×

மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூபா டைவிங்

நன்றி குங்குமம் தோழி

 உலகில் மொத்தம் 15 சதவீத மக்கள் மாற்றுத்திறனாளிகளாக இருக்கின்றனர். அனைத்து முன்னேறிய நாடுகளும், தங்கள் ஒவ்வொரு கொள்கையிலும் மாற்றுத்திறனாளிகளைக் கருத்தில் கொண்டுதான் திட்டங்கள் அமைக்கின்றன. இந்தியாவில் லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் இருந்தும், அவர்களுக்காக வசதிகளை ஏற்படுத்தாமல், உண்மையில் அவர்களை டிஸெபிள்டாக வைத்திருப்பது நாம்தான். ஆனால் இந்த நிலையில் தனிப்பட்ட ஒரு அமைப்பினர், மாற்றுத்திறனாளிகளுக்கும் சாகச அனுபவத்தை வழங்கியுள்ளனர்.

சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ (YMCA)  நீச்சல் குளத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூபா டைவிங் பயிற்சி நடந்தது. டெம்பிள் அட்வென்சர்ஸ் உடன் இணைந்து ஏக்தா அறக்கட்டளை ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில், சுமார் 25 மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பங்கேற்பாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து, முதலில் பெண்களும் பின் ஆண்களும் தண்ணீருக்குள் இறங்கினர்.

அங்கு நீச்சல் குளத்திற்கு அருகிலேயே ஒரு மருத்துவரும் இருந்தார். நீருக்குள், முக்கிய பயிற்சியாளர் அரவிந்துடன், அவருடைய உதவி பயிற்சியாளர்கள் ஜான், நரேஷுடன் பெண் உதவியாளர் தீபிகாவும் இருந்தனர். பங்கேற்பாளர்களை நீருக்குள் இறக்க, மேலே தூக்க, உடை மாற்ற உதவிகள் செய்ய என உதவிக்காக தன்னார்வலர்கள் பலரும் உடனிருந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த நிகழ்வை பாதுகாப்பானதாக ஒருங்கிணைத்தனர்.

ஸ்கூபா டைவிங் மாற்றுத்திறனாளி களுக்கு ஒரு பாதுகாப்பான விளையாட்டு ஆகும். நிலத்தில் இவர்கள் சந்திக்கும் சவால்கள், தண்ணீருக்குள் காணாமல் போய்விடுகிறது. நிலத்தில் இவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால் நீருக்குள் இதுவரை பார்த்திராத சுதந்திரம் இவர்களுக்கு கிடைக்கும். அதனால்தான் பல மருத்துவர்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு ‘water therapy’ செய்துகொள்ள அறிவுறுத்துகின்றனர். நிலத்தில் மட்டும்தான் இவர்கள் டிஸெபிள்ட், நீருக்குள் கிடையாது.

இதில் முதலில் முன்வந்து ஸ்கூபா டைவிங் செய்ய தைரியமாக நீருக்குள் இறங்கிய திவ்யாவிடம் பேசினோம். திவ்யா ராஜேஷ் பிறக்கும் போதே முதுகுத் தண்டுவடத்தால் பாதிக்கப்பட்டவர். கால்கள் செயலிழந்த நிலையிலும், பொறியியல் படித்து அனைத்திலும் முதல் மாணவியாக தேர்ச்சிப் பெற்று, இப்போது சாஃப்ட்வேர் பொறியாளராக பணியாற்றுகிறார். ஸ்விம்மிங், வீல்சேர் ரேம்ப் வாக், வீல்சேர் மாரத்தான் என எப்போதும் பிஸியாக இயங்கி வரும் திவ்யா, இந்த ஸ்கூபா டைவிங் நிகழ்ச்சியில் முதல் ஆளாக ஆஜர் ஆனார். தன் கணவர் ராஜேஷ், குழந்தை தீரா புன்னகையுடன் வந்திருந்த திவ்யா பேசும்போது...

“தண்ணீருக்குள் இறங்கியதுமே ஒருவித சுதந்திரம் கிடைத்தது போல் இருந்தது. பயிற்சியாளர்கள் எங்கள் பக்கத்திலேயே இருந்தாலும் எங்களுக்கான ஸ்பேசை கொடுத்து பாதுகாப்பான தொலைவில் பின்தொடர்ந்தனர். பத்தடி ஆழம் வரை செல்லும் போது, நீருக்கடியில் யாருக்கும் தெரியாத ஒரு அமைதியான உலகத்தில் பயணிப்பது போல இருந்தது. நீருக்கடியில் சென்று தரையை தொட்டதும், ஏதோ பெரிய வெற்றி கிடைத்தது போல
சந்தோஷமாக இருந்தது” என்றார்.

அடுத்து நீருக்குள் இறங்கியது, ரூபா ராஜேந்திரன். இவர் எலும்பு வளர்ச்சி குறைபாடு உடையவர். ரூபாவிற்கு கை, கால்கள் இரண்டிலுமே பாதிப்பு இருந்தாலும், இப்போது இவர் ‘ஏற்றம்’ அறக்கட்டளையின் செயல்பாட்டாளராக இருக்கிறார். எவ்வளவு கடினமான செயலாக இருந்தாலும் முதலில் முயற்சி செய்து பார்ப்பதுதான் ரூபாவின் ஸ்பெஷாலிட்டி. எதையுமே முடியாது... கஷ்டம் என்று நிராகரிக்க மாட்டார்.

நண்பர்கள் தடுத்தாலும், ஒரு முறையாவது முயற்சி செய்து பார்த்துவிடுவார். அது போலதான் இந்த ஸ்கூபா டைவிங்கிலும் ஆர்வமாக கலந்துகொண்ட ரூபா, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி, அடுத்து நீருக்குள் இறங்க தயாராக இருந்தவர்களுக்கு தைரியத்தை கொடுத்தார். ரூபாவால் நீருக்குள் சுலபமாக கைகளில் சைகை செய்து பயிற்சியாளருடன் உரையாட முடியாததால், கண்களை சிமிட்டியும், தலையை ஆட்டியும் பேசியிருக்கிறார்.

முதலில் கொஞ்சம் சிரமப்பட்டாலும், எப்படி மூச்சை கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிந்ததும், அடுத்து பயிற்சியாளர் தானாக வந்து அவரை மேலே இழுக்கும் வரை நீருக்கடியில் உற்சாகமாக நீந்தியுள்ளார். நீச்சல் குளத்தில் தரையை தொட்டதும், அடுத்து கடலுக்குள் ஆழ்கடல் நீச்சல் செய்ய வேண்டும் என்ற ஆசை தொற்றிக்கொண்டதாக சொல்கிறார்.

அங்கு வந்திருந்தவர்களிலேயே உற்சாகமாக, மற்றவர்களை சியர் (cheer) செய்தபடி தன் குறும்புத்தனத்தால் அனைவரையும் சிரிக்கவைத்தபடி இருந்த நாகமஞ்சரி, நம் கவனத்தை ஈர்த்தார். 21 வயதான இவர், பிறக்கும் போதே  cerebral palsy எனப்படும் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு, பல உடலியக்க குறைபாடுகளை கடந்து வீல்சேர் கிரிக்கெட், ஃபேஷன் டிசைனிங் என்று எப்போதுமே ஆக்டிவாக இருப்பவர். அவரது அம்மாவிடம் பேசிய போது...

 ‘‘ஏக்தா அறக்கட்டளை உறுப்பினர்கள் பலர், நாக மஞ்சரி படித்த பள்ளியின் சீனியர்ஸ்தான். அதன் வழியாகத்தான் இவர்களின் தொடர்பு கிடைத்தது. நாக மஞ்சரி ரொம்பவே சுட்டி, பார்ப்பவர்களிடமெல்லாம் நட்புடன் பழகி அவர்களை இவள் நண்பர்களாக்கிக் கொள்வாள். அவளுக்கு ஒரு இடத்தில் சும்மா இருக்கவே பிடிக்காது.

வீல்சேர் கிரிக்கெட் விளையாடுவாள், டான்ஸ் ஆடவும் பிடிக்கும், ஃபேஷன் டிசைனிங் கூட செய்திருக்கிறாள். மஞ்சரிக்கு இது மூன்றாவது ஸ்கூபா டைவிங் அனுபவம். அவளுக்கு பயமே கிடையாது. எனக்குத்தான் ஒவ்வொரு முறையும் பயமா இருக்கும். இந்த ஸ்கூபா டைவிங் செய்த பிறகு, அடுத்த இரண்டு நாட்கள் அது பற்றி மட்டும்தான் பேசினாள். அவ்வளவு சந்தோஷம். இதற்காகவே அடிக்கடி மஞ்சரியை ஸ்கூபா டைவிங் செய்ய வைக்கலாம் என்று யோசிக்கிறோம்” என்கிறார்.

அடுத்ததாக தன் இசையால் பலரையும் ஈர்த்து, நீச்சல் குளத்திற்கு அருகிலேயே ஒரு குட்டி கான்செர்ட் செய்துகொண்டிருந்த ஜோதியின் தாயிடம் பேசினோம். ஜோதிக்கு மல்டிபில் டிஸெபிலிட்டி. பார்வை கிடையாது. புரிதல் திறனும் குறைவுதான். ஆனால் ஸ்காட்லேண்டில் இசை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, விமானத்திலிருந்து இறங்கி, நேராக இந்த நிகழ்ச்சிக்குதான் இருவரும் வந்திருந்தனர்.

‘‘முதலில் இந்த ஸ்கூபா டைவிங் பற்றி தெரிந்ததும், ஜோதியிடம் சொன்னேன். ஆனால் அவளுக்கு நீருக்குள் என்ன இருக்கும், எப்படியிருக்கும் என்றே புரியவில்லை. இருந்தாலும் அவளுக்கு அனைத்து அனுபவமும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கே அழைத்து வந்தேன். வெளியே அனைவருடனும் அரட்டை அடித்து, பாட்டு பாடிக்கொண்டிருந்த ஜோதி, நீருக்குள் இறங்கியதும் என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. ஆனால் பயிற்சியாளர் அவளுடன் ஒரு மணி நேரம் செலவு செய்து பொறுமையாக அனைத்தும் சொல்லிக்கொடுத்தார்.

அவளுக்கு தைரியம் சொல்ல, நானும் அவளுடன் நீருக்குள் இறங்கி தண்ணீருக்குள் எப்படி மூச்சை கட்டுப்படுத்த வேண்டும், வாயை திறக்கக் கூடாது என்று அருகிலிருந்து சொல்லிக்கொடுத்தேன். ஜோதிக்கு அவள் என்ன செய்கிறாள் என்று தெரியாமல் போனாலும், ஒரு தாயாக அவளுக்கு எல்லா சந்தோஷத்தையும் அனுபவத்தையும் கொடுக்க வேண்டும் என்பதே என் ஆசை” என்றார்.  

அரவிந்துதான் இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கும் சேர்த்து ஸ்கூபா டைவிங் பள்ளியை உருவாக்கிய முதல் பயிற்சியாளர். அவரிடம் பேசியதில், ‘‘ஸ்கூபா டைவிங் பயிற்சியின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கு ‘வாட்டர் தெரபி’ மூலம் ஏற்படும் பயன்கள் பற்றி தெரிந்துகொண்டேன், அதனால் டெம்பிள் அட்வென்சர்ஸ்  என்ற ஸ்கூபா டைவிங் பள்ளியை உருவாக்கும் போதே, அது டிஸெபிள்ட் ஃப்ரெண்ட்லியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்காக 300க்கும் அதிகமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளோம்.

நிகழ்ச்சிக்கு முன்னரே அவர்களுக்கு எந்த மாதிரியான பிரச்சனைகள் உள்ளன என்பதை அறிந்து, அவர்கள் ஸ்கூபா டைவிங் செய்யலாமா என்று உறுதி செய்த பின்னரே அவர்களை நீருக்குள் அனுமதிப்போம். ஸ்கூபா டைவிங் செய்ய, நீச்சல் அவசியமில்லை என்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கு இது ஒரு சிறந்த உடற்பயிற்சி.

வீல்சேர் பயன்பாட்டாளர்கள் பலருக்கும் தசைகளில் வலி இருக்கும், அவர்களுக்கு பாதுகாப்பான உடற்பயிற்சி தேவை. ஸ்கூபா டைவிங், ஸ்விம்மிங் போன்ற நீர் சார்ந்த விளையாட்டுகள், நீருக்குள் எடையை குறைத்து, அவர்கள் சுயமாக இயங்க உதவும். இது உடல் செயல்பாட்டை அதிகரித்து, உடலை சமநிலைப்படுத்தி உடலில் வலியை குறைத்து, வலிமை தரும்” என்றவர், மருத்துவர்களின் ஆலோசனையுடன் மாற்றுத்திறனாளிகள் ‘வாட்டர் தெரபி’ எடுத்துக்கொள்ள வலியுறுத்துகிறார்.  

இந்நிகழ்ச்சியை ஏக்தா அறக்கட்டளையைச் சேர்ந்த சதீஷ்குமார் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சி பெரும் வெற்றியாக முடிந்ததின் சந்தோஷத்தில் பேசிய சதீஷ் குமார், ‘‘இங்கு வந்த மாற்றுத்திறனாளிகளும் அவர்களது நண்பர்கள் குடும்பத்தினர் என அனைவருமே மகிழ்ச்சியுடன் திரும்பி சென்றனர். ஒரு வருடம் முன், நான் இதே போல ஒரு ஸ்கூபா டைவிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அது எனக்கு கட்டுக்கடங்காத சுதந்திரத்தையும், மகிழ்ச்சியையும் தந்தது. அந்த அனுபவத்தை என்னை போன்றவர்களுக்கும் தர வேண்டும் என்ற முயற்சியில்தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தேன்” என்றார்.  

ஏக்தா அறக்கட்டளை மாற்றுத் திறனாளிகளுக்காக, மாற்றுத் திறனாளிகளாலேயே இயக்கப்படும் பிரத்யேகமான அமைப்பு.  மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் ஏக்தா, விளையாட்டும் அவர்களின் முக்கிய உரிமையாக கருதுகிறது. அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்காக பாராலிம்பிக் (BOCCIA) விளையாட்டை உருவாக்கி, இந்தியாவிற்காக ஒரு டீமையும் ரெடி செய்திருக்கின்றனர்.

நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்புகையில், பங்கேற்பாளர்கள் அனைவரும் மனநிறைவுடன் சென்றனர். பலர், அடுத்த முறை இந்த நிகழ்ச்சி நடக்கும் போது தங்களுக்கு தெரிவிக்கும்படியும், சிலர் தங்களை கடலுக்கு அழைத்து செல்லும்படியும் கோரிக்கை விடுத்தனர் என்கிறார் இவர்.

ஸ்வேதா கண்ணன்

ஆ.வின்சென்ட் பால்


Tags : Alternatives, Scuba, Diving, Multiple Disability
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...