிடைப்பதில்லை” என்று ஆதங்கப்படுகிறார்கள் ‘சகா சிலம்பக் கூடம்’ அமைப்பினர்.
தமிழ் கலை அழியக்கூடாது என்பதற்கும், உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள் வேலை வாய்ப்புக்காகவும், பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் நிகழ்த்தி காட்டுவதற்காகவும் வருகின்றனர்.

சிலம்பத்தால் ஆன பயன் என்ன?

நீங்கள் பத்து கிலோமீட்டர் ஓடி உடற்பயிற்சி செய்வதற்கும் ஒரே இடத்தில் நின்று சிலம்பம் சுற்றுவதற்கும் பெரிய வேறுபாடும் இல்லை. முக்கியமாக சிலம்பம் ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கும். மனதை ஒருமுகப்படுத்தும். எதையும் எதிர்க்கக்கூடிய மன தைரியத்தைக் கொடுக்கும்.

வெளிநாடுகளில் சிலம்பம்?

வெளிநாட்டில் வாழுகின்ற தமிழர்கள் மத்தியில் தமிழர் கலைகளுக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. பொங்கல், தீபாவளி நேரங்களில் சொந்த ஊரில் இருக்கின்ற உணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக அங்கு இருக்கும் தமிழ் சங்கங்களில் சிலம்ப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார்கள். வேலைக்காக வெளிநாடு போய் அங்கேயே நிரந்தரமாய் தங்கிவிட்டதால் அவர்களுடைய குழந்தைகளுக்கு நம்முடைய கலைகளைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்படி முதன்முறையாக சிலம்பக் கலை நிகழ்வை காணும் அந்தக் குழந்தைகள் பிரமித்துப் போகிறார்கள்.

சிலம்பில் எத்தனை வகை?


போர் சிலம்பம், அலங்காரச் சிலம்பம் என்று இரண்டு வகை இருக்கிறது. போர்  சிலம்பத்தில் கேடயம், கத்தி, வால் வீச்சி, சுருள் வால், மான்கொம்பு,  குத்துவரிசை போன்றவைகள் வரும். அலங்காரச் சிலம்பம் என்பது பலூன்,  ரிப்பன் போன்றவைகளைச் சிலம்பக் குச்சியில் கட்டி சுற்றுவது. நெருப்பை பற்ற  வைத்து சுற்றுவது.

அரசு என்ன செய்ய வேண்டும்?

சிலம்பம் என்றில்லை. பொதுவாகவே பாரம்பரிய தமிழ்க் கலைகளின் நிலையை பார்க்கும் போது கவலை கொள்ளும் நிலைதான் இருக்கிறது. தமிழ்க் கலைகள் மீது மக்களுக்கு இருக்கும் உற்சாகம், அரசாங்கத்துக்கும் இருந்தால் இக்கலைகள் வாழும். அரசிடமிருந்து உதவியும், ஊக்கத்தொகையும் கிடைக்கும் போது நிறைய இளைஞர்கள் நம் கலைகளை கற்றுக்கொள்ள ஆர்வமாக வருவார்கள்.

தீக்‌சா தனம்


Tags : Chilambu , Chilamba, Women, Youth, Art
× RELATED தீப்பெட்டியை எரிக்கும் சீன லைட்டர்கள்