சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராபர்ட் பயாஸ், 30 நாட்கள் பரோலில் வெளியே வந்தார். மகனின் திருமணத்தையடுத்து இந்த பரோல் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் கொட்டிவாக்கத்தில் ஒரு வழக்கறிஞர் வீட்டில் தங்கி உள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருபவர் ராபர்ட் பயாஸ். இவர் தனது மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளை செய்ய, ஒரு மாதம் பரோல் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு ஏற்கனவே விசாரணையின்போது, ராபர்ட் பயாஸ் மனு சிறைத்துறையின் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் அமர்வு முன்பு கடந்த 21ம் தேதி விசாரணைக்கு வந்தது.
வழக்கை நீதிபதிகள் விசாரித்து, ‘மகனின் திருமண ஏற்பட்டிருக்காக மனுதாரர் ராபர்ட் பயாசுக்கு, நவம்பர் 25 முதல் டிசம்பர் 24ம் தேதி வரை 30 நாட்கள் வரை பரோல் வழங்கப்படுகிறது. அவர் சட்ட விதிகளுக்குட்பட்டு நடந்து கொள்ள வேண்டும். இந்த நாட்களில் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கவோ, அரசியல் தலைவர்களை சந்திக்கவோ கூடாது. சிறை விதிகளை பின்பற்ற வேண்டும். அவர் நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள வழக்கறிஞர் சந்திரசேகர் வீட்டில் தங்கியிருக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.இந்நிலையில் இதற்கான உத்தரவு, புழல் தண்டனை சிறைக்கு நேற்று முன்தினம் இரவு வந்தது. இதையடுத்து, நேற்று காலை 10.10 மணியளவில் சிறையிலிருந்து ராபர்ட் பயாஸ் வெளியே வந்தார். ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பில் வேனில் அழைத்து செல்லப்பட்ட அவர், கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள வழக்கறிஞர் சந்திரசேகர் வீட்டுக்கு சென்றார்.