×

என்எம்எம்எஸ் திட்டத்தில் உதவித்தொகை வழங்காத மத்திய அரசு ஆண்டுதோறும் ஏமாற்றப்படும் அரசுப்பள்ளி மாணவர்கள்: பெற்றோர், ஆசிரியர்கள் அதிருப்தி

சிறப்பு செய்தி: தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தில் (NMMS), மத்திய அரசால் உதவித்தொகை வழங்கப்படாததால், ஒவ்ெவாரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஏமாற்றத்ைத சந்தித்து வருகின்றனர். நாடு முழுவதும் அரசு பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தடுக்கும் வகையில், தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சில பரிந்துரைகளை வழங்கியது. அதன்படி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு கல்வி உதவித்ெதாகை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (NMMS) அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி, 8ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள், 7ம் வகுப்பு முழு ஆண்டு தேர்வில் எஸ்சி., எஸ்டி பிரிவினர் 50 சதவீதமும், பிற வகுப்பினர் 55 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால், என்எம்எம்எஸ் தேர்வு எழுதலாம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் இடஒதுக்கீடு அடிப்படையில், உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 6,600 மாணவர்கள், இந்த உதவித்தொகைக்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களுக்கு, 9 முதல் 12ம் வகுப்பு வரை மாதம் ₹500 வீதம் கணக்கிடப்பட்டு, ஆண்டுக்கு ₹6 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். மொத்தமாக 4 ஆண்டுகளுக்கும் சேர்ந்து ₹24 ஆயிரம் ஒவ்வொரு மாணவர்களுக்கும் கிடைக்கும். ஆனால், தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, உதவித்தொகை முறையாக வந்து சேர்வதில்லை. ஆண்டுதோறும் இது தொடர்கதையாகி வருவதால், தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:  ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமான உதவித்தொகை திட்டமாக இத்திட்டம் கருதப்பட்டது. இதனால், ஒவ்வொரு பள்ளியிலும் அதிக மாணவர்களை விண்ணப்பிக்க ைவத்து, ஆசிரியர்கள் தேர்வுக்கு தயார்படுத்தினார்கள். குறிப்பாக, கிராமப்புறத்தை சேர்ந்த பெரும்பாலான மாணவர்களை தேர்வு எழுத வைத்தனர். மனத்திறன் தேர்வு, படிப்பறிவுத்திறன் தேர்வு என இரு பகுதிகளாக, மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. 6, 7, 8ம் வகுப்பு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது. ஏற்கனவே அவர்கள் படித்ததாக இருந்தாலும், மீண்டும் நினைவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதால், பல பள்ளிகளில் காலை, மாலை வேளைகளில் தனியாக சிறப்பு வகுப்புகளை ஆசிரியர்கள் நடத்தினர்.  ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் தேர்வு எழுதினாலும், 6,600 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்படும். தேர்வு செய்யப்படுபவர்களில் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள், வறுமை கோட்டிற்கு கீழுள்ளவர்கள், பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள், மாற்றுத்திறன் மாணவர்கள், விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் பிள்ளைகள் குறிப்பிட்ட சதவீதம் பேர் உள்ளனர்.

இவர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும்  உதவித்தொகை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. உதாரணமாக, கடந்த 2017-18ல் தேர்வு செய்யப்பட்டவர்கள், தற்போது 10ம் வகுப்பு படித்து வரும் நிலையில், இதுவரை ஒருமுறை கூட அவர்களுக்கு உதவித்தொகை வழங்கவில்லை. அவ்வப்போது, தேர்வு செய்யப்பட்ட மாணவர் விவரங்களை ஆன்லைனில் அப்டேட் செய்ய அதிகாரிகள் அறிவுறுத்துவார்கள். ஆசிரியர்களும், தங்களது பிள்ளைகளுக்கு உதவித்தொகை கிடைத்துவிடும் என்ற ஆவலில், அப்டேட் பணியில் ஈடுபடுவார்கள். ஆனால் அப்போதும் எந்தவித பலனும் இல்லாமல் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், இது மத்திய அரசு திட்டம் என நழுவுகின்றனர். பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் தான் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, இத்தேர்வினை எழுத மாணவர்களின் ஆர்வம் குறைந்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கான உதவித்தொகை முறையாக வழங்கப்பட்டால், 8ம் வகுப்பு பயிலும் போதே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும் என்ற எண்ணத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தலாம். இவ்வாறு அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.கடந்த 2017-18ல் தேர்வு செய்யப்பட்டவர்கள், தற்போது 10ம் வகுப்பு படித்து வரும் நிலையில், இதுவரை ஒருமுறை கூட அவர்களுக்கு உதவித்தொகை வழங்கவில்லை.

Tags : government school students ,government ,Teachers , federal government ,NMS program,Students, Parents ,Teachers
× RELATED ஈரோட்டில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி நாளை நிறைவு