×

No VACANCY FOR LADIES?

உலகிலேயே நன்கு முன்னேறிய நாடான அமெரிக்காவிலேயேகூட 2050 வாக்கில்தான் நூற்றுக்கு நாற்பத்தியேழு பெண்கள் வேலைக்கு போகக்கூடியவர்களாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டிருக்கிறது (ஆதாரம் : Bureau of Labor Statistics, United States Department of Labor).அப்படியெனில் இந்தியாவில்?நிலைமை படுமோசம்தான்.பணிகளின் பெண்கள் பங்கேற்பு என்கிற அடிப்படையில் பார்த்தால் மத அடிப்படைவாத நாடுகளான சவுதி அரேபியா, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளை ஒப்பிடும்போது நாம் கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் மலேசியா, பஹ்ரைன் போன்ற நாடுகள் நம்மைவிட மேலாக இருக்கின்றன. உலகிலேயே மிக மோசமான வறுமைக்குள்ளாகியிருக்கும் நாடான சோமாலியா கூட நம்மை ஒப்பிடுகையில் இந்த விஷயத்தில் கொஞ்சம் மேல்தான்.இந்தியாவில் பதினைந்து வயதுக்கு மேற்பட்ட பெண்கள் என்று எடுத்துக் கொண்டால் நூற்றுக்கு முப்பது பேர்தான் வேலைக்கு போகிறார்கள். இந்த சதவிகிதத்தை எழுபது ஆண்டுகளுக்கு முன்பாகவே அமெரிக்கா எட்டிவிட்டது. தொண்ணூறுகளில் நடைமுறைக்கு வந்த உலகமயமாக்கலின் தாக்கத்துக்கு வெகுவேகமாக தன்னை தயார்படுத்திக் கொண்ட இந்தியா, பெண்களை பணிக்கு சேர்த்துக் கொள்வதில் மட்டும் பிற்போக்குத்தனமாக இருப்பதின் ரகசியம் என்னவென்று தெரியவில்லை.

வளர்ந்துவரும் பொருளாதார நட்சத்திரங்களான நாடுகள் என்று அறியப்படும் பிரிக்ஸ் அமைப்பு (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சைனா, தென்னாப்பிரிக்கா) நாடுகளிலேயே பெண்களின் பங்கேற்பு பணியிடங்களில் மிகக்குறைவாக இருப்பது இந்தியாவில்தான்.இப்போதே இப்படிதான் என்றால் எதிர்காலம் இன்னும் கொடுமையாக இருக்கக்கூடும். விவசாயப் பொருளாதார நாடுகளில் நகர்ப்புற பெண்களை ஒப்பிடுகையில் கிராமப்புற பெண்களின் பங்கேற்புதான் கூடுதலாக இருக்கும். நம் நாட்டில் சரிபாதி பணிகள் விவசாயத்துறை சார்ந்ததாகதான் இருக்கிறது. ஆனால் சமீப வருடங்களாக இந்தியப் பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்கு குறைந்துக்கொண்டே வருகிறது. இந்த இடத்தை உற்பத்தித்துறை (manufacturing sector) பிடித்து வருகிறது. அப்படியெனில், நகர்ப்புறத்தில் வேலை பார்க்கக்கூடிய பெண்களின் விகிதம் கூடியிருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக அது நிகழவேயில்லை. உற்பத்தித்துறையில் புதியதாக உருவாகக்கூடிய பணிவாய்ப்புகளையும் ஆண்களே அபகரித்துக் கொள்கிறார்கள். பெண்களுக்கான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பதையே 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்துக் காட்டுகிறது.

கிராமப்புறங்களில் வேலை பார்க்கும் பெண்களின் சதவிகிதத்தை ஒப்பிடும்போது, அதில் பாதி சதவிகிதமே நகர்ப்புறங்களில் வேலை பார்க்கும் பெண்களின் சதவிகிதமாக இருக்கிறது.2001 கணக்கெடுப்பை ஒப்பிடுகையில் 2011ல் நிலைமை கொஞ்சம் பரவாயில்லைதான். 2001ல் நகர்ப்புறங்களில் வேலை பார்க்கும் பெண்களின் சதவிகிதம் 11.9% ஆக இருந்தது. இது அடுத்த பத்தாண்டுகளில் 15.4% ஆக உயர்ந்திருக்கிறது. இந்த உயர்வுக்காக
முழுமையாக மகிழ்ந்துவிட முடியவில்லை. ஏனெனில் நகர்ப்புறங்களில் வீட்டுவேலை பார்க்கும் பெண்களின் எண்ணிக்கைதான் உயர்ந்துவருகிறது. இந்த பத்தாண்டுகளில் வீட்டுவேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை மட்டுமே தோராயமாக பதினைந்து லட்சம் என்கிற எண்ணிக்கையில் அதிகரித்திருக்கிறது. வீட்டு வேலை என்பது அமைப்புசாரா பணிதான். எனவே இந்திய தொழிலாளர் சட்டத்தின் உரிமைகள் அவர்களுக்கு முறையாக கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் இதை பெண்களுக்கான ‘கேரியர்’ என்று வகைப்படுத்த முடியாது.நிலைமை இப்படியெனில், இந்தியாவில் பெண்களுக்கு வேலைவாய்ப்பே இல்லையா?

காலையில் மின்சார ரயில்களில் பெண்களுக்கான சிறப்புப் பெட்டிகளில், லேடீஸ் ஸ்பெஷல் பேருந்துகளில் எல்லாம் கூட்டமாக வருகிறவர்கள் யார். ஹேண்ட்பேக் மாட்டிக்கொண்டு அரக்க பரக்க அலுவலகத்துக்கு விரைந்துக் கொண்டிருப்பவர்கள் யாரென்ற கேள்வி நமக்கு உடனடியாக எழக்கூடும்.
இது ஒரு மாயத்தோற்றம். பத்திரிகை, டிவி, சினிமாவென்று அத்தனையிலும் பெண்களையே பார்த்துக் கொண்டிருப்பதால் அவர்களும் ஆண்களுக்கு சமமான பணிவாய்ப்புகளை பெற்றிருப்பதைப் போன்ற ஓர் எண்ணம் நமக்கு வலுப்பட்டிருக்கிறது. உண்மையில் அவர்கள் இருக்கும் இடங்களைக் காட்டிலும், இல்லாத இடங்கள்தான் அதிகம்.டாக்டர், என்ஜினியர் மாதிரி புரொஃபஷனல்களை தவிர்த்து பட்டப்படிப்பு வரை படித்த பெண்கள்தான் தனியார் அலுவலகப் பணியாளராகவோ, வங்கியிலோ, அரசுப்பணியிலோ, ஆசிரியராகவோ அல்லது ஐ.டி. துறையிலோ, கால்சென்டர் பணிகளிலோ பணியாற்றுகிறார்கள். ஓய்வு பெறும்வரை பணியாற்றக்கூடிய ‘நிரந்தர’ வாய்ப்புகள் இவர்களுக்குதான் உண்டு. இவர்களுக்கு அடுத்த நிலையில் பள்ளிப்படிப்பு வரை படித்தவர்கள் எக்ஸ்போர்ட் நிறுவனங்கள், கடைகளில் விற்பனைப் பெண்கள் போன்ற தற்காலிக பணிகளை செய்கிறார்கள். போதுமான கல்வியறிவு பெறாதவர்கள் வீட்டுவேலை, சமையல், கட்டிடவேலை என்று கூலிக்கு பணியாற்ற வேண்டியிருக்கிறது. இந்தியாவில் பணிபுரியும் பெண்கள் இந்த மூன்று வகைகளில் அடங்கி விடுகிறார்கள். தொழிற்சாலைகளிலோ அல்லது பேருந்து, லாரி ஓட்டுவது போன்ற கடினவேலைகளிலோ அவர்கள் ஈடுபட விரும்பினாலும், சேர்த்துக்கொள்ளப் படுவதில்லை.

டர்னராகவோ, ஃபிட்டராகவோ, என்ஜினியராக சைட்டில் வேலை பார்க்கும் பெண்கள் எத்தனை பேரை நீங்கள் அறிவீர்கள். பெண்கள் ஓட்டும் பேருந்துகளில் பயணித்திருக்கிறீர்களா. கால்டாக்ஸி டிரைவர்களாக எங்காவது பெண்களை பார்த்திருக்கிறீர்களா. இப்படியே யோசித்துக் கொண்டு போனால் எத்தனை துறைகளில் பெண்களை உள்ளே வரவிடாமல் நாம் வேகத்தடை போட்டிருக்கிறோம் என்பது தெரியும்.இந்தியப் பெண்கள் உலகிலேயே மிகத்திறமையானவர்கள் என்று அமெரிக்காவின் சென்டர் ஃபார் டேலன்ட் இன்னோவேஷன் என்கிற கணக்கெடுப்பு நிறுவனம் புகழாரம் சூட்டுகிறது. குடும்பச் சுமைகளையும், பணிச்சுமைகளையும் முதுகில் சுமந்து அந்தரங்கத்தில் வாழ்க்கைக் கயிற்றில் அவர்களைப் போல சாமர்த்தியமாக பேலன்ஸ் செய்து நடப்பவர்கள் வேறு யாருமில்லை. அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் நாடுகளை ஒப்பிடும்போது பணியில் மிகக்கவனத்தோடும், கூடுதல் உழைப்பை செலுத்தும் முனைப்பை காட்டுவதிலும் இந்தியப் பெண்களே தலைசிறந்தவர்களாக இருக்கிறார்கள்.இந்தியாவின் முதல் இருநூற்றி ஐம்பது நிறுவனங்களை பட்டியலிட்டால் அதில் பத்து சதவிகித நிறுவனங்களின் தலைமைப்பொறுப்பை பெண்கள் ஏற்று, திறம்படசெயலாற்றுகிறார்கள். சமயங்களில் ஆண்கள் பொறுப்பேற்று நடத்தும் நிறுவனங்களை காட்டிலும் இந்நிறுவனங்கள் மிகச்சிறப்பாக நடைபெறுகின்றன என்பதும் கூட உண்மைதான்.

அப்புறம் என்னதான் பிரச்சினை?

ஏகப்பட்ட பிரச்சினைகள். இந்தியாவின் ஆண்-பெண் விகிதமும் ஒரு காரணம். ஆயிரம் ஆண்களுக்கு தொள்ளாயிரத்து நாற்பது பெண்கள்தான் என்பது தேசிய சராசரி. நகர்ப்புறங்களில் இந்த விகிதம் இன்னும் கூடுதல். பத்து லட்சம் பேருக்கு மேல் வசிக்கக்கூடிய நகரங்களில் ஆயிரத்துக்கு தொள்ளாயிரத்து பன்னிரெண்டுதான். தலைநகர் டெல்லியிலேகூட ஆண்கள் ஆயிரம் பேர் என்றால், பெண்கள் எண்ணூற்றி அறுபத்தேழு பேர்தான்.நாம் பெருமையாக முன்வைக்கக்கூடிய கலாச்சாரமும் இந்த விஷயத்தில் பெண்களுக்கு எதிராகவே இருக்கிறது. குடும்பத்தை பார்த்துக் கொள்வது பெண்களின் வேலை என்கிற நம்முடைய மரபு, அவர்களை பொருளாதார ஆதாயப் பணிகளிலிருந்து தூர விலக்கி வைக்கிறது.

குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது என்பதே மலைக்க வைக்கும் மகத்தான பணியாக இருக்கும்போது, கூடுதலாக மற்ற பணிகளில் அவர்கள் ஈடுபடுவதை குறைக்கிறது. வீட்டில் இருக்கும் வயதானவர்களை பராமரிக்கும் பொறுப்பையும் பெண்கள்தான் ஏற்றுக் கொள்கிறார்கள். மேலைநாடுகளில் இந்த ‘சென்டிமென்ட்’ குறைவு. இந்தியக் குடும்ப கட்டுமானம், பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு மாபெரும் ஸ்பீட் பிரேக்கர். கல்லூரி முடித்து பணிக்குச் செல்லும் பெண் திருமணம் என்று வரும்போது தன்னுடைய பணியை இழக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. கணவருடைய குடும்பத்தாரின் விருப்பம், இடமாறுதல் உள்ளிட்டு ஒரு பெண் எதிர்நோக்கக்கூடிய இம்மாதிரி பிரச்சினைகள் ஆண்களுக்கு கொஞ்சமும் இல்லை.

அடுத்து, பாதுகாப்பு. பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்பட வாய்ப்பிருக்கும் பாலியல் சீண்டல்களின் காரணமாகவும் அவர்களே வேலைகளிலிருந்து விலகிக் கொள்கிறார்கள். ‘பெண்தானே?’ என்கிற ஆண்களின் இளக்கார மனோபாவம் இன்னமும் மாறாத சூழலையும் மறுப்பதற்கில்லை.ஒரு வரலாற்றுக் காரணமும் இருக்கிறது. இரண்டாம் உலகப்போர் நடந்த சமயத்தில் பெரும்பாலான நாடுகளில் ஆண்கள் போருக்கு போய்விட்டார்கள். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அப்போது தொழில்நிலையங்கள் முதற்கொண்டு அனைத்துப் பணிகளையும் பெண்களே செய்தார்கள். ஆணுக்கு சமமான ‘ஸ்கில்ட் லேபர்’களாக பெண்களும் பணியாற்ற முடியும் என்கிற உண்மையை உலகுக்கு உரத்துச் சொன்னார்கள். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் அந்நாடுகளின் உள்நாட்டு உற்பத்தி பெண்களையே சார்ந்திருந்தது. போர் முடிந்தபிறகும் கூட பெண்கள் ஒட்டுமொத்தமாக வேலையை விட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிவிடவில்லை. வாழையடி வாழையாய் அந்த மரபு இன்றும் அங்கெல்லாம் தொடர்கிறது.  துரதிருஷ்டவசமாக இந்தியாவில், இரண்டாம் உலகப்போர் அம்மாதிரியான சூழலை உருவாக்கவில்லை. உற்பத்தித்துறையில் பெண்கள் தங்கள் முழுத்திறமையை காட்டக்கூடிய வாய்ப்பை அவர்களுக்கு இன்னமும் நாம் வழங்கவுமில்லை.

இம்மாதிரி கலாச்சாரம், மரபு, குடும்பச்சூழல், பாதுகாப்பு என்று பல்வேறு காரணிகளும் பெண்களின் பணி பங்கேற்புக்கு முட்டுக்கட்டை போடுகின்றன.
பணிக்குச் செல்லாதவர்களை விடுவோம். பணிக்குச் செல்லும் பெண்களும் பலவிதத்தில் உடல்ரீதியாக, உளவியல்ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். அசோசாம் (The Associated Chambers of Commerce and Industry of India) சர்வே இதை வெளிப்படுத்துகிறது.பணிக்குச் செல்லும் பெண்களில் நான்கில் மூன்று பேர் குடும்பம் மற்றும் வேலை என்று இரண்டு சுமைகளும் அழுத்த உடல்நல பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். லைஃப்ஸ்டைல் நோய்கள் எனப்படும் தலைவலி, முதுகுவலி, கொழுப்பு, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதயநோய் இவர்களுக்கு தோன்றக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. கூடவே சேர்த்து குடும்பச்சுமையும்.குடும்பமோ, வேலையோ… ஆண்களைப் பொறுத்தவரை தங்களை ‘ரிலாக்ஸ்’ செய்துக்கொள்ள ஏகப்பட்ட பழக்கங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். அவை பெண்களுக்கு சரிபடாது என்பதால் பணிபுரிபவர்களில் ஆண்களைவிட பெண்கள் அதிகம்பாதிப்புக்குள்ளாகிறார்கள் .இந்தச் சூழலும் கூட பெண்களை பணிப்பொறுப்புகளிடமிருந்து தூரவிலக்கி வைக்கிறது.

தீர்வுகள் உண்டா?


அதைத்தான் அனைவரும் விவாதிக்க வேண்டும். ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும்.சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடப்பங்கீடு மூலம் நியாயம் வழங்குவதைப் போல, ஆண்-பெண் சமநிலையில் நம் சமூகம் பாரம்பரியமாக நடத்திவரும் வஞ்சனைக்கு நீதி செய்யவேண்டும். பெண்களுக்கு பாராளுமன்றத்தில் முப்பத்தி மூன்று சதவிகிதம் இடப்பங்கீடு என்கிற கொள்கை முடிவே இன்னும் நடப்புக்கு வரவில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு உள்ஒதுக்கீடு என்கிற எண்ணத்துக்கு நாம் தயாராகலாம் இல்லையா. அரசு மட்டுமின்றி தனியார் பங்களிப்போடு மட்டும்தான் இது சாத்தியமாகும்.அடுத்து பெண்களுக்கு பாதுகாப்பு என்கிற அம்சத்தில் அரசு கூடுதல் தீவிரம் காட்டியாக வேண்டிய நிலைமை இருக்கிறது. பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு இன்னமும் தண்டனைகள் முன்பிலும் கடுமையாக இருக்க வேண்டும்.

ஆண்களைப் போன்றே பெண்களும் பணிக்குச் சென்று வருவது என்பது இயல்பான நடவடிக்கையாக மாற வேண்டும்.நம் குடும்ப அமைப்பிலும் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. குடும்பப் பெரியவர்களை பராமரிப்பது, குழந்தைகளை கவனித்துக் கொள்வது ஆகியவற்றில் ஆண்களும் பெண்களின் பணியை பகிர்ந்துக் கொள்ளும் நிலை ஏற்பட வேண்டும். ஓரளவுக்கு நகர்ப்புறத்தில் உருவாகி இருக்கும் இக்கலாச்சாரம் கிராமங்களுக்கும் பரவவேண்டும்.பெண்ணுரிமை பேசும் அமைப்புகளும், தனிமனிதர்களும் இதற்கான நெருக்குதல்களை அரசுக்கும், சமூகத்துக்கும் உருவாக்க வேண்டிய கடமை கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவுக்கு இணையாக அனைத்திலும் ‘அப்டேட்’ ஆகிக்கொண்டிருக்கும் இந்தியா, ஆண்-பெண் சமத்துவப் பிரச்சினையை மட்டும் ஆறப்போட்டுக் கொண்டிருக்கலாமா?

யுவகிருஷ்ணா




Tags : LADIES , No VACANCY FOR LADIES?
× RELATED நர்சரி கார்டனில் தீ விபத்து