×

முதலை புராணம்!

டைனோசரோடு வாழ்ந்தது.. நம்மோடும் வாழ்கிறது!

உலகம் தோன்றியதிலிருந்து எவ்வளவோ உயிரினங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன. அவற்றில் நாம் அறிந்தவை வெகு சிலதான். மனிதன் தோன்றுவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய விலங்குகளில் ஒரு சிலதான் இன்னும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன. அந்த உயிரினங்களில்  முதலைகளுக்கும் தனி இடம் உள்ளது.  முதலை என்று சொல்லும்போது நம் மனதில் ஏதோ ஒரு வித எண்ணம் தோன்றும். டைனோசர், வாழ்ந்த காலத்திலேயே முதலைகள் இருந்தன. இப்போது நாம் வாழும் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலும் வாழ்ந்துகொண்டிருக்கும்  உயிரினம் முதலை.

முதலைகளுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கிறது சென்னை முதலை பண்ணை, சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியே பயணிக்கும் போது, கோவலத்திலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவு பயணித்தால் முதலை பண்ணையை அடைந்துவிடலாம். பண்ணை என்ற பெயருக்கு ஏற்றார் போல் அதன் அமைப்பும் அமைந்திருக்கிறது. முதலைகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ள முதலைகளை பற்றி கல்வி ஆலோசகராக பணியாற்றும் ஸ்டெபி-யை சந்தித்தோம். முதலைகளை பற்றி அவர் கூறிய தகவல்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தது.

ஆயிரக்கணக்கில் முதலைகள்!


சென்னை முதலை பண்ணை (Madras Crocodile Bank) 1976ஆம் ஆண்டு ரோமுலஸ் விடேகர் என்பவரால் தொடங்கப்பட்டது. இந்த முதலை பண்ணையை தொடங்கும்போது பன்னிரண்டு  முதல் பதினைந்து  முதலைகள் மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது சுமார் இரண்டாயிரம் முதலைகள் இருக்கின்றன. உலகம் முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட முதலை வகைகள் உள்ளன. அவற்றில் பதினாறு முதலை வகைகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.இந்தியாவில் பரவலாக மூன்று வகையான முதலை இனங்கள் காணப்படுகிறது. அவற்றில் ஒன்றுதான் சதுப்பு நிலத்தில் வாழும் முதலைகள். இவை பெரும்பாலும் சதுப்பு நிலம் (Marsh Land)  காணப்படுகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட சதுப்பு நில முதலைகள் இருக்கின்றன.

கரியால் முதலைகள் (Garial) அழிவின் விளிம்பில் உள்ள முதலை இனம் ஆகும். இது பரவலாக சம்பல் ஆற்றுப் படுகைகளில் காணப்படுகிறது. இதன் மூக்கு வி (V) வடிவத்தில் உள்ளதால் ஆண், பெண்  வகைகளை எளிதாக அறியமுடிகிறது. இது மீன்களை உணவாக சாப்பிடும் பழக்கம் கொண்டது. இதனால் மற்ற முதலைகளை போல் கடினமான உணவுவகைகளை உட்கொள்ள முடியாது. இது (Critical Endangered List) அழிவின் விளிம்பில் உள்ளதால் பாதுகாக்கப்பட்ட  முதலைகள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. மூன்றாவதாக உப்பு நீரில் (Salt water) வாழும் முதலைகளும் இங்கு உள்ளது, இவை பன்னிரண்டு அடி முதல் இருபத்தைந்து  அடி வரை வளரக் கூடியவை. இங்கு ஜாஷ் (Josh) என்ற முதலை உள்ளது. அது பதினேழு அடி பெரியது. உப்பு நீர் முதலைகளில் நான்கு அடி மட்டும் வளரும் முதலைகளும் உண்டு.

முதலைக் கண்ணீர்?

“டைனோசர் காலத்திலிருந்தே வாழ்ந்து வரும் அரியவகை விலங்கினமான முதலைகள் பாதுகாக்கப்பட வேண்டும். முதலைகளை வேடிக்கை பார்ப்பதே மகிழ்ச்சியான பொழுதுபோக்கு. அவற்றின் வாய் பெரும்பாலும் திறந்தே இருக்கும் வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் முதலைகளுக்கு உணவு அளிப்பதை முதலைப்பண்ணையில் நேரடியாகவே மக்கள் காணலாம்” என்று நம்மிடம் சொன்னார் ஸ்டெபி.“முதலைக் கண்ணீர் என்கிறார்களே, அது என்ன?” என்று அவரிடம் கேட்டபோது, “முதலை அழுமா என்றெல்லாம் தெரியாது. ஆனால், அவை ஒன்றும் அப்படி மனிதர்களைவிட மோசமாகவெல்லாம் நடிக்காது” என்று சிரித்தவாறே சொன்னார்.திங்கட்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் முதலை பண்ணை  திறந்திருக்கும். சென்னைக்கு வருபவர்கள் தவறவிடக்கூடாத இடங்களில் இதுவும் ஒன்று.

-நீல்கமல்

Tags : Crocodile Legend , Crocodile, creatures, salt water
× RELATED நரம்பு மண்டலங்களை பாதிக்கும் ஸ்மோக்...